மோடியின் ஐந்து அம்சத் திட்டம்! | 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாடு குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் கடந்த அக்டோபர் 31 அன்று தொடங்கிய 120 நாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றிருக்கிறது. இது, பூமிப் பந்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான மனித இனத்தின் முயற்சிகளில் ஒன்று என்றாலும்கூட விவாதிப்பதைத் தாண்டி ஆக்கப்பூர்வமாக இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்கிற பின்னணியில் பார்க்கும்போது, கிளாஸ்கோ மாநாடும் இன்னுமொரு மாநாடாகக் கடந்து போகிறது. 

உலகில் மிக அதிகமாக கரியமிலவாயு வெளியேற்றம் நடைபெறும் நாடுகள் சீனாவும், அமெரிக்காவும். மொத்த கரியமிலவாயு வெளியேற்றத்தில் 28% சீனாவினுடையது. மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை. அதிகமாக கரியமிலவாயு வெளியேற்றும் இரண்டாவது நாடு அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் இலக்கை நிர்ணயிக்கும் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்தப் பின்னணியில் வெறும் 4.5% கரியமிலவாயு வெளியேற்றம் செய்யும் நாடான இந்தியா, திட்டவட்டமாக தனது இலக்குகளை நிர்ணயித்து, மாநாட்டில் தனது ஐந்து அம்ச பருவநிலை செயல்திட்டத்தை அறிவித்திருப்பது உலக நாடுகளைப் பாராட்ட வைத்திருக்கிறது.

இந்தியாவின் மாற்று எரிசக்தி உற்பத்தியை 500 ஜிகா வாட்ஸாக 2030-க்குள் உயர்த்துவது; அடுத்த பத்தாண்டுகளுக்குள் எரிசக்தி தேவையின் 50% அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வது; 2030-க்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை 100 கோடி டன்னுக்கு குறைவாகக் கட்டுப்படுத்துவது; இந்திய பொருளாதாரத்தின் புதைபடிவ எரிசக்தி சார்பை 45% -க்குள் கொண்டு வருவது; 2070-க்குள் "நெட் -ஜீரோ' வெளியேற்ற இலக்கை எட்டுவது- இவைதான் கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்திருக்கும் இந்தியாவின் ஐந்து அம்ச திட்டவட்ட இலக்குகள்.

இந்த நூற்றாண்டின் மையப்பகுதிக்குள் அதாவது 2050-க்குள் உலகம் வெளியேற்றும் கரியமிலவாயுவின் அளவை பாதிக்குப்பாதி குறைத்தாக வேண்டும். வெளியேற்றும் வாயுவுக்கு நிகராக அதை ஈடு செய்யும் விதத்தில் கார்பன் பாதுகாப்பை ஏற்படுத்துவதுதான் நெட் ஜீரோ. அதன் மூலம் பருவநிலை மீதான பாதிப்பை சமன் செய்துவிட முடியும். போக்குவரத்துக்கும் எரிசக்தித் தேவைக்கும் கார்பன் அதிகம் காணப்படும் புதைபடிவ எரிசக்தியின் மீதான சார்பு நிலையைக் குறைப்பதன் மூலம்தான் அந்த இலக்கை எட்ட முடியும். 

இந்தியா இலக்கு நிர்ணயித்து அறிவித்திருப்பதைப்போல, சீனாவும், அமெரிக்காவும் தீர்மானமாக எந்த உத்தரவாதத்தையும் அளிக்கத் தயங்குகின்றன. இந்தியாவின் தனி நபர் கரியமிலவாயு வெளியேற்றம் 1.91 என்றால், சீனாவில் அதுவே 7.38 ஆகவும், அமெரிக்காவில் 15.52 ஆகவும் உள்ளன. மொத்தமாக எடுத்துக்கொண்டால் அமெரிக்காவைவிட சீனாவின் கரியமிலவாயு வெளியேற்றமும் பசுமை இல்ல வாயு வெளியேற்றமும் அதிகம் என்றாலும் தனி மனித அளவில் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது அது பாதிக்குப் பாதி. 

இன்னும் சொல்லப்போனால், உலகிலுள்ள மொத்த தீய வாயு வெளியேற்றத்தில் 67% பத்து நாடுகளின் பங்கு. பட்டியலின் அடித்தட்டிலிருக்கும் 100 நாடுகளின் மொத்த கரியமில, பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் வெறும் 3% மட்டுமே.

மனித இனத்துக்கு பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது 1988-ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் முதலில் கண்டறியப்பட்டது. நாசாவின் இயக்குநரான டாக்டர் ஜேம்ஸ் ஹேன்ஸன் அமெரிக்க மேலவையில் பூமி வெப்பமடைதலுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து விளக்கமாக வாக்குமூலம் அளித்தார். பருவநிலை மாற்றத்துக்கும், பூமி வெப்பமடைதலுக்கும் கார்பன் சார்ந்த எரிசக்திதான் காரணம் என்பதை முன்மொழிந்தவர் அவர்தான். 

அடுத்த 30 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் பருவநிலை மாற்றத்தை உலகம் படிப்படியாக உணரத் தொடங்கியது. உலக அளவில் பருவநிலையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. எதிர்பாராத புயல்கள், பருவம் தவறிய மழைப்பொழிவு, அச்சுறுத்தும் சூறாவளிகள், அதிகரிக்கும் வெப்பம் என்று உலகம் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக இருப்பது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 

 பதிவு செய்யத் தொடங்கியது முதல் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகள்தான் மிக அதிகமான வெப்பத்தை எதிர்கொண்டன. அதன் விளைவாக, பஞ்சம், இடமாற்றம், பசி, வறுமை, உள்நாட்டுக் கலவரங்கள் என்று பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆடம்பரமான வாழ்க்கை முறையும், தொழிற்சாலைகள் சார்ந்த மனித இயக்கமும் பருவநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணங்கள். இப்படியே தொடர்ந்தால், உலக வெப்பம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சுமார் 4.5 டிகிரி அளவில் அதிகரித்து பூமிப்பந்து உயிரினங்கள் வாழ இயலாத நிலைக்கு தள்ளப்படும். அதை தடுக்க வேண்டுமென்றால், புவி வெப்பத்தை 1.5 லிருந்து 2 டிகிரி செல்ஷியஸ் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

200 நாடுகள் கையொப்பமிட்ட 2015 பாரீஸ் ஒப்பந்தம்  தொழில் புரட்சி காலத்துக்கு முந்தைய புவிவெப்ப நிலையை எட்டுவது என்று இலக்கு நிர்ணயித்தது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்குப் போதிய கால அவகாசம் இல்லை. கிளாஸ்கோவில் இப்போது கூடிக் கலைந்திருப்பதைப்போல மாநாடுகள் நடத்துவதால் மட்டுமே கரியமில, பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களைக் கட்டுப்படுத்தி புவி வெப்பமயமாதலைத் தடுத்துவிட முடியாது. பேசிப் பயனில்லை, செயல்பட்டாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com