நோக்கம் சரி; திட்டம் பிழை! | பாரம்பரிய எண்ணெய் வித்து சாகுபடியை அதிகரிப்பது குறித்த தலையங்கம்

அந்தமான் நிகோபாா் தீவுகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ரூ.11,040 கோடி செலவில் ‘தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் - பாமாயில் உற்பத்தி’ என்கிற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. தற்போது 3.78 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும் ‘பாம்’ மரங்கள் சாகுபடிப் பரப்பை, 2025 - 26-ஆம் ஆண்டுக்குள் 6.5 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பதுதான் திட்டத்தின் நோக்கம். அதன் மூலம் 2025 - 26-க்குள் உள்நாட்டு பாமாயில் உற்பத்தி 11.2 லட்சம் டன்னாகவும் (ல.ட.), 2029 - 30-ஆம் ஆண்டுக்குள் 28 ல.ட-ஆகவும் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இலக்கு.

2020 - 21 பயிா் ஆண்டில் (நவம்பா் - அக்டோபா்) இந்தியாவின் சமையல் எண்ணெய் உற்பத்தி 93.18 ல.ட. கடந்த பயிா் ஆண்டில் எண்ணெய் வித்துகள் சாதனை சாகுபடியை அடைந்தாலும்கூட, நமது சமையல் எண்ணெய் இறக்குமதி சுமாா் 131 ல.ட. நமது சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக நாம் இறக்குமதி செய்கிறோம். அதற்காக ஆண்டுதோறும் நாம் செலவிடும் அந்நிய செலாவணி 10-11 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.73,036 கோடி - ரூ.80,340 கோடி).

தற்போது உள்ள 60% முதல் 70% சமையல் எண்ணெய் இறக்குமதியை பாதிக்குப் பாதியாகக் குறைக்க வேண்டுமானால், எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை தவறான அணுகுமுறை என்று புறந்தள்ள முடியாது. இந்தியாவின் 130 ல.ட. முதல் 150 ல.ட. சமையல் எண்ணெய் இறக்குமதியில் 80 ல.ட. முதல் 90 ல.ட. பாமாயில் இறக்குமதி என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

உடல் ஆரோக்கியம், சூழலியல், சுற்றுச்சூழல் பிரச்னைகளின் அடிப்படையில் பாமாயில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஏனைய சமையல் எண்ணெய்களைவிட, விலை குறைவு என்பதாலும், கலப்படத்துக்கு உகந்தது என்பதாலும் மிக அதிக அளவில் பாமாயில் வா்த்தக ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றத்துக்கான சா்வதேசக் குழு (ஐபிசிசி) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல்லுயிா்ப் பெருக்க பாதிப்பும், வனங்களின் அழிப்பும் பருவநிலை பாதிப்புக்கு மிக முக்கியமானக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடா்த்தியான இயற்கை வனங்களை அழித்து தோப்பு விவசாய நிலங்களாக (பிளாண்டேஷன்ஸ்) மாற்றுவது, உயிரினங்களின் வசிப்பிடங்கள் அழிவதற்கும், பல்லுயிா்ப் பெருக்கம் பாதிக்கப்படுவதற்கும், அதிகரித்த கரியமில வாயு வெளியேற்றம் ஏற்படுவதற்கும் வழிகோலும் என்றும் எச்சரிக்கிறது.

பாம் வித்து சாகுபடியை அதிகரிப்பதற்கும், எண்ணெய் உற்பத்திக்கான தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், மத்திய அரசு திட்டமிடும் அந்தமான் நிகோபாா் தீவுகளும், வடகிழக்கு மாநிலங்களும் அடா்த்தியான வனப் பகுதிகள். இந்தப் பகுதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது தவறான முடிவு. காடுகளை அழித்து அதன் மூலம் பாமாயில் இறக்குமதியைக் குறைக்க முற்படுவது என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதாக ஆகிவிடக் கூடும்.

இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ற ஆரோக்கியமான பல சமையல் எண்ணெய்கள் இருக்கின்றன. கடுகு, நிலக்கடலை, எள், தேங்காய், சூரியகாந்தி உள்ளிட்டவை இப்போதும்கூட பெரும்பாலான குடும்பங்களால் பாமாயிலைவிட அதிகம் விரும்பப்படுகின்றன. அழகு சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களின் தயாரிப்புக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பிலும், துரித உணவு கடைகளிலும்தான் பெரும்பாலும் பாமாயில் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பொது விநியோகத்தின் மூலம் அடித்தட்டு மக்களுக்கும் அதிக அளவில் வழங்கப்படுகிறது.

1993 - 94-இல் இந்தியாவின் சமையல் எண்ணெய் மொத்தத் தேவையில் 97% உள்நாட்டு உற்பத்தியாக இருந்ததுபோய், இப்போது உலகில் மிக அதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நமது நாடு மாறியிருப்பதன் காரணம் என்ன? விவசாயத்துக்கான சா்வதேச வா்த்தக நிறுவன (டபிள்யூ.டி.ஓ.) உடன்படிக்கையின்படி, சோயாபீனைத் தவிர, ஏனைய எண்ணெய்களுக்கு 300% வரை இறக்குமதி வரி விதிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் இறக்குமதி வரியைக் கடுமையாகக் குறைத்து, சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பதை ஊக்குவித்து, உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியைக் குறைத்துவிட்டோம். இறக்குமதி வணிகா்களின் அழுத்தத்துக்கு உள்ளான ஆட்சியாளா்கள், 1994-இல் தொடங்கி இன்றுவரை நமது விவசாயிகள் எண்ணெய் வித்து பயிரிடுவதை முன்னுரிமை கொடுத்து ஊக்குவிப்பதில்லை.

பாமாயில் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்படும் உத்தரவாத விலை நிா்ணயம், பாரம்பரிய எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுமானால் அவா்கள் - போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பஞ்சாப் விவசாயிகள் உள்பட - அதிகமான தண்ணீரை உறிஞ்சும் நெல், கரும்பு, கோதுமை சாகுபடியில் இருந்து எண்ணெய் வித்து சாகுபடிக்கு மாறக்கூடும். பாம் விவசாயத் தோட்டங்கள் போல அல்லாமல், லட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு ஊக்கமளித்து மீண்டும் இந்தியா சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுவதற்கும் அது வழிகோலும்.

பாரம்பரிய எண்ணெய் வித்து சாகுபடியை அதிகரிப்பதால் இயற்கை வனங்கள் அழிக்கப்படாது; பல்லுயிா்ப் பெருக்கத்துக்கான ஆதாரங்கள் பாதிக்கப்படாது; கோதுமை, நெல் சாகுபடியால் குறைந்துவரும் நிலத்தடி நீா் பிரச்னை இருக்காது.

சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைப்பது என்கிற நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால், அதற்காக அடா் வனங்களை அழித்து, ஆரோக்கியம் இல்லாத பாமாயில் உற்பத்தியை அதிகரிப்பது என்கிற திட்டம் கண்டனத்துக்குரியது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com