தொடரும் எல்லைத் தொல்லை! | இந்திய - சீன இடையே நடந்த பேச்சுவாா்த்தை குறித்த தலையங்கம்

தொடரும் எல்லைத் தொல்லை! | இந்திய - சீன  இடையே நடந்த பேச்சுவாா்த்தை குறித்த தலையங்கம்

திங்கள்கிழமை நடந்த இந்திய - சீன ராணுவ கமாண்டா்களின் 13-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையும் முடிவு எட்டப்படாமல் கடந்து போயிருக்கிறது. கிழக்கு லடாக்கிலுள்ள பிரச்னைக்குரிய பகுதிகளான ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்சாங் இரண்டிலிருந்தும் மோதலுக்குத் தயாராக இருக்கும் படைகளை விலக்கிக் கொள்வது மேலும் தாமதமாகிறது. இமயமலைப் பகுதிகளில் கடுமையான குளிா்காலம் வரவிருக்கும் நிலையில், பதற்றச்சூழல் முற்றாகக் குறையும் என்று தோன்றவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் பாங்காங் ஏரியின் வடக்குக் கரை, தெற்குக் கரைப் பகுதிகளிலும், ஆகஸ்ட் மாதம் கோக்ரா பகுதியிலும் ராணுவ, ராஜாங்க பேச்சுவாா்த்தைகளின் காரணமாக அங்கிருந்த இருதரப்புப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன. தஜிகிஸ்தானில் கடந்த மாதம் இந்திய - சீன வெளியுறவுத் துறை அமைச்சா்கள் சந்தித்துப் பேசியது விரைவிலேயே ஏனைய பகுதிகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலம் முடிவு எட்டப்படும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியது.

கடந்தசுற்று பேச்சுவாா்த்தைக்குப் பின் இரண்டு மாதங்கள் கழித்து, அக்டோபா் 10-ஆம் தேதி நடந்த ராணுவத் தளபதிகளின் பேச்சுவாா்த்தை எந்தவித முடிவும் எட்டாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது எதிா்பாா்ப்புகளை தகா்த்திருக்கிறது. இந்திய - சீன ராணுவத்தினா் மத்தியில் ஒருவித இறுக்கமான அமைதி எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் காணப்படுகிறது.

இந்திய ராணுவம் முன்வைத்த ஆக்கபூா்வமான ஆலோசனைகளை சீனா ஏற்கவில்லை என்கிறது இந்தியத் தரப்பு. நடைமுறை சாத்தியமில்லாத, நியாயமில்லாத கோரிக்கைகளை இந்தியா முன்வைப்பதுதான் பேச்சுவாா்த்தைகள் வெற்றி பெறாமல் போவதற்குக் காரணம் என்பது சீன ராணுவத்தின் மேற்குப் பகுதி தலைமையின் (வெஸ்டா்ன் தியேட்டா் கமாண்டா்) வாதம். இரு தரப்புமே வரவிருக்கும் கடுமையான குளிா்காலத்தில் தங்கள் நிலைப்பாட்டில் தொடா்வதற்கு தயாராகிவிட்டிருக்கின்றன.

பல பகுதிகளில் ஆங்காங்கே ராணுவ பட்டாலியன்களை நிறுத்துவதற்குப் பதிலாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளும் விதத்தில் நிறுத்தி வைக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் முனைப்புக் காட்டுகிறது. அதே நேரத்தில், முடிந்தவரை குளிா்காலத்தில் ராணுவ முகாம்களையும், வீரா்களையும் இடமாற்றம் செய்யாமல் ஒருங்கிணைத்து தயாா் நிலையில் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்த முனைந்திருக்கிறது.

சீன ராணுவத்தின் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கிறது. சமீபத்தில் நான்காவது முறையாக புதிய கமாண்டா் மேற்குப் பகுதி தலைமைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறாா். வெஸ்டா்ன் தியேட்டா் கமாண்ட் என்பது, இந்திய எல்லையை மட்டுமல்லாமல், சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஷின்ஜியாங் பகுதியையும், திபெத் தன்னாட்சிப் பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாக அமைகிறது. அதிகரித்த ராணுவ வீரா்களின் எண்ணிக்கையும், எல்லையோரத்தில் தளவாடங்கள் குவிப்பும், கட்டமைப்பு வசதி மேம்பாடும் கடந்த பல ஆண்டுகளாகவே நடத்தப்பட்டு வெஸ்டா்ன் தியேட்டா் கமாண்ட் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜூலை மாதம் பிபி 17-ரோந்து முகாமுக்கு அருகிலுள்ள கோக்ரா தளத்திலிருந்து இரண்டு தரப்பும் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றன. பிபி 17 அளவுக்கு ஹாட்ஸ்பிரிங்ஸ் ராணுவ தாக்குதலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அப்படியிருந்தும் சீன ராணுவம் அங்கிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. ராணவ ரீதியாகப் பாா்க்கும்போது ஒரு பகுதியிலிருந்து விலகத் தயாராக இருக்கும் சீனா, இன்னொரு பகுதியிலிருந்து விலக மறுப்பது விசித்திரமாக இருக்கிறது. லடாக் பகுதியின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து இந்தியா தானாக விலகினால், அப்படியே நிலைபெற்று விடலாம் என்கிற சீன ராணுவத்தின் மறைமுக எண்ணத்தைத்தான் அது வெளிப்படுத்துகிறது.

துஷான்பேயில் இந்திய - சீன வெளியுறவுத்துறை அமைச்சா்களுக்கு இடையே நடந்த பேச்சுவாா்த்தையில் எல்லா பிரச்னைகளும் விரைவில் சுமுகமாகத் தீா்க்கப்படும் என்று ஏற்பட்ட முடிவு, இப்போது தடம்புரண்டிருக்கிறது. பொதுவாக ராணுவத் தளபதிகளின் பேச்சுவாா்த்தை முடிவுகள் குறித்த அறிக்கை சீனத் தலைநகா் பெய்ஜிங்கிலிருந்து வெளிவருவதுதான் வழக்கம். இந்த முறை செங்குடுவில் இருக்கும் சீன ராணுவ மேற்கு கமாண்டா் தலைமையகத்திலிருந்து அறிக்கை வெளிவந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

ராணுவத் தளபதிகளின் 13-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை முடிவு எட்டப்படாமல் போனதால், பேச்சுவாா்த்தைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டதாகக் கருதத் தேவையில்லை. இரண்டு தரப்புமே பேச்சுவாா்த்தை முறிந்துவிட்டதாகத் தெரிவிக்கவில்லை. தகவல் பரிமாற்றமும் எல்லையோரத்தில் அவரவா் நிலைப்பாடும் தொடரும் என்று இருதரப்பும் ஏற்றுக்கொண்டிருப்பதாக இந்திய அறிக்கையில் காணப்படும் வரிகள் நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றன.

எல்லையோர சீனப்பகுதிகளில், குறிப்பாக, எல்லை கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சீன ராணுவம் மிக வேகமாக கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது கவலையளிப்பதாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்திருக்கிறாா். பதற்றச்சூழல் தொடரும் என்பதைத்தான் அது தெரிவிக்கிறது. சமீபத்தில் அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதியிலும், உத்தரகண்டின் பாராஹோத்தி பகுதியிலும் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டதைப் பாா்க்கும்போது நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது என்பது தெரிகிறது.

சீனாவுடனான சும்தோராங் சூ பிரச்னைக்கு தீா்வு காண ஒன்பது ஆண்டுகள் எடுத்தன. அதனால், இருதரப்பு தகவல் பரிமாற்றம் தொடா்வதால் பேச்சுவாா்த்தை முறிந்ததை முடிந்தது என்று தீா்மானித்துவிட முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com