எட்ட இயலா இலக்கு? | அனைவருக்கும் கல்வி திட்டம் குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

'எழுதப்படிக்கத் தெரியாதவர்களே இல்லாத இந்தியா' என்கிற இலக்கு 74 ஆண்டுகளுக்கு முன்பு தில்லி செங்கோட்டையில் முழக்கமாக எழுப்பப்பட்டது. மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சிகள் பல வந்து போயின. ஆனாலும் நிறைவேறாத கனவாகவே அந்த இலக்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டிருக்கும் 2017-18-க்கான ஆய்வறிக்கையின்படி,  இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் விகிதம் 77.7%. இதே நிலைமை தொடருமானால் அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருப்பதற்கான 2030 இலக்கு, கனவாகத்தான்  போகும். 

1931-இல் லண்டன் சத்தம் ஹவுஸ் கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசும்போது, எழுத்தறிவு பெற்ற இந்தியா குறித்து அவர் கூறிய கருத்து குறிப்பிடத்தக்கது. 'பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் காணப்படும் கல்விமுறையை முழுமையாக அழிப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏற்கெனவே எங்கள் நாட்டில் நிலைபெற்றிருக்கும் கிராமப் பள்ளிக்கூடங்கள் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அதிக முதலீட்டுடனும், பொருட்செலவுடனும் நாடு தழுவிய அளவில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்குவது என்பதுதான் அவர்கள் புகுத்த முற்பட்டிருக்கும் கல்விமுறை. இதன் மூலம் பண விரயமும், மடை மாற்றமும் ஏற்படும் அளவுக்குப் பலன் கிடைக்கப் போவதில்லை. அடித்தட்டு மக்களை இந்தக் கல்விமுறை சென்றடையாது' என்பதுதான் காந்திஜியின் 90 ஆண்டுகளுக்கு முந்தைய தீர்க்க தரிசனம்.

இப்போது காணப்படும் கல்வி கற்பதற்கான வசதிகள், இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகுதான் கிராமங்களைச் சென்றடைந்தன. சுதந்திர இந்தியா அண்ணல் காந்தியடிகளின் கனவை நனவாக்கும் விதத்தில் கிராமப்புற ஓராசிரியர் பள்ளிகளை ஊக்குவித்திருந்தால் ஒருவேளை இந்தியா எப்போதோ 100% எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இருக்கும் நாடாக உருவாகி இருக்கக்கூடும். 

மேல்நாட்டு பாணியைப் பின்பற்றி மிகப்பெரிய ஊழியர் கட்டமைப்புடனும், முதலீட்டுடனுமான கல்விமுறையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து செயல்படுகிறோம். அடிப்படைக் கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கான 'கரும்பலகைத் திட்டம்' முதல் 'அனைவருக்கும் கல்வி' திட்டம் வரை எத்தனையோ முயற்சிகளை செய்தும்கூட 77.7% மட்டுமே எழுத்தறிவு நிறைந்தவர்கள் இருக்கும் நாடாகத்தான் நம்மால் மாற முடிந்திருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் வழிகாட்டுக் கொள்கைகள் பல வாக்குறுதிகளை வழங்குகின்றன. சட்டப்பிரிவு 41-இன்படி 'வேலை பார்ப்பதற்கான உரிமை, கல்விக்கும் வேலைவாய்ப்புக்குமான உதவி, முதுமை, நோய், உடல் ஊனம் உள்ளிட்ட பிரச்னைகள் ஆகியவற்றுக்குப் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் அரசு பாதுகாப்பு வழங்கும்' என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவாதத்தில் மறைமுக நிபந்தனை ஒன்று காணப்படுகிறது. அதாவது 'பொருளாதார நிலைமைக்குத் தகுந்தபடி' என்கிற பாதுகாப்பு அரசுக்கு இருக்கிறது. 

அதேபோல, அரசியல் சாசன சட்டப்பிரிவு 45-இன்படி, 'அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குள் 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதற்கு அரசு முயற்சி செய்யும்' என்றும் குறிப்பிடுகிறது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்து விட்டன. அனைவருக்கும் கல்வி என்பது மட்டுமல்ல, அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வியும், இடைநிலைக் கல்வியும் வழங்குவதுகூட வெறும் சம்பிரதாயச் சடங்காக இருக்கிறதே தவிர, முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

ஏறத்தாழ இந்திய மக்கள்தொகையில் பாதியளவினர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். எழுத்தறிவு பெற்றவர்களில்கூட பலரும் கையொப்பமிடத் தெரிந்தவர்கள் அவ்வளவே.

பல எழுத்தறிவு முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐந்தாண்டுத் திட்டங்களில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, வழிமுறைகள் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய அளவில் எழுத்தறிவுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1988-இல் மத்திய அரசு "தேசிய எழுத்தறிவு திட்ட'த்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது முழுமையான வெற்றியை அடையவில்லை. அது ஓரளவுக்கு வெற்றியடைந்த மாநிலங்களிலும்கூட ஆண்கள் அளவுக்கு பெண்களின் எழுத்தறிவு இல்லை என்கிற வேதனையைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. 

2009-இல் மன்மோகன் சிங் அரசால் 'ஸாக்ஷர் பாரத் மிஷன்' என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டது. மார்ச் 2018-க்குள் 7.6 கோடி பேரை எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உருவாக்கியது அந்தத் திட்டம். என்ன காரணத்தாலோ அந்த முனைப்பு தொடரவில்லை. 

'அனைவருக்கும் கல்வி' திட்டம் இன்னொரு முயற்சி. இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு, சமூக ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல திட்டங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட 'அனைவருக்கும் கல்வி' திட்டத்துக்கான ஒதுக்கீடுகள் ஆசிரியர்களின் ஊதியமாக வழங்கப்பட்டதுதான் மிச்சம். பள்ளிக் குழந்தைகளின் புரிதல் திறனையும் ஆற்றலையும் மேம்படுத்த முடியவில்லை. 

அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி என்கிற மேலை நாட்டு பாணி கல்வி முறையால் உயர் கல்விச்சாலைகளும், பல்கலைக்கழகக் கல்வியும் மேம்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் கல்வி சென்றடையவில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் கனவை விட்டுவிட்டு, வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்கிற திசையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com