காவல் நிலைய மரணங்கள், கைதிகளின் சித்திரவதைகள் தொடர்பான தலையங்கம் | பூனைக்கு யார் மணி கட்டுவது?

மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 348 காவல்நிலைய மரணங்களும், 1,189 சித்திரவதை வழக்குகளும் பதியப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
காவல் நிலைய மரணங்கள், கைதிகளின் சித்திரவதைகள் தொடர்பான தலையங்கம் | பூனைக்கு யார் மணி கட்டுவது?


மனித உரிமைகளுக்கும், கைதிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காவல் நிலையங்களில்தான் காணப்படுகிறது என்கிற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் கூற்றை உறுதிப்படுத்துவதாக அமைகிறது ஆக்ராவுக்கு அருகிலுள்ள காஸ்கஞ்ச் காவல் நிலையத்தில் நிகழ்ந்திருக்கும் மரணம். தலைமை நீதிபதியின் இந்தக் கூற்று, காவல் நிலைய மரணம் தொடர்பான தீர்ப்பு தொடர்பானது அல்ல. நீதிமன்றத்துக்கு வெளியே கூறப்பட்ட அவரது தனிப்பட்ட கருத்து இது. அரசியல் சாசன உத்தரவாதங்கள் இருந்தும்கூட, அடித்தட்டு மக்கள் நீதிபரிபாலன வரம்புக்கு வெளியே வாழ்கிறார்கள் என்றும், காவல் நிலைய சித்திரவதைகளும், காவல்துறை அத்துமீறல்களும் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறியிருப்பதில் உண்மையிருக்கிறது. 

காஸ்கஞ்ச் காவல் நிலையத்தில் 22 வயது இளைஞர் காவலில் இருக்கும்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார். காவல்துறை வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவர் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மூன்றடி உயரமுள்ள குழாயில், 5 அடி 6 அங்குலமுள்ள அந்த இளைஞர் தூக்குப் போட்டுக்கொண்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார் என்கிற காவல்துறையின்  கூற்று நம்பும்படியாக இல்லை.

குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் அவர் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை என்று கேள்வியெழுப்பும் அவரது குடும்பத்தினர், காவல்துறையால் அந்த இளைஞர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். குற்றச்சாட்டை வலியுறுத்தாமல் இருப்பதற்காக அவர்களுக்குக் கடுமையான அழுத்தம் தரப்படுவதாகக் கூறப்படுகிறது. சாட்சியங்கள் அழிக்கப்படாமல் இருப்பதற்கு உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை எழுப்பப்படுகிறது.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகர காவல்துறை அதிகாரி டெரக் சாவின், இரக்கமில்லாமல் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் காலை வைத்து நெரித்துக் கொன்றதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. காவல்துறை அத்துமீறல்களும், சித்திரவதைகளும், என்கவுன்ட்டர் மரணங்களும்  உலக நாடுகள் அனைத்திலுமே காணப்படுகின்றன என்றாலும், அவற்றை நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ இயலாது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து பல கூட்டங்களையும் விவாதங்களையும் நடத்தியும்கூட, மனித உரிமைகளை நிலைநிறுத்த நம்மால் முடியவில்லை. 

2019-இல், குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்துவதற்கு முன் 53 கைதிகளும், காவலில் இருக்கும்போது 32 பேரும் உயிரிழந்ததாக தேசிய குற்றவியல் ஆவண அறிக்கை கூறுகிறது. உயிரிழந்த 85 பேரில் 33 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும், 36 பேர் உடல்நலக்குறைவால் இறந்ததாகவும், 14 பேர் விபத்து, கைதுக்கு முற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாகவும், இரண்டே இரண்டு பேர் மட்டுமே காவல் நிலைய வன்முறையில் இறந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், 2019-இல் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை 117 என்று குறிப்பிடுகிறது தேசிய மனித உரிமை ஆணையம். 

மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 348 காவல்நிலைய மரணங்களும், 1,189 சித்திரவதை வழக்குகளும் பதியப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. காவல் நிலையத்தில் நடைபெறுவதால் பெரும்பாலான சம்பவங்கள் வெளியில் தெரிவதில்லை என்பதுடன் அவை பதிவு செய்யப்படுவதுமில்லை. 

காவல் நிலைய மரணங்கள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சந்தேகத்துக்கு உரிய குற்றவாளிகளை காவல்துறையினரோ ஒரு கும்பலோ தண்டிப்பதில் தவறில்லை என்கிற கருத்து அதிகரித்திருக்கிறது. எந்தவித விசாரணையோ நீதிமன்ற நடவடிக்கைகளோ இல்லாமல் ஒருவரை குற்றவாளி என்று சிலர் தீர்மானித்துவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. 

பல வழக்குகளில், குறிப்பாக, பாலியல் வன்கொடுமை வழக்குகளில், குற்றஞ்சாட்டப்படுபவர்கள் கும்பலாலோ காவல்துறை என்கவுன்டரிலோ கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் போக்கு காணப்படுகிறது. 

நீதித்துறையின் தாமதமான தீர்ப்புகள் இதற்கு முக்கியமான காரணம் என்பதை மறுக்க இயலாது. அதேபோல, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசனம் சில அடிப்படை உரிமைகளை வழங்கியிருக்கிறது என்பதை உணர்ச்சிவசப்படும் சமூகம் உணர மறுப்பதும் மற்றொரு காரணம்.

விசாரணைக் கைதிகளின் சித்திரவதையைப் பொறுத்தவரை, காவல்துறையினர் தங்களுக்கு எதிராகத் தாங்களே எந்தவித நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் என்பதால்தான், 2005-இல் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, காவல் நிலையத்தில் சித்திரவதையோ வன்முறையோ மரணமோ நிகழ்ந்தால் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை நடத்தும் குற்றவியல் நடுவர் மருத்துவப் பரிசோதனைக்கு கைதியையோ, சடலத்தையோ அனுப்பி அறிக்கை பெறும் அதிகாரம் பெறுகிறார். நடுவர்களின் விசாரணை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் பல விரிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. ஆனால் அவை எதுவுமே பின்பற்றப்படுவதில்லை. 

காவல்துறையினரின் எண்ணிக்கை குறைவு என்பதால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்துடன் செயல்படுகிறார்கள். காவல்துறை, ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதும் எதார்த்த உண்மை. காவல்துறை சீர்திருத்தம் குறித்துப் பேசப்படுகிறதே தவிர, செயல்படுத்தப்படுவது இல்லை. சுதந்திரமான காவல்துறை அமைந்தால் மட்டுமே குடிமக்களின் உரிமை மதிக்கப்படும். அதுவரை காவல் நிலைய மரணங்களும், கைதிகளின் சித்திரவதைகளும் தொடரத்தான் செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com