ஜப்பானில் மாற்றம்! | ஜப்பான் ஆட்சி மாற்றம் குறித்த தலையங்கம்

 கொள்ளை நோய்த்தொற்றை திறமையாகக் கையாளவில்லை என்கிற பரவலான விமர்சனங்களுக்கிடையே ஜப்பான் பிரதமர் யோஹிஷிடே சுகா இந்தமாதக் கடைசியில் நடைபெற இருக்கும் கட்சித் தலைமைக்கான போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார். பிரதமராக ஓராண்டு காலம் மட்டுமே பதவி வகித்த சுகாவின் அறிவிப்பு ஜப்பானிய மக்களை ஆச்சரியப்படுத்துகிறோ இல்லையோ சர்வதேச அளவில் பல நாடுகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
 இச்செய்தி வெளியானவுடன் அவரது அலுவலகத்தை நோக்கிப் படையெடுத்த பத்திரிகையாளர்களிடம் தான் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை அவர் தெரிவித்தார். "கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைமைக்கான தேர்தல் பிரசாரத்தில் எனது கவனத்தைத் திசைதிருப்ப விரும்பவில்லை' என்பதுதான் அவர் கூறியிருக்கும் காரணம். பதவிப் போட்டியைவிட, பிரதமர் என்கிற முறையில் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான் தனது முதல் கடமை என்று அவர் கருதுவாரேயானால், அது மெச்சத் தகுந்த முடிவு.
 லிபரல் டெமாக்ரடிக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஜப்பான் நாடாளுமன்றமான "டயட்'-இல் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கின்றன. செப்டம்பர் 29 அன்று நடைபெறும் கட்சித் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெறுபவர் யாராக இருந்தாலும் பிரதமராக முடியும் என்பதால், கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.
 ஜப்பானில் அதிக நாள் பிரதமராக இருந்த 65 வயது ஷின்ஸோ அபே கடந்த ஆண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக பதவி விலகியபோது, தனது நீண்ட நாள் கூட்டாளியான 71 வயது யோஹிஷிடே சுகாவுக்கு ஆதரவளித்து அவரை பிரதமராக்கினார். 2012 முதல் அமைச்சரவைச் செயலாளராகவும், அபேயின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவராகவும், கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளராகவும் இருந்த சுகா பிரதமரானபோது, சுமுகமான ஆட்சி மாற்றம் நடைபெற்றது. பிரதமராகப் பதவியேற்ற சுகா, அபேயின் அமைச்சரவையை அப்படியே தக்கவைத்துக் கொண்டதுடன், முன்னாள் பிரதமரின் கொள்கைகளையும், இலக்குகளையும் கைவிடாமல் முன்னெடுத்துச் சென்றார். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும், கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதும் அவரது மிகப்பெரிய சவால்களாக இருந்தன.
 அபேயின் வலது கரமாக மிகத் திறமையுடன் செயல்பட்ட சுகா பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது, அவரால் அதே அளவிலான வெற்றியை ஈட்ட முடியவில்லை என்று கடந்த ஓராண்டு நிர்வாகம் உறுதிப்படுத்துகிறது. கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது அவரது மக்கள் செல்வாக்கிற்கு மிகப் பெரிய சறுக்கல். தடுப்பூசி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஏனைய வல்லரசு நாடுகளைவிட மிகவும் தாமதமாகத்தான் ஜப்பானில் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது.
 அண்மைக்காலமாக தடுப்பூசி திட்டம் வேகமெடுத்திருக்கிறது என்றாலும்கூட, ஜப்பான் மக்கள்தொகையில் 32.8% பேருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் 64.6%-உம், அமெரிக்காவில் 52.8%-உம் போடப்பட்டிருக்கும் நிலையில், தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்படாதது ஜப்பான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
 ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் சரிந்து வரும் அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்திவிட முடியும் என்கிற பிரதமர் சுகாவின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி போடப்படாத நிலையில், மிகப் பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வை டோக்கியோவில் நடத்துவதற்கு ஜப்பானியர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் எழுந்தது. அதையும் மீறி ஒலிம்பிக் போட்டியை நடத்திய சுகா நிர்வாகம், வேறுவழி இல்லாமல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்காமல் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.
 டோக்கியோவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுப் பரவல் நான்காவது முறையாக அவசர நிலையை அறிவிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியபோது, சுகா நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதன் பிரதிபலிப்பை உள்ளாட்சித் தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியை எதிர்கொண்டதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் சுகாவின் தலைமையின் மீது மறைமுகமாக அதிருப்தியை வெளிப்படுத்த முற்பட்ட நிலையில்தான் தலைவர் தேர்தலில் பங்குபெறுவதில்லை என்று சுகா அறிவித்திருக்கிறார்.
 தலைவர் தேர்தலில் போட்டியிட இரண்டு பேர் களமிறங்கத் தயாராகிவிட்டனர். ஜப்பானில் அரசியல் செல்வாக்குள்ள தலைவரான நிர்வாக சீர்திருத்த அமைச்சர் டாரோ கோனோ, தான் போட்டியிடப்போவதாக வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். அவருக்கு முன்னதாகவே முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டதுடன், கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான திட்டத்தையும் முன்வைத்து ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கிறார்.
 எட்டாண்டு ஷின்ஸோ அபேயின் ஆட்சிக் காலத்துக்கு முன், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அடிக்கடி பிரதமர்கள் மாறிக்கொண்டிருந்த ஸ்திரமற்ற தலைமை ஜப்பானில் மீண்டும் ஏற்படக்கூடுமென்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். யார் வெற்றி பெற்றாலும் ஜப்பானின் வெளியுறவுக் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. ஜப்பான் பிரதமர் மாற்றம் இந்திய - ஜப்பான் உறவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும்கூட, அபே காலத்தில் இருந்தது போன்ற நெருக்கமான உறவாக அது இருக்காது.
 கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதும், பலவீனமான தலைமை அமைவதும், எந்த நாடாக இருந்தாலும், வரவேற்புக்குரியதல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com