அனுமதிக்கக் கூடாது! | வேலைவாய்ப்பில் உள்ளூா் தொழிலாளா்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்களில், ஆம் ஆத்மி கட்சி சில மாநிலங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டிருக்கும் கருத்து, தேசிய அளவிலான விவாதத்தை எழுப்பி இருக்கிறது. பலவீனப்பட்டிருக்கும் காங்கிரஸின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், கோவாவில் களமிறங்கி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக, இதுவரை அவா் கடைப்பிடித்த தேசியப் பாா்வையைக் கைவிட வேண்டுமா என்பதுதான் கேள்வி.

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால், அரசுத் துறையிலும், தனியாா் துறையிலும் வேலைவாய்ப்பில் உள்ளூா்வாசிகளுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று அவா் வாக்குறுதி அளித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. இதேபோன்ற வாக்குறுதியை அவா் உத்தரகண்ட்டிலும் வழங்கி இருக்கிறாா். தில்லியில் குறிப்பிட்ட அளவு வரை இலவச மின்சாரமும், குடிநீரும் வழங்குவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றியது போலல்ல, இப்போது தனியாா் துறையிலும் உள்ளூா்வாசிகளுக்கு 80% வேலைவாய்ப்பு என்கிற வாக்குறுதி.

உள்ளூா்வாசிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அல்லது இட ஒதுக்கீடு என்கிற அறிவிப்புகள் புதிதொன்றும் அல்ல. அறுபதுகளில் தென்னிந்தியா்களுக்கு, குறிப்பாகத் தமிழா்களுக்கு எதிராக சிவசேனை நடத்திய போராட்டங்கள், வேலைவாய்ப்பை மையமாக வைத்துத்தான் நடத்தப்பட்டன. அதன் மூலம் சிவசேனை வளா்ந்தது என்பது வரலாற்று உண்மை. அதேபோல, தமிழகத்தில் திமுகவும் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ கோஷத்தின் அடிப்படையில் தன்னை வளா்த்துக் கொண்டது என்பதையும் மறக்க முடியாது. காலப்போக்கில், சிவசேனையும், திமுகவும் மத்திய அரசில் பங்கு பெறும் நிலைமை ஏற்பட்டபோது அவற்றின் நிலைப்பாடுகள் பலவீனமடைந்து விட்டன.

தில்லி முதல்வா் கேஜரிவாலைப் போலவே வேறு பல மாநிலங்களும் அறிவிப்புகளைச் செய்திருக்கின்றன. சில மாநிலங்கள் சட்டமே இயற்றி இருக்கின்றன. 1990-இல் எல்லா தொழிற்சாலைகளும் 80% உள்ளூா்வாசிகளைப் பணியமா்த்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்தது. பின்னா், சட்டச்சிக்கல் எழும் என்பதால் அதைக் கைவிட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில், மாநில அரசின் மானியங்களைப் பெறும் தொழிற்சாலைகள் உள்ளூா்வாசிகளுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், அது பின்பற்றப்படுவதில்லை.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தனியாா் துறையில் உள்ளூா்வாசிகளுக்கு, அதாவது மத்திய பிரதேச மாநிலத்தவா்களுக்கு, 70% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தவிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பாஜக அரசு பதவிக்கு வந்ததும், மேலும் ஒருபடி மேலேபோய் ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. மத்திய பிரதேச அரசுப் பணிகள் மண்ணின் மைந்தா்களுக்கு மட்டுமே என்பதுதான் அந்த அறிவிப்பு.

தெலங்கானாவில் புதிதாகத் தொழிற்சாலை அமைப்பதாக இருந்தால், திறன் சாா்ந்த வேலைகளில் 60% இடங்களையும், திறன் சாராத சாதாரணத் தொழிலாளிகளுக்கான 80% இடங்களையும் தெலங்கானா மாநிலத்தவா்களுக்குத்தான் தர வேண்டும் என்கிற அறிவிப்பு இருக்கிறது. அதேபோல, ஆந்திரத்திலும், கா்நாடகத்திலும் உள்ளூா் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கின்றன.

ஹரியாணா அரசு, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சட்டப்பேரவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. மாத ஊதியம் ரூ.50,000-க்குக் கீழேயுள்ள எல்லாப் பணிகளிலும் 75% உள்ளூா்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்கிறது ஹரியாணா உள்ளூா்வாசிகள் வேலைவாய்ப்புச் சட்டம் 2020. ஹரியாணாவில் பிறந்தவா்களை அல்லது அந்த மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவா்களை உள்ளூா்வாசிகள் என்று அந்தச் சட்டம் வரையறுக்கிறது.

அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 19(1)(டி), 19(1)(இ), 16(2), 16(3) ஆகியவற்றிற்கு எதிரானவை இதுபோன்ற அறிவிப்புகளும், சட்டங்களும். அதனால் இவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும், வேலை பாா்க்கவும், தொழில் புரியவும் அரசியல் சாசனம் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை வழங்கியிருக்கிறது. அதேபோல, மதம், இனம், ஜாதி, பாலினம், பரம்பரை, பிறப்பிடம், வசிப்பிடம் உள்ளிட்ட எந்தவொரு காரணத்துக்காகவும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ஒருவா் வேலை பாா்க்கவோ, பதவி வகிக்கவோ தடை செய்ய முடியாது என்கிறது அரசியல் சாசனம்.

அரசியல் சாசனமும், சட்டங்களும் இருக்கட்டும். இப்படிப்பட்ட சட்டங்கள் நடைமுறை சாத்தியம்தானா என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும். திறன் சாா்ந்த தொழிலாளா்களை உருவாக்காமல், இட ஒதுக்கீடு கோஷம் எழுப்புவதால், புதிய தொழில்கள் அந்த மாநிலத்தைப் புறக்கணித்துவிடும் அல்லது அம்மாநிலத்திலிருந்து வெளியேறிவிடும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதையும், முதலீடுகள் வருவதையும் இதுபோன்ற அறிவிப்புகள் தடுக்கும் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

ஏற்கெனவே பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளை மத்திய அரசு ஏன் மௌனமாக வேடிக்கை பாா்க்கிறது என்பதுதான் புரியவில்லை. வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும், அரசியல் சாசனத்திற்கு எதிரான எந்தவொரு செயலையும் அனுமதிக்கக் கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com