மருத்துவம் சேவையா? வணிகமா? | மருத்துவக் கட்டமைப்பு குறித்த தலையங்கம்


நிலைமை கைமீறிப் போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது கொள்ளை நோய்த்தொற்றின் அதிகரித்த வேகமும், அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் நமது மருத்துவக் கட்டமைப்பும். அகில இந்திய அளவில் நேற்றைய நிலையில் 3,82,315 புதிய பாதிப்புகளும், 3,780 உயிரிழப்புகளும் காணப்படுகின்றன. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஒரு மிகப் பெரிய சுகாதார அவசரநிலை இந்தியாவில் உருவாகியிருக்கிறதோ என்கிற சந்தேகம் மேலும் மேலும் உறுதியாகி வருகிறது. 

நாளை தமிழக முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதுபோல, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றினால் ஒழிய இதற்குத் தீர்வில்லை. நோய்த்தொற்றுப் பரவாமல் தடுப்பதும், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களை காப்பதும் இரண்டு உடனடி குறிக்கோள்கள் என்று அவர் அறிவித்திருக்கிறார். அவர் கூறுவதுபோல நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுப்பதில் மக்களும் அரசுடன் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே நோய்த்தொற்று கட்டுக்குள் அடங்கும்.

மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக பிராணவாயு தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைமையில் அரசு மருத்துவமனைகளே தடுமாறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை நோய்த்தொற்றை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டும் போக்கு பெரும்பாலும் காணப்படுகிறது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதாலோ, கடுமையான கட்டணங்களை விதிப்பதன் மூலம் சிகிச்சைக்கான நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதாலோ தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன என்று தோன்றுகிறது. 

முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் மு.க. ஸ்டாலின் விடுத்திருக்கும் ஒரு வேண்டுகோள் வரவேற்புக்குரியது. தனியார் மருத்துவமனைகள் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டுமென்றும், பாதிக்கும் மேற்பட்ட படுக்கைகளை வசதி இல்லாதவர்களுக்கு சிகிச்சை வழங்க பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

கடந்த அரைநூற்றாண்டு காலமாக அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் படிப்படியாக தளர்ந்து வருவதை சுட்டிக்காட்டாதவர்களே கிடையாது. மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாகவும், சொல்லப் போனால் அதைவிட அதிகமாகவும் மருத்துவ உபகரணங்களும், தொழில் நுட்ப மேம்பாடும் அரசு மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. அப்படியிருந்தும்கூட அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதைத் தவிர்த்து தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுவதன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இரண்டு அவசர மனுக்களை நிராகரித்து வழங்கியிருக்கும் தீர்ப்பு பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரியது. நோயாளிகளின் சேவையில் ஈடுபட்டிருக்கும் தங்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி சொத்துவரியிலிருந்தும், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் கட்டணங்களிலிருந்தும் விதிவிலக்கு வழங்க வேண்டும் என்கிற அந்தத் தனியார் மருத்துவமனைகளின் கோரிக்கைகளை நிராகரித்திருப்பது மட்டுமல்லாமல், நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தெரிவித்திருக்கும் கருத்துகள், தனியார் மருத்துவமனைகளின் மனசாட்சியை தட்டியெழுப்பினால் நன்றாக இருக்கும்.

உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த மருத்துவமனைகளில் ஒன்று, அந்த மருத்துவமனையை நிறுவுவதற்கு மாநில அரசிடமிருந்து 2,542 ச.மீட்டர் இடம் சென்னை அண்ணாநகர் பகுதியில் நில ஒதுக்கீடு பெற்றிருக்கிறது. ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு சலுகைக் கட்டணத்திலும் மருத்துவ சேவை வழங்க இருப்பதாகக் கூறி அதனடிப்படையில் நில ஒதுக்கீடு பெற்ற  தனியார் அறக்கட்டளை நடத்தும் அந்த மருத்துவமனை, இப்போது ஏறத்தாழ ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையாக செயல்படுகிறது. 15% நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்குவதாக தங்களது மனுவில் தெரிவித்திருந்தது.

"85% நோயாளிகளிடம் மிக அதிகமான கட்டணம் பெற்று நடத்தப்படும் மருத்துவமனை, வரிவிலக்குக்கு உரியதல்ல. சொத்து வரி என்பது சட்டப்படி தரப்பட வேண்டியது. விதிவிலக்கு வழங்குவது ஒரு சலுகை. அந்த சலுகை விதிவிலக்காக இருக்க முடியுமே தவிர, உரிமை கோரலாக இருக்க முடியாது. ஏழைகளும் மருத்துவம் தேவைப்படுபவர்களும் எந்தவித நிபந்தனையோ, கேட்போ இல்லாமல் சிகிச்சை பெற முடிந்தால் மட்டுமே அதை நல அறக்கட்டளையாக ஏற்றுக்கொள்ள முடியும்' - என்று தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இதன் மூலம் சரியான வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறார். 

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அரசிடம் நில ஒதுக்கீடு பெற்று அமைக்கப்படுபவை. அந்த வகையில் சமுதாயத்துக்கு கடமைப்பட்டவையும்கூட. அதனால், கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்பட்டிருப்பதுபோல, தனியார் மருத்துவமனைகளும் அந்தந்தப் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுடன் இணைக்கப்படுவதும், அவசரகால தேவையோ, அவசர சிகிச்சையோ தேவைப்படும்போது அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட வேண்டுமென்பதும் தனியார் மருத்துவமனை உரிமம் வழங்குவதற்கு நிபந்தனைகள் ஆக்கப்படுவதுதான் இதற்குத் தீர்வு. 

"படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோ என்று போவான்'

- மகாகவி பாரதியார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com