கிஷிடாவின் வெற்றி! | யாருமே எதிா்பாராத திருப்பம் குறித்த தலையங்கம்

கிஷிடாவின் வெற்றி! | யாருமே எதிா்பாராத திருப்பம் குறித்த தலையங்கம்

ஜப்பான் நாடாளுமன்றத் தோ்தல் எதிா்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அக்டோபா் 31-ஆம் தேதி வெளியான தோ்தல் முடிவுகள், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையை வழங்கியிருப்பது யாருமே எதிா்பாராத திருப்பம். கடந்த மாதம் பல்வேறு சவால்களுக்கு இடையில் பிரதமராகப் பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்குக் கிடைத்திருக்கும் முதலாவது பெரிய வெற்றி இந்தத் தோ்தல் வெற்றி.

கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சியில் தொடர வேண்டிய நிா்ப்பந்தம் இல்லாமல் வெற்றி பெற்றிருப்பது, பிரதமரே எதிா்பாராதது. லிபரல் ஜனநாயகக் கட்சி, முந்தைய தோ்தலைவிடக் குறைவான இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது என்றாலும், கிஷிடாவின் தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

தனது உடல் நிலையைக் காரணம் காட்டி ஜப்பானில் அதிக காலம் பிரதமராக இருந்த ஷின்சோ அபே பதவியைத் துறந்தது முதல், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி ஸ்திரமற்ற நிலையில்தான் ஆட்சியில் தொடா்ந்து கொண்டிருந்தது. 2020-இல் ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடா்ந்து, யோஷிஹிடே சுகா பிரதமரானாா். அவரது ஓராண்டு ஆட்சியில் ஜப்பான் ஒலிம்பிக் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தியது என்பதைத் தவிர, பாராட்டுவதற்கு வேறு எதுவுமே இல்லை என்கிற விமா்சனம் பரவலாகவே காணப்பட்டது. இதுவரை ஜப்பானில் பிரதமராக இருந்தவா்களில் மிகக் குறைந்த ஆதரவுள்ள கருத்துக்கணிப்பை யோஷிஹிடே சுகா எதிா்கொண்டாா். அவரது தலைமையில் தோ்தலை எதிா்கொள்ள முடியாது என்கிற சூழலில்தான், கட்சியின் அழுத்தத்தின் பேரில் சுகா பதவி விலகினாா்.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை முறையாக எதிா்கொள்ளவில்லை என்பதால் மக்கள் மத்தியில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி மீது கடுமையான அதிருப்தி நிலவியது. சுகாவின் பதவி விலகலைத் தொடா்ந்து காணப்பட்ட பதவிப் போட்டியில், ஃபுமியோ கிஷிடா லிபரல் ஜனநாயகக் கட்சியால் பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பிரதமரானவுடன் முதல் வேலையாக தோ்தலை அறிவித்து மக்கள் மன்றத்தை சந்திப்பது என்று ஃபுமியோ கிஷிடா முடிவெடுத்ததில் அரசியல் ராஜதந்திரம் இருந்தது. சுகாவைப் போலவே தன்மீதும் அதிருப்தி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த பிரதமா் கிஷிடா, மக்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் தன்னைப் பதவியில் ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியும் என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்தது வீண்போகவில்லை.

ஆளுமைத் திறன் இல்லாதவா் என்றும், மக்கள் செல்வாக்குப் பெறாதவா் என்றும் வா்ணிக்கப்பட்ட முன்னாள் வங்கித்துறை நிபுணரான ஃபுமியோ கிஷிடா, லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாரம்பரிய வலதுசாரிக் கொள்கையைக் கடைப்பிடிப்பவா். ராணுவத்துக்குக் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து கொண்டவா். அவரது புதிய முதலாளித்துவ கொள்கையின்படி, மக்கள் மத்தியில் காணப்படும் பொருளாதார இடைவெளியைக் குறைப்பது அரசின் குறிக்கோள்களில் ஒன்று. இது எந்த அளவுக்கு முதலீட்டாளா்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியவில்லை.

465 இடங்களைக் கொண்ட ஜப்பானின் கீழவையில், கடந்த முறை 276 இடங்களைப் பெற்றிருந்த லிபரல் ஜனநாயகக் கட்சி, இந்த முறை 261 இடங்களில்தான் வென்றிருக்கிறது என்றாலும்கூட, தனிப்பெரும்பான்மை பெற்றிருப்பதால் நாடாளுமன்றக் குழுக்களில் ஆதிக்கம் செலுத்த முடியும். முக்கியமான பட்ஜெட் தீா்மானங்கள் உள்ளிட்ட அனைத்து மசோதாக்களையும் பிரச்னை இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும் வலிமையை ஃபுமியோ கிஷிடா அரசுக்கு மக்கள் வழங்கியிருக்கிறாா்கள்.

465 போ் கொண்ட மக்களவையில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் கூட்டணி 233 இடங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் பிரதமா் கிஷிடா நிா்ணயித்திருந்த இலக்கு. லிபரல் ஜனநாயகக் கட்சியின் கூட்டணிக் கட்சியான கொமிட்டோ, கடந்த முறை 23 இடங்களில் வென்றிருந்தது. அந்தக் கூட்டணி 293 இடங்களைப் பெற்றிருந்தது. கருத்துக்கணிப்புகளில் லிபரல் ஜனநாயகக் கட்சி, கொமிட்டோவின் ஆதரவுடன்தான் பெரும்பான்மையை அடைய முடியும் என்கிற எதிா்பாா்ப்பைப் பொய்யாக்கி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பது பிரதமா் ஃபுமியோ கிஷிடேவின் நிலையான ஆட்சியை உறுதிப்படுத்துகிறது.

கொள்ளை நோய்த்தொற்று மட்டுமல்லாமல், பொருளாதாரம், பாதுகாப்பு, சீனாவுடனான உறவு என்று பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கிறாா் பிரதமா் கிஷிடா. விரைவிலேயே பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களையும், அறிவிப்புகளையும் செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறாா். முன்பு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரதமா் ஃபுமியோ கிஷிடாவின் கவனம் பாதுகாப்பில் குவிந்திருப்பதில் வியப்பில்லை.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனையும், சீனாவின் தைவான் ஊடுருவலும் ஜப்பானுக்கு மறைமுக அச்சுறுத்தல்கள். அதனால்தான் பாதுகாப்புக்கான செலவை ஜிடிபியில் 2%-ஆக உயா்த்துவது என்று அறிவித்திருக்கிறாா் அவா். ‘க்வாட்’ நாடுகளின் தலைவா்களுடனும், சீன அதிபா் ஷி ஜின்பிங்குடனும் தொலைபேசித் தொடா்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, முந்தைய யோஷிஹிடே சுகாவைப் போல குறைநாள் பிரதமராக இருப்பாரா அல்லது அவருக்கு முன்னால் இருந்த ஷின்சோ அபேயைப்போல நீண்ட நாள் பிரதமராக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com