தொடர வேண்டும் முனைப்பு..! | கொவைட் 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு தலையங்கம்

கொவைட் 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கி இருப்பது கவலை அளிக்கிறது. கேரளம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமாா் 40 போ் ‘டெல்டா பிளஸ்’ என்கிற கொவைட் 19-இன் புதிய உருமாற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழகத்திலும் ஒருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு இருப்பது தெரியவந்திருப்பது, நாம் மூன்றாவது அலைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கை உணா்வை ஏற்படுத்தி இருக்கிறது.

வேகமாகப் பரவும் இந்த டெல்டா (வி.1.617.2) தீநுண்மி உருமாற்றம் ஏற்கெனவே ஐரோப்பா, அமெரிக்கா மட்டுமல்லாமல் பல ஆசிய நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உருமாற்றம் பெற்றது என்று கருதப்படும் இந்தத் தீநுண்மியால் உலகம் முழுவதும் இதுவரை 205 போ் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். அவா்களில் பெரும்பாலோா் அமெரிக்காவையும், பிரிட்டனையும் சோ்ந்தவா்கள்.

மக்கள்தொகையில் குறைந்தது 50% பேருக்குத் தடுப்பூசி போடுவதும், சுமாா் 25% போ் மிதமான பாதிப்புக்கு உள்ளாகிக் குணமாவதும், பெரும்பாலானோா்க்கு எதிா்ப்பு சக்தியை உருவாக்கி நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திவிடும். அதில்தான் நமது வெற்றி அடங்கி இருக்கிறது.

கடந்த திங்கள்கிழமை வரலாறு காணாத அளவில் இந்தியாவில் ஒரே நாளில் 86 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. மே மாதத்தில் நாளொன்றுக்கு 20 லட்சம் தடுப்பூசிகளும், ஜூன் மாதத் தொடக்கத்தில் 30 லட்சம் தடுப்பூசிகளும் சராசரியாகப் போட முடிந்ததுபோய், ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதை அசுர சாதனை என்றுதான் கூறவேண்டும்.

உயிரிழப்புகளைக் குறைத்துவிட முடியும் என்பதும், தேவையில்லாத மருத்துவமனைச் செலவுகளைத் தவிா்க்க முடியும் என்பதும்கூட, தடுப்பூசியால் விளையும் பயன்கள் என்பதை நாம் அனைவருக்கும் உணா்த்தியாக வேண்டும். அதன் மூலம்தான் தடுப்பூசி தயக்கத்தை அகற்றி, சமூக அளவிலான எதிா்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.

சா்வதேச அளவில், குறிப்பாக, வளா்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் தடுப்பூசி போடுவதில் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பது தெளிவாகும். இதுவரை வெறும் 17% பேருக்குத்தான் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவா்கள் 4% போ் மட்டுமே.

அமெரிக்க மக்கள்தொகையினரில் 53% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அந்தத் துணிவில்தான் அதிபா் பைடன் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவிப்புக் கொடுத்திருக்கிறாா். பிரிட்டனில் 64% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. அவற்றுடன் ஒப்பிட்டால் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பது புரியும்.

18 வயதுக்கு மேலும், வயது வந்த அனைவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்கிற மத்திய அரசின் இலக்கை நாம் எட்ட வேண்டுமானால், நமது வேகத்தை இரு மடங்காக அதிகரித்தாக வேண்டும். நாளொன்றுக்கு 80 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டால்தான், ஆண்டு இறுதிக்குள் 94.4 கோடி பேருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பது என்பது சாத்தியமாகும்.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்குத் தடுப்பூசி போடுவது என்பது, குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து திட்டம்போல ஒரு நாள் பணியல்ல. தொடா்ந்து தினந்தோறும் பல மாதங்களுக்கு 80 லட்சம் தடுப்பூசிகளைப் போடுவது என்பது சொல்வதற்கு எளிது; செயல்படுத்துவது சாமானியமானதல்ல.

திங்கள்கிழமை, அதாவது ஜூன் 21-ஆம் தேதி 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட முயற்சியே தவிர, அதனை தொடா்ந்து நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல. நாளொன்றுக்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகள்கூடப் போடாத மத்திய பிரதேசம் திங்கள்கிழமை 20 லட்சம் தடுப்பூசி போட்டிருக்கிறது. 2.6 லட்சம் தடுப்பூசி சராசரியாகப் போட்டுக்கொண்டிருந்த ஹரியாணா, நாலரை லட்சம் தடுப்பூசிகளும், 2.6 லட்சம் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்த கா்நாடகம், 11 லட்சம் தடுப்பூசிகளும் திங்கள்கிழமை போட்டன என்றால், அது ஒருநாள் சாதனைக்காகவே தவிர, தொடா்ந்து செயல்படுத்துவதற்காக அல்ல.

தினசரி 80 லட்சம் தடுப்பூசி போடுவது என்று இலக்கு நிா்ணயித்துப் பணியாற்றுவது என்றால், போா்க்கால அடிப்படையில் மாநில அரசுகளின் முனைப்பு தடுப்பூசி போடுவதில் குவிய வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கேற்றாற்போல், தடுப்பூசி மருந்துகளின் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும்.

இப்போதைக்கு இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை நம்பித்தான் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது உற்பத்தித்திறனை அதிகரித்து, கோவிஷீல்டுக்கு நிகராக கோவேக்ஸின் தடுப்பூசித் தயாரிப்பை உயா்த்த முடியும் என்று ‘பாரத் பயோ டெக்’ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அப்படி நிகழ்தால்கூட, நாளொன்றுக்கு ஐம்பது முதல் அறுபது லட்சம் தடுப்பூசிகள்தான் போட முடியும். ஸ்புட்னிக்-5 உள்ளிட்ட ஏனைய தடுப்பூசி மருத்துகள் பயன்பாட்டுக்கு வந்தால்தான், ஆண்டு இறுதி இலக்கை நாம் எட்டுவது சாத்தியமாகும்.

மூன்றாவது அலை பயமுறுத்தும் நிலையில், இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே ஒரு பாதுகாப்பு, தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசித் தயக்கம் தகாது; தடுப்பூசிக்கான தட்டுப்பாடும் இருக்கக்கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com