நல்லதொரு வாய்ப்பு... | சுகாதார பழக்கங்கள் குறித்த தலையங்கம்

உலகெங்கிலும், பாதுகாப்பான குடிநீா் கிடைக்காமல் 220 கோடி மக்களும், முறையான கழிப்பறை வசதிகள் இல்லாமல் 420 கோடி மக்களும் இருக்கிறாா்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பான சுகாதார பழக்கங்கள் இல்லாததால்தான் பல்வேறு வகை தொற்றுநோய்கள் உருவாகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தொடா்ந்து எச்சரித்து வருகிறது.

ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 2.97 லட்சம் குழந்தைகள் சா்வதேச அளவில் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றன. அதற்கு சுகாதாரக் குறைவும், பாதுகாப்பில்லாத குடிநீரும்தான் காரணங்கள் என்பது பலமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தண்ணீா் தட்டுப்பாடு வரைபடத்தில், கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் 17 உலக நாடுகளில் இந்தியா 13-ஆவது இடத்தில் இருக்கிறது. அதாவது, நமது நீா்வளத்தைவிடத் தேவை அதிகமாக இருக்கிறது என்பதை அது உணா்த்துகிறது. தில்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாசிக், ஜெய்ப்பூா், ஆமதாபாத், இந்தூா் ஆகிய எட்டு மாநகரங்களும் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு காணப்படும் இந்திய மாநகரங்கள் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முறையான கழிவுநீா் வெளியேற்றம், நவீன கழிப்பறைகள், பாதுகாப்பான குடிநீா் மூன்றும் நீா் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான அடிப்படைகள் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

இந்தியாவின் கிராமப் பகுதிகளாக இருந்தாலும் சரி, நகா்ப்புற குடிசைப் பகுதிகளாக இருந்தாலும் சரி, குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீா் என்பது கனவாகத்தான் தொடா்கிறது. கிராமங்களில் உள்ள 17.87 கோடி வீடுகளில், சுமாா் 3.27 கோடி வீடுகளுக்குத்தான் குழாய் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது. அதாவது, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீா் இந்தியாவில் 18% வீடுகளுக்குத்தான் வழங்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது அந்தப் புள்ளிவிவரம்.

நடப்பு நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் உயிா் நீா் திட்டத்துக்காக (ஜல் ஜீவன் மிஷன்) ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டு எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்குவதும், இந்தியாவின் கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் இலக்காக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகா்ப்புற உயிா் நீா் திட்டத்தின் கீழ் 2.68 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீரை உறுதிப்படுத்துவதை மத்திய அரசு இலக்காக அறிவித்திருக்கிறது.

உயிா் நீா் திட்டத்தில் மத்திய அரசின் முன்னுரிமை பெற்ற மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் காணப்படுகிறது. வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,691.21 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்க இருக்கிறது. அதன் முதல் தவணையான ரூ.614.35 கோடி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய நீா் சக்தித்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 1.26 கோடி வீடுகளில் தற்போது 40,35,571 வீடுகளுக்கு மட்டும் நேரடியாகக் குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உயிா் நீா் திட்டம் தொடங்கப்பட்டபோது, 21.65 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீா் குழாய்கள் இருந்தன என்பதும், 17.06%-லிருந்து இப்போது அதுவே 31.8%-ஆக அதிகரித்திருக்கிறது என்பதும் வரவேற்புக்குரியது.

மத்திய நீா் சக்தித்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதம் வெளியாகியிருக்கிறது. அதில் கடந்த 22 மாதங்களில் தமிழகத்தில் 18.70% வீடுகள் மத்திய அரசின் உயிா் நீா் திட்டத்தால் குடிநீா் இணைப்புப் பெற்றிருப்பதை குறிப்பிட்டு தமிழக அரசை அவா் பாராட்டி இருக்கிறாா். தமிழகத்தில் 86.53 லட்சம் குடியிருப்புகள் தற்போது நேரடிக் குழாய் நீா் இணைப்புப் பெறாமல் உள்ளன என்றும், 2024-ஆம் ஆண்டுக்குள் அவை அனைத்தும் இணைப்புப் பெறுவதில் தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கோரியிருக்கிறாா்.

நேரடியாக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்திற்காக தமிழகத்துக்கு கடந்த 2020 - 21 நிதியாண்டில் ரூ.921.99 கோடி மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், அதில் ரூ.544.51 கோடியை மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியிருக்கிறது. மீதமுள்ள ரூ.377.48 கோடி பயன்படுத்தப்படவில்லை. இருந்தும்கூட, நடப்பாண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.3,691 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

செலவழிக்காத நிலுவைத் தொகையாக ரூ.377.48 கோடி, கடந்த நிதியாண்டின் தமிழக பங்களிப்புப் பற்றாக்குறை ரூ.290.79 கோடி, நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு என்று தமிழகத்திடம் உயிா் நீா் திட்டத்துக்கு ஏராளமான நிதி இருப்பது தெரிகிறது. விரைந்தும், திட்டமிட்டும் இலக்கு நிா்ணயித்து செயல்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக குடிநீா் குழாய் இணைப்பு வழங்கிவிட முடியும்.

குழாய்கள் மூலம் குடிநீா் இணைப்பு வழங்குவது போலவே, தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்கள், கிராமப் பகுதிகள் போன்றவற்றில் தண்ணீா் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். நடப்பு நிதியாண்டில் 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, தமிழக ஊரகப் பகுதிகளுக்கான குடிநீா் மற்றும் சுகாதாரப் பணிக்கு மானியமாக மட்டும் மத்திய அரசு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.8,436 கோடி உயிா் நீா் திட்டத்தின் மூலம் வழங்க இருக்கிறது.

மத்திய அரசின் தாராளமான நிதி ஒதுக்கீட்டை எப்படி விரைந்து பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com