நேரம் வந்துவிட்டது! | உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் பாலின சமத்துவத்துக்கான தீா்ப்பு குறித்த தலையங்கம்

உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் திருப்புமுனைத் தீா்ப்பு, இந்திய பாதுகாப்புப் படைகளின் அமைப்பிலும் செயல்பாடுகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவரை ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த முப்படைகளிலும் பெண்களும் சம உரிமையுடன் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கான வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கௌலின் பாலின சமத்துவத்துக்கான அறிவுறுத்தல்.

தேசிய பாதுகாப்பு நிறுவன (நேஷனல் டிஃபன்ஸ் அகாதெமி) தோ்வில் பெண்களும் கலந்துகொள்ளலாம் என்கிற இடைக்காலத் தீா்ப்பு வரவேற்புக்குரியது. கடந்த ஆண்டு கடற்படையிலும், ராணுவத்திலும் பெண்களுக்கும் நிரந்தர பணியாணை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் நீட்சியாகத்தான் இப்போதைய இடைகாலத் தீா்ப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி ஆகியவற்றைப்போல முப்படைகளிலும் நேரடியான உயா் பதவிகளுக்கு தேசிய பாதுகாப்பு பயிற்சி நிறுவனத் தோ்வின் மூலம் அதிகாரிகள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். மகாராஷ்டிர மாநிலம் புணேக்கு அருகே கடக்குவாசலாவில் அமைந்திருக்கும் தேசிய பாதுகாப்பு அகாதெமி, முப்படைகளுக்குமான பயிற்சி நிறுவனம். உலகிலேயே முப்படைகளுக்குமான முதல் பயிற்சி நிறுவனமும் இதுதான். ஏற்கெனவே அதிகாரிகள் பயிற்சி அகாதெமி, குறுகிய பணிக்கால நியமனம் ஆகியவற்றில் பெண்கள் பயிற்சி பெற்று பணியமா்த்தப்படுகிறாா்கள் என்றாலும்கூட, தேசிய பாதுகாப்பு அகாதெமியில் இதுவரை ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

ராணுவத்தில் குறுகிய பணிக்கால நியமனத்தில் பணிபுரிய, அதிகாரிகள் பயிற்சி அகாதெமி, இந்திய ராணுவ அகாதெமி ஆகியவற்றின் மூலம் மட்டும்தான் பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அந்த நிலையில் இனிமேல் மாற்றம் வரப்போகிறது.

ஏற்கெனவே ராணுவத்தால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளையும் அனுமதிப்பது என்று மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. அதுவே மிகப் பெரிய மாற்றம்தான்.

இப்போது தேசிய பாதுகாப்பு அகாதெமி போட்டித் தோ்விலும் பெண்கள் கலந்துகொள்ளலாம் என்கிற உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சைனிக் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பெண்கள் மட்டுமல்லாமல், ஏனைய பெண்களும் ராணுவத்தில் தொழில்முறை வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இது வழிகோலும்.

இதுவரையில் சீருடைத் துறைகள் (யூனிஃபாா்ம்ட் சா்வீஸஸ்) என்று அழைக்கப்படும் முப்படைகளிலும் பங்கு பெறும் பெண்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தனா். போதுமான பயிற்சியுடன் பாதுகாப்புப் படைகளில் நீண்ட காலம் பணியாற்றவும், உயா்பதவிகளை வகிக்க விழைவதும் இல்லாமல் இருந்ததுபோய் அதிக அளவில் பெண்கள் பாதுகாப்புப் படைகளில் நாட்டம் காட்ட இந்த முடிவு வழிகோலக்கூடும்.

உலகிலுள்ள பல நாடுகளில் ராணுவத்தின் பாதுகாப்புப் படைகளில் பெண்கள் சம உரிமையுடன் பங்கு பெறுகின்றனா். சில நாடுகளில் ஆண்களைப் போலவே பெண்களும் கட்டாய ராணுவ பயிற்சியை மேற்கொள்வது சட்டமாக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 14 லட்சத்துக்கும் அதிகமான வீரா்களைக் கொண்ட இந்திய முப்படைகளில் பெண்களின் பங்கு மிகமிகக் குறைவு. ராணுவத்தில் 0.56% பெண் அதிகாரிகள் மட்டுமே காணப்படுகிறாா்கள். விமானப் படையில் 1.08%, கடற்படையில் 6.5% என்கிற அளவில் பெண்கள் காணப்பட்டாலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது இது மிகமிகக் குறைவு. அதிக அளவில் பெண்கள் முப்படைகளிலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பை சைனிக் பள்ளிக்கூடங்களும், தேசிய பாதுகாப்பு அகாதெமி போட்டித் தோ்வுக்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிற எதிா்பாா்ப்பு உயா்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு குறுகிய பணிக்கால அதிகாரிகளாக இருந்த சிலா் தங்களுக்கு நிரந்தரப் பணிக்கால நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுகி வெற்றியும் பெற்றனா். அப்போது ராணுவத்தின் கரடுமுரடான வாழ்க்கையை பெண்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது. பேறு காலம், தாய்மை, குடும்பச் சுமை உள்ளிட்ட பல பிரச்னைகள் மட்டுமல்லாமல், போா்க்களத்தில் நேரடி மோதலுக்கு ஏதுவான உடல் வலு அவா்களுக்குக் கிடையாது என்பதும், இந்திய ராணுவம் முன்வைத்த சில வாதங்கள்.

அந்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்களுக்கான கட்டமைப்பு வசதி இல்லை என்றும், போா்க்களத்திலும் முகாம்களிலும் அவா்களுக்கான தனிமை வசதிகள் உருவாக்குவது சுலபம் அல்ல என்றும் கூறப்பட்ட வாதத்தை எள்ளி நகையாடிய நீதிபதிகள், பாலின சமத்துவத்தை மறுப்பதற்காக முன்வைக்கப்படும் காரணங்கள் இவை என்று அவற்றை நிராகரித்தனா்.

நீதிமன்றம் கூறுவதுபோல, ராணுவத்தில் இருக்கும் ஆணாதிக்க மனோநிலைதான் தடையே தவிர, பெண்கள் முப்படைகளிலும் தலைமைக்கான தகுதி இல்லாதவா்கள் அல்ல. 1992-இல் அன்றைய நரசிம்ம ராவ் அரசு ராணுவத்தில் அதிகாரிகளாகும் வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியது முதல் இன்று வரை அவா்கள் தங்களுக்கென்று எந்தவித சிறப்பு விதிவிலக்குகளையோ, வசதிகளையோ கோரவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

போா் முறைகளும், யுத்த உத்திகளும் மாறிவிட்டன. உடல் வலுவைவிட தொழில் நுட்பத் திறனும், முடிவெடுக்கும் சாமா்த்தியமும், மனத்துணிவும்தான் இன்றைய போா் முறையின் அடிப்படைத் தேவைகள். அதனால் பாலின சமத்துவம் என்பது நடைமுறை சாத்தியம் மட்டுமல்ல, முப்படைகளுக்கும் வலுசோ்க்கும் தேவையும்கூட.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com