அமைதிக்கான அறிகுறி! | காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமரின் சந்திப்பு குறித்த தலையங்கம்

கருத்தொற்றுமை ஏற்பட்டு அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதால்தான் ஜம்மு விமானப் படைத்தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு அறிகுறியாக அதைக் கருத வேண்டும்.


ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்புவதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அங்குள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 14 முக்கிய தலைவர்கள் பிரதமரின் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். கருத்தொற்றுமை ஏற்பட்டு அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதால்தான் ஜம்மு விமானப் படைத்தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு அறிகுறியாக அதைக் கருத வேண்டும்.

கடந்த 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அகற்றியது. முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. படிப்படியாக பல தளர்வுகளை அறிவித்தது. இப்போது மீண்டும் அரசியல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கையை இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுத்திருக்கிறது.

அரசும் சரி, ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்களும் சரி, கடந்த வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை என்பதும், ஒருவர் மீது ஒருவர் வசை பாடாமல் வெளிப்படையான பேச்சுவார்த்தையாக அமைந்தது என்பதும் ஆரோக்கியமான திருப்பம். பேச்சுவார்த்தையில் எந்தவித திட்டவட்ட முடிவோ, அறிவிப்போ இல்லை என்றாலும்கூட, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடைபட்டுக் கிடக்கும் அரசியல் நடவடிக்கைகளை மீட்டெடுப்பதில் அனைவருமே ஒத்தக் கருத்துடன் இருக்கிறார்கள்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), குலாம் நபி ஆஸாத் (காங்கிரஸ்), மெஹபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி) உள்ளிட்ட 14 பேர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஜம்மு - காஷ்மீரின் அரசியல் தலைமையை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வழிமொழிந்த பிரதமர், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் விருப்பங்களும் நிறைவேறும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

மத்திய அரசால் அகற்றப்பட்ட அரசியல் சட்டப் பிரிவு 370-ம், 35 ஏ-யும் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பது அந்த தலைவர்களின் கருத்தாக இருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதை அவர்கள் வலியுறுத்தி நிபந்தனையாக்கவில்லை. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, சட்டப்பேரவை தேர்தல் மூலம் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது, காஷ்மீரிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட பண்டிட்டுகளுக்குப் புனர்வாழ்வு வழங்குவது, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பது உள்ளிட்ட அவர்களது பல கோரிக்கைகளை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 

ஜம்மு - காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலும், மாவட்ட வளர்ச்சிக் குழுக்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் முதல் தொலைத்தொடர்பு வசதிகள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சட்டப்பேரவைக்கான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்பு அவசியம் என்பதை மத்திய அரசு உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் இந்தக் கூட்டம்.

சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னால், தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டாக வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் காஷ்மீர் பள்ளத்தாக்கு 16%, ஜம்மு 25% நிலப்பரப்பை உள்ளடக்கியவை என்றால், மீதமுள்ள 59% நிலப்பரப்பு லடாக்கில் அமைந்திருக்கிறது. லடாக் இப்போது தனி பகுதியாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. 

எல்லைப்புறப் பாதுகாப்புக்காக லடாக் பகுதி மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பது அவசியம். அதை உணர்ந்து, அந்தப் பகுதி பிரிக்கப்பட்டிருப்பது குறித்து எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேச்சுவார்த்கைக்கு வந்த கட்சிகள் தொகுதி மறுசீரமைப்பை முற்றிலுமாக எதிர்க்கவில்லை என்றாலும், அவர்களுடைய ஒப்புதலும், பங்கேற்பும் இல்லாமல், மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது. தொகுதி மறுசீரமைப்பு இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்பதை பேச்சுவார்த்தை உணர்த்துகிறது. 

16% நிலப்பரப்பு உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்கள்தொகை 53 லட்சம் என்றால், 25% நிலப்பரப்பு உள்ள ஜம்முவின் மக்கள் தொகை 69 லட்சம். ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு சட்டப்பேரவையில் 47 இடங்களையும், ஜம்முவும் லடாக்கும் இணைந்து 43 இடங்களையும்தான் பெற்றிருந்தன. அதனால்தான் மறுசீரமைப்பின் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஊழலில்லாத நிர்வாகம் வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டுமானால், இவை மட்டுமே போதாது. பிரதமர் கூறியிருப்பதுபோல, தில்லிக்கும், ஸ்ரீநகருக்கும் இடையேயான தூரமும், மனங்களுக்கு இடையேயான தூரமும் குறைந்தாக வேண்டும்.

மத்திய அரசின் மீதான சந்தேகமும் நம்பிக்கையின்மையும்தான் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனவே தவிர, வறுமையும் வேலையின்மையும் மட்டுமே அதற்கான காரணங்கள் அல்ல என்பதை மத்திய அரசும் உணராமல் இல்லை. பிரதமர் அதைத்தான் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். 

மத்திய அரசும், காஷ்மீர் மாநிலத்திலுள்ள கட்சிகளும் அமைதியை மீட்டெடுப்பதற்கு ஒருங்கிணைய முற்பட்டிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். தொடர வேண்டும் இந்த அணுகுமுறை; அதன் விளைவாக மலர வேண்டும் காஷ்மீரில் அமைதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com