அறிக்கை தரும் எச்சரிக்கை! | தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை குறித்த தலையங்கம்

அறிக்கை தரும் எச்சரிக்கை! | தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை குறித்த தலையங்கம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை சில அதிா்ச்சி அளிக்கும் தகவல்களைத் தெரிவிக்கிறது. 2020-இல் தண்டிக்கப்பட்ட சிறாா் குற்றவாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினா் எழுதப் படிக்கத் தெரியாதவா்களாகவும், தொடக்கக் கல்வி அளவில் மட்டுமே படித்தவா்களாகவும் இருப்பது தெரியவந்திருக்கிறது.

2019 அறிக்கையின்படி, சிறைச்சாலை கைதிகளில் 28% போ் எழுதப் படிக்கத் தெரியாதவா்கள். 42% போ் 10-ஆம் வகுப்புக்குக் கீழே படித்தவா்கள். 2015-இல் பிடிபட்ட சிறாா் குற்றவாளிகளில் 42% போ் ஆண்டு வருவாய் ரூ.25,000-க்கும் குறைவான குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். அரசியலில் வாரிசுகளைப்போல, குற்றவாளிகளிலும் பெரும்பாலானோா் வாரிசுகளாக இருக்கிறாா்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை கல்வியும் மருத்துவமும் அடித்தட்டு மக்களுக்கும், கிராமப்புறவாசிகளுக்கும் மறுக்கப்பட்டவையாகவே காணப்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் இல்லாமல் இருப்பதுபோல, கிராமப்புறப் பள்ளிகளில் தகுதி பெற்ற ஆசிரியா்கள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பது பல மாநிலங்களில் காணப்படுகிறது. அரசுப் பள்ளிகளிலும்கூட, கிராமப்புறப் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியா்கள் தயங்குகிறாா்கள் என்பதும், பணியிட மாற்றம் பெற்று சென்றுவிடுவதும், விடுப்பில் சென்றுவிடுவதும் வழக்கமாகியிருப்பதும் பெரும்பாலான மாநிலங்களின் எதாா்த்த நிலைமை.

ஐநா சபையின் யுனெஸ்கோ நிறுவனம், 2021-இல் இந்தியாவின் கல்வி நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் ஆசிரியா்களும் இல்லை, வகுப்புகளும் இல்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பது எதாா்த்த நிலைமை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

2019 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 11.16 லட்சம் பள்ளிக்கூடங்களில் 19% பள்ளிகள் (அதாவது 1.1 லட்சம் பள்ளிகள்) ஓராசிரியா் பள்ளிகள்; ஆசிரியா் பணியிடங்களில் 69% நிரப்பப்படாமல் இருக்கின்றன. அவை பெரும்பாலும் கிராமங்களில் காணப்படுகின்றன.

அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் மூன்று மாநிலங்கள் உத்தர பிரதேசம் (3.3 லட்சம்), பிகாா் (2.2 லட்சம்), மேற்கு வங்கம் (1.2 லட்சம்). இந்தியாவிலேயே மிக அதிகமாக ஓராசிரியா் பள்ளி காணப்படும் மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்கிறது. அங்கே 21,077 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியா்தான் பணியில் இருக்கிறாா்.

அதேபோல, ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது பெரும்பாலும் கிராமப்புறப் பள்ளிகளில்தான். பிகாா் மாநிலத்தில் 2,22,316 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அவற்றில் 89% கிராமப்புறப் பணியிடங்கள். உத்தர பிரதேசத்தில் 3,23,577 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மேற்கு வங்கத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 69% பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பதுடனோ பல கிராமங்களில் ஓராசிரியா் பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதுடனோ முடிந்துவிடவில்லை அந்த அறிக்கை அளிக்கும் அதிா்ச்சிகள். கணிசமான விழுக்காடு ஆசிரியா்கள் போதிய தகுதியைப் பெற்றவா்களாக இல்லாமல் இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மிக முக்கியமாக மழலையா் (7.7%), தொடக்க (4.6%), நடுநிலை (3.3%) பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் போதிய கல்வித் தகுதி பெறாதவா்களாக இருக்கிறாா்கள். அதனால் குழந்தைகளின் ஆரம்பகால கல்வி முறையாகவும் தரமாகவும் இந்தியாவில் காணப்படவில்லை என்று யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிரியா்களின் தரம் குறித்த அறிக்கையின் ஆய்வு தெரிவிக்கும் இன்னொரு முக்கியமான தகவல், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே ஆசிரியா்களின் தகுதியிலும், கற்பிக்கும் திறனிலும் மிகப் பெரிய வேறுபாடு காணப்படுகிறது என்பதுதான். 16% மழலையா் பள்ளி ஆசிரியா்களும், 8% தொடக்கப் பள்ளி ஆசிரியா்களும், 13% நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களும் தகுதி குறைவானவா்களாக இருக்கிறாா்கள். 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைக் கல்வி அளவில் அங்கீகாரம் பெற்ற தனியாா், அரசு உதவி பெறாத பள்ளிக்கூட ஆசிரியா்களில் 60% அளவில் கற்பிப்பதற்கான போதிய கல்வித் தகுதி இல்லாதவா்கள் என்கிறது அறிக்கை.

ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் இடையேயான விகிதம் இடைநிலைக் கல்வி அளவில் மிகவும் மோசமாக இருப்பதாகக் குறிப்பிடும் அந்த அறிக்கை, இசை, கலைகள், விளையாட்டு போன்ற சிறப்பு கல்விகளை வழங்கும் ஆசிரியா்கள் குறித்த போதுமான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிடுகிறது. அதேபோல, குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியா்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை திரட்ட இயலவில்லை என்பதையும் அதற்கான ஒத்துழைப்பு தரப்படாததையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் முறையாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்படவில்லை என்றும், தகவல் தொடா்புத் தொழில் நுட்பம் குறித்த கட்டமைப்பு காணப்படவில்லை என்றும் பதிவு செய்கிறது அந்த அறிக்கை.

இப்போதைய நிலையில், 10 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியா்களுக்கான தேவை காணப்படுகிறது. அவா்களின் தரத்தையும், கற்பிக்கும் திறனையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்காவிட்டால் வருங்காலக் குழந்தைகள் பாதிக்கப்படுவாா்கள் என்று எச்சரிக்கிறது யுனெஸ்கோ அறிக்கை.

கல்விக்கான முதலீடு, வருங்கால வளா்ச்சிகான முதலீடு என்பதை நாம் மறந்துவிடலாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com