ந‌ல்​லது, நட‌க்​க‌ட்​டு‌ம்! | அரசியல் தீர்வு குறித்த தலையங்கம்

ஜம்மு - காஷ்மீரிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஜூன் 24-ஆம் தேதி  பேச்சுவார்த்தைக்கு பிரதமர் அழைத்திருப்பது மிக முக்கியமான திருப்பம்; சமயோசிதமான முடிவு என்றும் கூற வேண்டும். அவர்களும் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்புக்குரியது. காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

2018 ஜூன் மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது முதலே, ஜம்மு - காஷ்மீரில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்த மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, மாநிலம் பிரிக்கப்பட்டபோது அது எதிர்பாராத அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. 

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான அரசியல் சாசனப் பிரிவு 370, ஆரம்பம் முதலே அன்றைய சட்ட அமைச்சர் பாபா சாஹேப் அம்பேத்கர் உள்ளிட்ட பலராலும் எதிர்க்கப்பட்ட சட்டப்பிரிவு என்பதுதான் உண்மை. அந்த மாநிலத்துக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் இந்திய அரசுக்கு அங்கு எந்த உரிமையும் கிடையாது என்கிற அளவிலான சட்டப்பிரிவு 370, தொடக்கம் முதலே விவாதத்துக்குரியதாகத்தான்  இருந்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி அரசு அதை அகற்றியதும் விவாதத்துக்குள்ளாகி இருப்பதில் வியப்பில்லை. 

2019 ஆகஸ்டில் மத்திய அரசு சட்டப்பிரிவு 370-ஐ அகற்றியதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்; தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது; அரசியல் நடவடிக்கைகளும் எதிர்ப்புகளும் முடக்கப்பட்டன. அதன் காரணமாக அந்த மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளும் தலைவர்களும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது கடுமையான எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மை. 

கடந்த இரண்டு ஆண்டுகளில், படிப்படியாக அரசியல் தலைவர்கள் பலர், வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது; துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓரளவுக்கு அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. 

என்றாலும்கூட, அந்த மாநிலத்தின் பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாத நிலைதான் காணப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் உருவாக்கியிருக்கும் குப்கர் கூட்டணியில் பிரதமரின் அழைப்பை ஏற்பதில் கருத்தொற்றுமை இல்லாமல் இருந்தது.

பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்த தெளிவு கிடைத்த பிறகுதான், அழைப்பை ஏற்பதா, வேண்டாமா என்கிற முடிவை எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தன. 

அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கு குப்கர் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பாக பிரதமரின் அழைப்பு அமைந்திருக்கிறது. பிரதமர் உள்ளிட்ட அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேருக்கு நேர் சந்தித்து விவாதிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் புதுதில்லி என்ன நினைக்கிறது என்பதை அவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், தங்களுடைய வருத்தங்களையும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதிகளையும் நேருக்கு நேர் எடுத்துரைக்கக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

பஞ்சாயத்து தேர்தலில் பங்கு பெற்றதும் இந்தியாவிலேயே அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்ததும் எந்த அளவுக்கு இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்கிற ஆர்வத்துடன் காஷ்மீர மக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகார வர்க்கத்தின் கீழ் இயங்கும் ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்திருக்கின்றன. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க யாருமில்லாத நிலையில், அந்த இடத்தைத் தீவிரவாத அமைப்புகள் கைப்பற்ற நினைக்கின்றன. 

எல்லை கடந்த பயங்கரவாதம் பெருமளவில் குறைந்துவிட்டிருப்பதால், இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கும் முயற்சிகளும் பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்திருக்கின்றன. கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு, மக்கள் மத்தியில் இந்திய ராணுவத்துக்கு எதிராகக் காணப்பட்ட மனநிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு அரசியல் செயல்பாடுகளுக்கு வழிகோலும் முயற்சியில் இறங்கியிருக்கிறது எனலாம். 

கடந்த 2020 மார்ச் 6-ஆம் தேதி அமைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு  மீண்டும் ஓர் ஆண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் பிரதமரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடிவெடுத்திருப்பது புத்திசாலித்தனமான அரசியல் அணுகுமுறை. 

அதன் முடிவு சாதகமா, பாதகமா என்பதல்ல பிரச்னை. அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபடாமல் போனால் அது 
காஷ்மீர மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமலிருக்கும் அரசியல் தவறாக முடியக்கூடும். 

காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் வந்தால் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பிரதமர் வழங்கியிருக்கிறார். அதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள கட்சிகளின் தீர்வுக்கான அடிப்படை நிபந்தனை. அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான தொகுதி சீரமைப்பும் நேர்மையான தேர்தலும் ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தீர்வு காண்பதற்கான பாதைகளாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com