காப்புரிமை விலக்கு! | கொவைட் 19 தடுப்பூசி காப்புரிமை பற்றிய தலையங்கம்

 பிரிட்டனிலுள்ள கார்ன்வால் நகரில் கூடிய ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. கொவைட் 19 தடுப்பூசி மீதான காப்புரிமையை நீக்குமாறு இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பிடம் முன்வைத்த கோரிக்கைக்கு வலுசேர்த்திருக்கிறது ஜி-7 மாநாடு என்கிற அளவில்தான் அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 1975 - 76-இல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகள் இணைந்து உருவாக்கிய ஜி-7 என்கிற அமைப்பு இப்போது அதே அளவிலான வலுவுடன் திகழ்கிறதா என்பது சந்தேகம்தான். 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா போன்ற பல புதிய பொருளாதாரங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியான மிகப் பெரிய பொருளாதாரமாக சீனா உயர்ந்திருக்கிறது. 1999 முதல் ஜி-7-ஐவிட விசாலமான ஜி-20 நாடுகளின் அமைப்பு உருவாகிவிட்டது. இப்போது ஜி-7 எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டாலும்கூட, அதன் முக்கியத்துவத்தை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது.
 38 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைக் குடித்திருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் பின்னணியில் நடைபெற்ற ஜி-7 கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரை அந்த வல்லரசு நாடுகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டது இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்றுதான் கூற வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு ஒரு பில்லியன் (100 கோடி)தடுப்பூசிகள் இலவசமாக வழங்குவது என்றும், கொவைட் 19-ஐ எதிர்கொள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு 15% வரி விதிப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறது ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு.
 இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் முன்வைத்திருக்கும் தடுப்பூசிகள் மீதான காப்புரிமை விலக்கலுக்கு 120 நாடுகளின் ஆதரவு காணப்படுகிறது. அது மட்டுமே போதாது. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களான 164 நாடுகளும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முன்வந்தால்தான் காப்புரிமை விதிமுறைகளை மாற்றி அதற்கு வழிகோல முடியும்.
 அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த மாதம் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து, இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க முன்வந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும், ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் காப்புரிமை விலக்கு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும்கூட தயங்குகின்றன. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடத் தயங்குவதற்கும், அந்தத் துறையின் வருங்காலம் பாதிப்படையவும் காப்புரிமை தளர்வு வழிகோலும் என்பது அவர்களது அச்சம்.
 காப்புரிமை தளர்வு பெறுவதாலேயே பிரச்னை முடிந்துவிடாது. தடுப்பூசி மருந்து தயாரிப்பு என்பது மிக அதிக அளவிலான மூலதனம் தேவைப்படும் தொழில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காப்புரிமை தளர்வு வழங்கப்படுவதால், வளர்ந்து வரும் எல்லா நாடுகளும் தடுப்பூசித் தயாரிப்பில் இறங்கிவிடும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
 அது மட்டுமல்ல, காப்புரிமை தளர்வு என்பது வேறு. தொழில்நுட்ப உதவி வழங்குவது, தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களை பெறுவது, தயாரிப்பு கட்டமைப்பை உருவாக்குவது, தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு என்று எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன.
 உலக வர்த்தக அமைப்பின் ஒப்புதல் பெற்றாலும்கூட, நடைமுறை விதிமுறைகளை உருவாக்கி, தயாரிப்பு அனுமதி பெறுவதில் காலதாமதமாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, 1990-இல் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவத் தொடங்கியபோது இதேபோல காப்புரிமை விதிகள் தளர்த்தப்பட்டன. ஆனால், அனுமதி வழங்குவதற்கு 13 ஆண்டுகள் பிடித்தன.
 அமெரிக்கா, கொவைட் 19 தடுப்பூசிகளுக்கான அறிவுசார் காப்புரிமை விலக்கலுக்கு மட்டும்தான் ஆதரவு அளித்திருக்கிறது. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் முன்வைத்த கோரிக்கை தடுப்பூசிக்கானது மட்டுமல்ல, கொவைட் 19 தொடர்பான அனைத்து மருந்துகள், மருத்துவ முறைகள், தொழில் நுட்பம் எல்லாவற்றுக்கும் காப்புரிமை விலக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை ஜி-7 நாடுகளானாலும், ஜி-20 நாடுகளானாலும் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.
 உலகின் கடைசி மனிதன் வரை அனைவருக்கும் தடுப்பூசி போடப்படாத வரை கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று முடிவுக்கு வந்ததாகக் கருத முடியாது. உருமாற்றத்துடன் புதிய அலைகள் உருவாகுமே தவிர, தீநுண்மி தனது வீரியத்தை இழக்காது. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலில் கொள்ளை லாபம் அடைய விழைவது என்பது தற்கொலை முடிவாகத்தான் இருக்கும்.
 உலகிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்றால், சுமார் 10 முதல் 15 பில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும்; அதுவும் அதிக காலதாமதம் இல்லாமல். இப்போது இருக்கும் தடுப்பூசித் தயாரிப்பாளர்களால் ஈடுகொடுக்க முடியாது என்பது தெளிவு. அதனால், அவர்கள் பேராசைப்படுவது தவறு.
 காப்புரிமை விலக்கு வழங்குவதால் அந்தப் பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இழப்பை எதிர்கொள்ளப் போவதில்லை. தடுப்பூசி தயாரிப்பவர்களிடமிருந்து உரிமத் தொகை (ராயல்டி) கிடைக்கத்தான் போகிறது. கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் ஈவிரக்கமில்லாமல் அவர்கள் அடம் பிடிப்பது வேதனை அளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com