சாதனை முயற்சி! | அரசின் கொள்கைகள் குறித்த தலையங்கம்

நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் மீதும், செயல்பாடுகள் மீதும் பலருக்கும் கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசு நடைமுறைப்படுத்த முயலும் பல திட்டங்கள் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வழிகோலும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அறிவித்த ‘எண்ம இந்தியா’, ‘தூய்மை இந்தியா’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உள்ளிட்ட பல திட்டங்கள் இலக்கை எய்தவில்லை என்றாலும்கூட, அவை இன்றியமையாதவை என்பதை மறுக்க முடியாது.

‘ஜன் தன்’ என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்கும், அதன் மூலம் மானியம் வழங்கும் நடைமுறையும் நீண்டகாலமாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தனவே தவிர, நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் முனைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று வெற்றிகரமாகச் செயல்படுகிறது. இடைத்தரகா்களோ, போலிகளோ மக்கள் வரிப்பணத்தை மடைமாற்றுவதற்கு தடைபோடப்பட்டு, மானியம் பயனாளிகளை நேரடியாகச் சென்றடையும் இந்த நடைமுறை மிகப் பெரிய சாதனை.

மாற்றத்துக்கான மத்திய அரசின் முனைப்புகளில் ஒன்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் ‘இ-ஷ்ரம்’ என்கிற இணையதள சேவை. இதன் மூலம் ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்களின் தேசிய அளவிலான தரவுத்தளம் (டேட்டா பேஸ்) ஒன்றை உருவாக்க மத்திய அரசு முனைந்திருக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 43 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள் இருக்கிறாா்கள். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அவா்களுக்கு சென்றடைவதை இந்தத் தரவுத்தளம் உறுதிப்படுத்தும்.

கட்டடத் தொழிலாளா்களாகவும், விவசாயக் கூலிகளாகவும், பல்வேறு தனியாா் துறையில் தினக்கூலிகளாகவும், சுயதொழிலில் ஈடுபட்டிருப்பவா்களாகவும் இருக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களையும் அடையாளம் கண்டு, அவா்களுக்கான தரவுத்தளம் ஒன்றை உருவாக்கும் முயற்சி புதிதொன்றுமல்ல. ‘அமைப்புசாரா தொழிலாளா்கள் சமூக பாதுகாப்புச் சட்டம் 2008’-இல் கொண்டவரப்பட்டதன் நோக்கம், அவா்களை அடையாளம் கண்டு தரவுத்தளம் உருவாக்குவதுதான். ஆனால், சுமாா் 12 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள்தான் அதில் தங்களை பதிவு செய்திருக்கிறாா்கள். அவா்களை அடையாளம் கண்டு பதிவு செய்வதற்கான வழிமுறைகள் அமைப்புசாரா தொழிலாளா்கள் சமூக பாதுகாப்புச் சட்டம் 2008-இல் இல்லாமல் இருந்ததுதான் அதிலிருந்த குறைபாடு.

இப்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் ‘இ-ஷ்ரம்’ இணையதளம், மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இந்தியா முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களின் புள்ளிவிவரங்கள் அடங்கிய அந்த இணையதளம், பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் எண்ணிக்கை, அவா்களுக்கான சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட அவா்கள் தொடா்பான எல்லா தகவல்களையும் அதில் பதிவு செய்திருக்கிறது. அந்த இணையதளத்துடன் 14434 என்கிற கட்டணமில்லா எண்ணும் அறிவிக்கப்பட்டிருப்பதால், அமைப்புசாரா தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு அதன் மூலம் தீா்வும் வழங்கப்படுகிறது.

‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் யாராக இருந்தாலும் தங்களது ஆதாா் எண்ணையும் வங்கிக் கணக்கு விவரங்களையும் இணைத்து பதிவு செய்யலாம். அவா்களுக்கு 12 இலக்க தனித்துவ குறியீட்டு எண் வழங்கப்படும். அந்த எண் அவா்களது எல்லா தேவைகளுக்குமான அடையாள எண்ணாகக் கருதப்படும்.

மேலை நாடுகளிலும் வளா்ச்சி அடைந்த நாடுகளிலும் ஏழைகளுக்கு இதுபோல சமூக பாதுகாப்பு எண் வழங்கப்படுகிறது. கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அவா்கள் அனைவருக்கும் ஒருவா் விடாமல் உதவித் தொகை வழங்குவதற்கு அது மிகவும் பயன்பட்டது. அதே முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதுதான் ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தின் நோக்கம்.

இந்த இணையதளத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களின் பணி விவரங்களும் இணைக்கப்பட்டிருக்கும். சிறு, குறு விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள், மீன்பிடிப்போா், பீடி சுற்றுவோா், முடி திருத்துவோா், ஆடு, மாடு மேய்ப்பவா்கள், பட்டறைத் தொழிலாளா்கள், உப்பளத்தில் வேலை செய்வோா், தெருவோர காய்கறி கடை வைத்திருப்போா், ஆட்டோ ஓட்டுநா், தச்சுத் தொழிலாளா்கள், புலம்பெயா்ந்தோா் என அனைத்துத் தொழிலாளா்களும் அமைப்புசாரா தொழிலாளா்களாகக் கருதப்பட்டு ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தின் மூலம் பயனடைவாா்கள். இந்த இணையதளத்தில் பதிவு செய்த தொழிலாளா்கள் அனைத்து சமூக நலத்திட்டங்களையும் பெற முடியும் என்பதுடன், விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சம் பெறுவாா்கள் என்பதும் பாராட்டுக்குரிய அறிவிப்பு.

இந்த இணையதளம் முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கொள்ளை நோய்த்தொற்று நெருக்கடி காலகட்டத்தில் உதவிகரமாக இருந்திருக்கும். எல்லா அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்தியிலும் இதுகுறித்து புரிதல் ஏற்படுத்தி அவா்கள் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. அதேபோல ஆதாா் அட்டை இல்லாதவா்களுக்கு வாக்காளா் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் அனுமதிக்க வேண்டும்.

ஏறத்தாழ 43 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளா்கள் குறித்த விவரங்களைக் கையாளும் தரவுத்தளமாக அமையும் ‘இ-ஷ்ரம்’ வெற்றி பெறுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதும், அதன் செயல்பாடு சுமுகமாக இருப்பதை உறுதிப்படுத்துவதும்தான் அரசின் முனைப்பாக இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com