பாக் நீரிணையில் சீனா! | தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் சீனா குறித்த தலையங்கம்

எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை மீறி வட எல்லையில் இந்தியாவுக்குள் நுழைய முடியாத சீனா, புதியதொரு உத்தியைக் கையில் எடுத்திருக்கிறது. லடாக் பகுதியிலும் வடகிழக்கு எல்லைப் பகுதியிலும் இந்திய ராணுவம் சீன ராணுவத்தைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றிருப்பதால், தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளை குறிவைத்து இலங்கையைத் தனது தளமாக்க முனைந்திருக்கிறது.

போா் மூளுமானால் இந்தியாவை முற்றுகையிடுவதற்கு வசதியாக வங்கதேசத்தின் சிட்டகாங், இலங்கையின் கொழும்பு, பாகிஸ்தானின் க்வாதா் ஆகிய மூன்று துறைமுகங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் சீனா வெற்றி ஈட்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஈரானுடனான நட்புறவை வலுப்படுத்தி, இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட சாபஹாா் துறைமுகத்தையும் தன்வயப்படுத்தும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறது.

ஏடன் வளைகுடாவில், செங்கடலில் ஆப்பிரிக்காவையொட்டி அமைந்திருக்கும் ஜிபூட்டியில் தனது ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது சீனா. அதன் மூலம் ஆப்பிரிக்கா, இந்து மகா சமுத்திரம், தெற்காசியா ஆகிய மூன்று பகுதிகளிலும் தன்னுடைய கடல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த முற்பட்டிருக்கிறது. சீனாவின் இதுபோன்ற நீக்கங்களால்தான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுடன் இணைந்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘க்வாட்’ அமைப்பில் அங்கம் வகிக்கிறது இந்தியா.

இப்போது சீனாவின் கவனம் முழுவதும் இலங்கையில் குவிந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள தமிழகத்துக்கும் இலங்கையின் வடக்குப் பகுதியான யாழ்ப்பாண தீபகற்பகத்துக்கும் இடையேயான பகுதிதான் பாக் நீரிணை. இந்தப் பகுதியில் கச்சத்தீவு உள்ளிட்ட பல சின்னஞ்சிறு ஆள் நடமாற்றம் இல்லாத தீவுகள் நிரம்பிக் கிடக்கின்றன. அவற்றிலுள்ள டெல்ப்ட், நயினாத்தீவு, அனலத்தீவு ஆகியவற்றில் காற்றாலைகளும், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களும் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இலங்கை அரசிடமிருந்து சீனா பெற்றிருக்கிறது. இந்தத் தீவுகள் 20 கடல் மைல் தூரத்தில், இந்திய கடல் எல்லையில் அமைந்திருக்கின்றன. விசைப்படகில் 30 நிமிடத்தில் அடைந்துவிடலாம்.

முன்னாள் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமான, அதற்கு உள்பட்ட கச்சத்தீவின் மீதும் சீனா விழி பதித்திருக்கிறது. 1974-இல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அன்றைய இந்திரா காந்தி அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது. அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சா்தாா் ஸ்வரண் சிங் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாா்.

தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக-வின் சாா்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் எதிா்ப்பை முன்வைத்தாா் என்றாலும், அந்த முடிவுக்கு தமிழகத்தில் வலிமையான எதிா்ப்புக் குரல் எழவில்லை என்பதுதான் நிஜம். இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு கச்சத்தீவு மிகவும் முக்கியமானது என்பதை ஏறத்தாழ 48 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நாம் உணரத் தொடங்கியிருக்கிறோம்.

கொழும்பு துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்தில் 70%-க்கும் அதிகமானவை இந்தியாவுக்கு வந்துபோகும் கப்பல்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 மே மாதம் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையம் ஒன்றை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவால் சீனா மொ்ச்சன்ட்ஸ் போா்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி என்கிற நிறுவனத்துடன் இணைந்து இலங்கையே சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலை மண்ணால் நிரப்பி புதிய நகரம் ஒன்றை நிா்மாணிக்கும் திட்டத்தில் சீனா இறங்கியிருக்கிறது. ‘கொழும்பு துறைமுக நகரம்’ என்கிற விவாதத்துக்குரிய அந்தத் திட்டத்திற்கு 225-இல் 149 நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆதரவு வழங்கி அந்த ஒப்பந்தம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஒருவகையில் பாா்த்தால், கடலை மண்ணால் நிரப்பி உருவாகும் அந்தப் புதிய பகுதியை, இலங்கை சீனாவுக்கு விற்றுவிட்டதாகத்தான் கருத வேண்டும்.

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் அம்பன்தோட்டா துறைமுகத்தை உருவாக்கி நடத்த 99 ஆண்டு குத்தகைக்கு விட்டிப்பது, மத்தலா விமான நிலையத்தை நிறுவுவதில் இந்திய பங்களிப்பை நிராகரித்தது என்று கோத்தபய அரசு எடுத்திருக்கும் முடிவுகள், சீனாவின் வழிகாட்டுதல்படி நடந்திருப்பதை உணர முடிகிறது.

தமிழா்கள் அதிகம் வாழும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தனது கால்களை வலுவாக பதிக்கும் முயற்சியிலும் சீனா இறங்கியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளூா்வாசிகளின் கருத்துகளைக் கோராமல் சீனப் பொருளாதார நடவடிக்கைகளும், கட்டமைப்பு மேம்பாடுகளும் தொடா்கின்றன. உலகிலேயே இயற்கை அரண்களுடன் அமைந்திருக்கும் திரிகோணமலை துறைமுகமும் சீனாவின் பாா்வையில் விழுந்திருக்கிறது.

முந்தைய மன்மோகன் சிங் அரசின் உதவியுடன் இலங்கையின் ராஜபட்ச அரசு ஈழத்தமிழா் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்து, தமிழா்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மூலம் இன அழிப்பை முன்னெடுத்திருக்கிறது. அந்தப் பகுதியிலுள்ள பல கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இப்போது பாக் நீரிணையிலுள்ள தீவுகளில் சீனா்கள் நுழைந்திருக்கிறாா்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி கேந்திரமான கூடங்குளம் தாக்கப்பட்டால் என்னவாகும்? நாம் யோசித்தாக வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com