இந்தியா ஒளிர்கிறது! | இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வெற்றி குறித்த தலையங்கம்

 வரலாற்று சாதனை படைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. உலக கிரிக்கெட்டை இதுவரை ஆண்டுகொண்டிருந்த மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா போன்ற அணியினருக்கு நிகராக இந்தியா உயர்ந்திருக்கிறது என்கிற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியிருப்பதிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வெற்றி எத்தகையது என்பதை புரிந்துகொள்ளலாம்.
 எந்தவொரு அணியின் திறமையையும் நிர்ணயிக்கும் அளவுகோல், அந்த அணி சோதனைகளுக்கு இடையில் எப்படி சாதனை புரிகிறது என்பதுதான். அந்த அளவுகோல்படி பார்த்தால், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்திலும்கூட இந்திய கிரிக்கெட் அணியால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றியடைய முடிந்திருக்கிறது என்பது அசாதாரணமான சாதனை.
 பல மாதங்களாக "பயோ-பபுல்' எனப்படும் பாதுகாப்பு வளையத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய ஐபிஎல் போட்டியில் தொடங்கி இப்போது முடிந்திருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி வரை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் அவர்கள் இயங்கி வந்திருக்கின்றனர். இந்த நிலையிலும் கொஞ்சம்கூட சோர்வோ, மனத்தளர்ச்சியோ இல்லாமல் அவர்களால் விளையாட முடிந்திருக்கிறது என்பதும், தொடர்ந்து வெற்றிவாகை சூட முடிந்திருக்கிறது என்பதும் இந்திய கிரிக்கெட் அணியின் வல்லமையை எடுத்தியம்புகின்றன.
 இந்திய அணி தொடர் வெற்றி அடைந்திருப்பதில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 பந்தியத்திலும், டெஸ்ட் பந்தயத்திலும், இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் பந்தயம், டி20 பந்தயம், டெஸ்ட் பந்தயம் என்கிற மூன்று விதமான கிரிக்கெட் பந்தயங்களிலும் இந்தியா விளையாடி வெற்றியடைந்திருக்கிறது என்பதுதான் அந்த தனிச்சிறப்பு.
 ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலுமாக நடந்த ஆறு கிரிக்கெட் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் இந்தியா வென்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் பந்தயத்திலும், டி20 பந்தயத்திலும் வெற்றி பெற்றது என்றால், இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் பந்தயம், டி20, ஒரு நாள் கிரிக்கெட் பந்தயங்களிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்திருக்கிறது. ஜோ ரூட்டின் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிராக 3:1 வெற்றியை டெஸ்ட் பந்தயத்தில் அடைந்திருப்பதன் மூலமாக, ஜூன் 18-ஆம் தேதி செளதாம்டனில் நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றில், நியூஸிலாந்துக்கு எதிராக போட்டியிடும் தகுதியையும் இந்தியா அடைந்திருக்கிறது.
 இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள இன்னொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒரு நாள் பந்தயங்களில் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீரர்கள் பலர் விளையாடவில்லை. அதையும் மீறி ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக இந்தியா பல போட்டிகளில் வெற்றியடைய முடிந்திருக்கிறது.
 ஏறத்தாழ 12-க்கும் அதிகமான புதுமுகங்களை களமிறக்கியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து சர்வசாதாரணமாக அந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கத்தில் விளையாடி, தங்களை அடையாளம் காட்டியது என்பது உலகையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. எந்தவித அச்சமோ, தயக்கமோ இல்லாமல் சர்வதேச விளையாட்டுக்குத் தயாராக இளம் விளையாட்டு வீரர்கள் உருவாகியிருப்பது, இந்தியாவின் வருங்கால கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது. இதற்கு லலித் மோடி அறிமுகப்படுத்திய ஐபிஎல் போட்டிகள்தான் காரணம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
 இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ், கிருனால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் பந்தயங்களிலும் அடையாளம் காணப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க விளையாட்டு வீரர்கள். தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன், இங்கிலாந்து அணியின் வேகத்தை தடுத்து நிறுத்தி, இந்தியாவின் வெற்றிக்கு வழிகோலியதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ரிஷப் பந்த், பாண்டியா சகோதரர்கள் ஆகியோரின் விளையாட்டுத் திறமை குறித்து பாராட்டுகள் குவிகின்றன.
 இந்திய அணி ஆரம்பத்தில் மெதுவாகவும், நான்காவது ஆட்டக்காரர்களில் இருந்து தொடங்கி தீவிரமாகவும் ரன்களை எடுக்கும் பழைமைவாதிகள் என்கிற நிலைமை மாறி, தொடக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக ஆடக்கூடிய அணியாக மாறியிருப்பது சமீபகாலத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றம். தனது அணுகுமுறையையும், உத்திகளையும் சமயத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளும் புதிய போக்கை ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
 இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா ஆகியோர் டி20, ஒருநாள் கிரிக்கெட் பந்தயங்களில் முக்கியமான மூத்த வீரர்கள் இல்லாத குறையே தெரியாமல் இந்திய அணிக்கு வலுசேர்த்தார்கள் என்பதும், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணிக்கு புது உத்வேகம் வழங்கியிருக்கிறார்கள் என்பதும் உரக்க ஒலிக்கும் செய்திகள்.
 சுழல் பந்துக்காரர்களை மட்டுமே நம்பியிருந்த இந்திய கிரிக்கெட் அணி, இப்போது வேகப்பந்து வீச்சாளர்களின் அணியாக மாறியிருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிரான இந்திய அணியின் சாதனை வெற்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com