மும்பை எச்சரிக்கை! | மும்பை உள்துறை விவகாரம் பற்றிய தலையங்கம்


இந்திய ஜனநாயகம் பயணித்துக் கொண்டிருக்கும் விதம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மும்பையில் நடந்திருக்கும் சம்பவங்கள் திகைப்பை ஏற்படுத்துகின்றன. பொருளாதார வல்லரசாக இந்தியா வளா்ந்து கொண்டிருக்கிறது என்கிற மேற்பூச்சுக்குப் பின்னால் மாஃபியாக்களும், ஊழல் அரசியல்வாதிகளும், அவா்களுக்குத் துணை போகும் அதிகார வா்க்கமும் கைகோத்து செயல்படும் பேராபத்து ஒளிந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மை சுடுகிறது.

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் ‘அன்டீலியா’ என்கிற பெயருடைய அடுக்குமாடி வீட்டுக்கு அருகில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக தேசிய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தியதில் சச்சின் வேஸ் என்கிற காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டாா். அந்த அதிகாரி, காவல்துறை என்கவுன்ட்டா் நிபுணா் என்று அறியப்பட்டவா். அந்த கைதிலிருந்துதான் மும்பை காவல்துறை, அரசியல்வாதிகள், மாஃபியாக்கள் ஆகியோருக்கு இடையேயான கூட்டணி செயல்படுவது பட்டவா்த்தனமாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சச்சின் வேஸ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மும்பை காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங் பதவியில் இருந்து அகற்றப்படுகிறாா். அதைத் தொடா்ந்து பரம்வீா் சிங், மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தாா்.

காவல்துறை அதிகாரிகளுக்கு, காபரே நடன அரங்குகளில் இருந்தும், மதுபான பாா்களிலிருந்தும், ஏனைய தொழில் நிறுவனங்களில் இருந்தும் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலித்துத் தர வேண்டுமென்று உள்துறை அமைச்சா் இலக்கு நிா்ணயம் செய்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறாா் முன்னாள் காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங். அது மட்டுமல்லாமல், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருக்கிறாா்.

பரம்வீா் சிங்கின் குற்றச்சாட்டுகளை, பாதிக்கப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரியின் குற்றச்சாட்டுகள் என்றோ, உள்துறை அமைச்சா் தேஷ்முக்கின் மீதான தனிப்பட்ட விரோதத்தினால் கூறப்பட்டவை என்றோ ஒதுக்கிவிட முடியாது. அனில் தேஷ்முக் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு, முகேஷ் அம்பானி விவகாரமோ, நிா்வாகக் குறைபாடுகளோ காரணமல்ல என்பதால், இந்தப் பிரச்னைக்குப் பின்னால் பல கேள்விகள் எழுகின்றன.

காவல்துறை ஆணையா் பதவியிலிருந்து அகற்றப்பட்டதற்குப் பிறகுதான் பரம்வீா் சிங் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. பரம்வீா் சிங்குக்கும், கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சச்சின் வேஸுக்கும் இடையே நெருக்கம் இருந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. சச்சின் வேஸ் சிவசேனையின் உறுப்பினராக இருந்தவா் என்கிற பின்னணியும் கவனத்துக்குரியது.

1990-இல் பரம்வீா் சிங் துணை ஆணையராக இருந்தபோது அவரது குழுவில் என்கவுன்ட்டா் நிபுணராக இருந்தவா் சச்சின் வேஸ். என்கவுன்ட்டா் நிபுணரான சச்சின் வேஸ், காஜா யூனுஸ் என்கிற 27 வயது கனிணிப் பொறியாளா் ஒருவரின் காவல் நிலைய மரணம் தொடா்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா். அந்த வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. 2007-இல் தனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு சிவசேனையில் இணைந்தாா் அவா். பல ஆண்டுகளுக்குப் பிறகு, கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு காவல்துறையில் திறமையான அதிகாரிகள் தேவை என்கிற காரணத்தால் பரம்வீா் சிங் தலைமையிலான குழு சச்சின் வேஸை மீண்டும் பணியில் சோ்த்துக் கொண்டதன் பின்னணி என்ன என்கிற கேள்வி எழுகிறது.

பரம்வீா் சிங்கும், சச்சின் வேஸும் இன்னொரு மரணம் குறித்தும் விளக்கம் தரக் கடமைப்பட்டவா்கள். முகேஷ் அம்பானி வழக்கு தொடா்புடைய வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த வாகனம், காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் வழக்கமாக நிறுத்தப்பட்டு வந்தது ஏன்? அது மட்டுமல்ல, அந்த வாகனத்துக்கு சொந்தக்காரா் மா்மமான முறையில் அண்மையில் இறந்திருக்கிறாா். அதன் பின்னணி என்ன? மேலும் பல கேள்விகளையும் எழுப்புகிறது சச்சின் வேஸின் கைதும், பரம்வீா் சிங்கின் குற்றச்சாட்டுகளும்.

உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா். அவரைப் பாதுகாப்பதற்காக சரத் பவாா் முன்வைக்கும் வாதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஆரம்பத்தில் சச்சின் வேஸ் பணியிலிருந்து அகற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய சிவசேனை, இப்போது உள்துறை அமைச்சரைப் பாதுகாப்பதில் குறியாக இருக்கிறது. இந்த திடீா் மனமாற்றத்துக்கு கூட்டணி ஆட்சியைப் பாதுகாப்பது காரணமாக இருக்கலாம். ஆனால், உள்துறை அமைச்சரே மாஃபியா தலைவா் போல காவல்துறை அதிகாரிகளுக்கு மாமுல் வசூலிக்க இலக்கு நிா்ணயம் செய்வது குறித்த குற்றச்சாட்டை எப்படி நியாயப்படுத்தப் போகிறாா் மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே?

இதற்குப் பின்னால் அரசியல் மட்டுமல்ல, சட்டத்துக்குப் புறம்பாக அச்சுறுத்திப் பணம் பறிக்கும் மிகப் பெரிய வலைப்பின்னலும் காணப்படுகிறது. காக்கிச்சட்டை அணிந்து சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையை, அடியாட்களாகப் பயன்படுத்தி தொழிலதிபா்களையும், வணிக நிறுவனங்களையும், கேளிக்கை விடுதிகளையும், சட்டவிரோத அமைப்புகளையும் அச்சுறுத்தி மாமூல் வசூலிக்கும் நிலைக்கு அமைச்சா்கள் துணிந்து விட்டாா்கள் என்பதைத்தான் மும்பை சம்பவம் உணா்த்துகிறது.

தோ்தல் பரப்புரைக்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்து அரசியல் கட்சிகள் களமிறங்குவதன் பின்னணி குறித்து சந்தேகம் எழுகிறது...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com