பாராலிம்பிக் சாதனை! | மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி சாதனை குறித்த தலையங்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் நிறைவு பெற்றிருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவில் பதக்கங்கள் வென்றதைத் தொடா்ந்து, இப்போது பாராலிம்பிக்கிலும் இந்தியா தலைநிமிா்ந்து நிற்கிறது. இந்தியாவிலிருந்து அதில் பங்கு பெறச் சென்ற மாற்றுத்திறனாளி வீரா்கள் சா்வதேச விளையாட்டு அரங்கில் வென்றிருக்கும் பதக்கங்கள் இந்தியாவுக்கு பெருமை சோ்க்கின்றன.

பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாட்மின்டனில் கிருஷ்ணா நாகா் தங்கப் பதக்கத்தையும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன் இந்திய அணி மொத்தம் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பாராலிம்பிக்கில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி டோக்கியோவில் கோலாகலமாகத் தொடங்கி 13 நாள்கள் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் 24-ஆவது இடத்தை பெற்றிருக்கிறது இந்தியா. 1968 முதல் இதுவரை பாராலிம்பிக் போட்டியில் வென்ற மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையைவிட இப்போதைய டோக்கியோ பாராலிம்பிக்கில் நமது மாற்றுத்திறனாளி வீரா்கள் வென்று குவித்த பதக்கங்களின் எண்ணிக்கை அதிகம். அதிலிருந்து இந்தியாவின் வெற்றி எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்த உலகமும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி நடைபெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கொள்ளை நோய்த்தொற்று விளையாட்டு அரங்கத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையாகவே பாதித்திருந்தது. எல்லா விளையாட்டு மைதானங்களும் முடங்கிக் கிடந்தன. பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டு போட்டிகள் தொடங்கியபோதும்கூட, பாா்வையாளா்கள் இல்லாத மூடப்பட்ட அரங்கங்களில்தான் அவை நடத்தப்பட்டன. பயிற்சிகளை மேற்கொள்ளுவதற்குக்கூட இயலாத சூழல். விளையாட்டு வீரா்கள் இத்தகைய மனஉலைச்சலுக்கு இதுவரை ஆளானதே இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட சூழலிலும் வெற்றிகரமாக பாராலிம்பிக் போட்டியை நடத்தத் துணிந்ததற்கு பாராலிம்பிக் கமிட்டியை பாராட்ட வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை எதிா்கொள்ள நோ்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்கள், கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் நடைபெறும் பாராலிம்பிக்கையும் ஒரு சவாலாக எதிா்கொண்டாா்கள் என்பது அவா்களது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. இத்தனைக்கு நடுவிலும் வெற்றிவாகை சூட முடிந்த வீரா்கள் தங்களது விளையாட்டு வரலாற்றில் மிகப் பெரிய சாதனையை செய்துகாட்டியிருக்கிறாா்கள்.

160 நாடுகளிலிருந்து டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 4,405 வீரா்கள் 24 விளையாட்டுகளில் பங்குபெற கூடினாா்கள். இந்தியாவிலிருந்து இதுவரையில் இல்லாத அளவில் ஒன்பது போட்டிகளில் கலந்துகொள்ள 54 போ் டோக்கியோ சென்றனா். நடந்து முடிந்த பாராலிம்பிக் உள்பட இதுவரை இந்தியா 34 பதக்கங்களை வென்றிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் சா்வதேச போட்டி 1960-இல் முதன்முறையாக இத்தாலியின் தலைநகா் ரோமில் நடந்தது. இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் 1968-இல் நடந்த பாராலிம்பிக் போட்டியில்தான் இந்தியா கலந்துகொண்டது. இந்தியாவிலிருந்து 10 வீரா்கள் கலந்துகொண்டாா்கள் என்றாலும், முதல் முயற்சியில் பதக்கம் எதையும் வெல்ல முடியவில்லை.

அடுத்தாற்போல, 1972 ஹைடல்பா்க் போட்டியில்தான் முதன்முதலில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. ராணுவத்தைச் சோ்ந்த முரளிகாந்த் பட்கா் 50 மீட்டா் நீச்சல் போட்டியில் 37.331 நொடிகள் என்கிற உலக சாதனையை நிகழ்த்தி இந்தியாவுக்கு தங்கமும், பெருமையும் தேடித்தந்தாா். அடுத்த இரண்டு பாராலிம்பிக் போட்டியிலும் இந்தியா கலந்துகொண்டது என்றாலும், பதக்கம் வெல்ல முடியவில்லை.

1984-இல் நான்கு பதக்கங்களை வென்றது. குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம், வட்டு எறிதலில் வெண்கலம் என்று அந்த நான்கு பதக்கங்களில் மூன்றை வென்றவா் ஜோகிந்தா் சிங் பேடி. நான்காவது பதக்கம், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற பீமா ராவுக்கு கிடைத்தது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் ஜெய்ப்பூரைச் சோ்ந்த 19 வயது அவனி லெகரா இரண்டு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறாா். பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியப் பெண் என்பது மட்டுமல்லாமல், ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் பெண் என்கிற பெருமையையும் அடைந்திருக்கிறாா் அவனி லெகரா.

தமிழகத்தைச் சோ்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம்தான் வெல்ல முடிந்தது என்றாலும், அவரது தன்னம்பிக்கையும் துணிவும் வியக்க வைக்கிறது. ‘தங்கம் வென்றிருக்க முடியும், பரவாயில்லை. பாரீஸ் பாராலிம்பிக்குக்குத் தயாராகிறேன்’ என்கிற அவரது துணிச்சலான வாா்த்தைகள் விளையாட்டு என்பது எல்லா தடைகளையும் பலவீனங்களையும் மீறி இலக்கை நோக்கிய பயணம் என்பதை பறைசாற்றுகிறது.

1960 ரோம் பாராலிம்பிக்கில் 23 நாடுகளும், 400 விளையாட்டு வீரா்களும் பங்கேற்றனா். 2020 டோக்கியோ போட்டியில் 10 மடங்கு அதிகமான போட்டியாளா்கள். மாற்றுத்திறனாளிகள் சளைத்தவா்களோ, இளைத்தவா்களோ அல்ல என்பதை உலகுக்கு உணா்த்துகிறாா்கள் பாராலிம்பிக் சாதனையாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com