மோதலும் உறவும்...| சீனா உடனான இந்திய உறவு குறித்த தலையங்கம்

ஓராண்டுக்கு முன்னால் இந்தியாவின் லடாக் பகுதியில் நடந்த சீன ஊடுருவல் முயற்சி, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஓராண்டுக்கு முன்னால் இந்தியாவின் லடாக் பகுதியில் நடந்த சீன ஊடுருவல் முயற்சி, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்ட முயற்சித்த சீனப் படைகளை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் தடுத்து, வீரத்துடன் எதிர்கொண்ட நிகழ்வு மறக்கக்கூடியதல்ல. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்களை நாமும், சீன ராணுவத்தைச் சேர்ந்த 4 பேரை அவர்களும் லடாக்கின் 
கல்வான் தாக்குதலில் இழக்க நேர்ந்தது. 

சீனப் படையினரால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்ட 50 வீரர்கள் மூன்று நாள் இடைவெளியில் விடுவிக்கப்பட்டனர் என்றாலும், அன்றைய கோர சம்பவம் ஏற்படுத்திய ரணம் இன்னும்கூட ஆறவில்லை. எல்லையில் மோதல் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை பதற்றம் தொடர்கிறது என்பதும்.

சம்பவம் நடந்து 13 மாதங்கள் கடந்து விட்டன என்றாலும்,  லடாக் எல்லையில் உண்மையான நிலை என்ன என்பது குறித்த அதிகாரபூர்வத் தகவல் மத்திய அரசால் இதுவரை வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் அரசுத் தரப்பிலிருந்து எந்தவித அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. "யாரும் அத்துமீறி நுழையவும் இல்லை, இந்திய எல்லையை ஆக்கிரமிக்கவும் இல்லை' என்கிற பிரதமரின் உறுதிமொழியுடன் பிரச்னை குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பாதுகாப்பு குறித்த விவரங்கள் என்பதால் அதை யாரும் விவாதப் பொருளாக்கவில்லை. 
1975-க்குப் பிறகு, இந்திய - சீன எல்லையில் நமது ராணுவ வீரர்களின் உயிரிழப்பு நிகழவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப்புற பிரச்னையில் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு நிகழ்ந்தது. நல்லவேளையாக அந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையே போராக மாறவில்லை என்கிற அளவில் ஆறுதல். 

ஏப்ரல் 2020-இல் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவத்தினர், இன்னும்கூட பல இடங்களிலிருந்து விலகவில்லை என்று கூறப்படுகிறது. இமயமலையின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை சீனப் படையினர் கையகப்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய ராணுவமும் அதேபோல முக்கியமான பல பகுதிகளில் முகாம்கள் அமைத்துப் பாதுகாத்து வருகிறது என்கிற தகவலும் வெளிவருகிறது.

கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம் ஜாக் பகுதிகளில் முகாமிட்டிருப்பது சீனாவுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல டெப்த் சேங் சமவெளிப் பகுதியையும் சீனா கையகப்படுத்தியிருப்பதை விண்கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. பேங்காங் ஏரி, கைலாஷ் மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் இன்னும்கூட எந்தவித சமரசமும் ஏற்படாத நிலை தொடர்கிறது. சுமார் 50,000 முதல் 60,000 ராணுவ வீரர்களை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் குவித்து சீன ராணுவம் நுழைந்துவிடாமல்  பாதுகாக்கிறோம். 

வலிமை மிக்க சீன ராணுவத்தை எதிர்கொள்வதற்கான தொழில் நுட்பப் பின்புலத்தை பெறுவதற்காகத்தான் இந்தியா, அமெரிக்காவுடன் "குவாட்' ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இந்திய - சீன எல்லைப்புற சூழல் குறித்து கடந்த மாதம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டெனி பிளிங்கனுடன் விவாதித்திருக்கிறார். லடாக்கில் உள்ள இந்திய ராணுவத்துக்குப் பல விதத்திலும் அமெரிக்கத் தொழில் நுட்ப உதவி வழங்கப்படுகிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தொழில் நுட்ப ரீதியாக பலமாக இருக்கும் சீன ராணுவத்தை எதிர்கொள்ளும் அளவிலான "மல்டி டொமைன் ஆபரேஷன்' திட்டத்தை இந்திய ராணுவம் நடைமுறைப்படுத்த அமெரிக்கா உதவுகிறது. 

எல்லையில் பதற்றம் தொடர்கிறதே தவிர, கொள்ளை நோய்த்தொற்றால் பலவீனப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிராக சீனா ஆக்கிரமிப்பை அதிகரிக்கவோ, படையெடுப்பு முயற்சியில் ஈடு படவோ செய்யவில்லை என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதன் பின்னணியில் இருப்பது வணிக நோக்கம்தான் என்பதைப் புரிந்துகொண்டால் காரணம் விளங்கிவிடும். 

ஒருபுறம் "குவாட்' அமைப்பில் இணைவதும், எல்லை பிரச்னையில் சீனாவுக்கு பிடிகொடுக்காமல் இருப்பதும் இந்தியாவின் செயல்பாடாக இருந்தாலும், இன்னொருபுறம் வர்த்தக ரீதியாக சீனாவுடனான மோதலை இந்தியா தவிர்த்து வருகிறது. சீனாவின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது தடைகளையும் கட்டுப்பாடு
களையும் இந்தியா விதித்தாலும், சீனாவும் எதிர்வினை ஆற்றாமல்தான் இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

2020-21-இல் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியிருக்கிறது என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தக்கூடும். ஓராண்டுக்கு முன்னால் 10.4%-ஆக இருந்த சீனாவுடனான வர்த்தகம், இப்போது 13%-ஆக உயர்ந்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களையும், மருந்து உற்பத்திக்கான மூலக்கூறுகளையும் பெறுவதற்கு நாம் சீனாவைத்தான் நம்பியிருக்கிறோம்; சீனாவும் தனது வர்த்தக வாய்ப்பை இழப்பதற்குத் தயாராக இல்லை. 

கல்வான் பள்ளத்தாக்கில் காணப்படும் பதற்றமும் பேச்சுவார்த்தையும் போலவே, இந்திய - சீன உறவில் மோதலும் உறவும் தொடர்கிறது என்பதுதான் கசப்பான நிஜம். இது யாருக்கு தெரியுமோ இல்லையோ, அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் பிரதமர் மோடிக்கும் நன்கு தெரியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com