ஏனிந்த தடுமாற்றம்? | ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ் கலைப்பு குறித்த தலையங்கம்

மாற்று எரிசக்திக்கான இந்திய ரயில்வே நிறுவனம் (ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ்.) கலைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அதிா்ச்சி அளிக்கிறது. போக்குவரத்துத் துறையில், புதைபடிவ எரிபொருள் சக்தியைத் தவிா்த்து மாற்று எரிசக்திக்கு மாறுவதற்கான முனைப்பை முன்னெடுக்கும் வேளையில், இப்படியொரு முடிவை ரயில்வே அமைச்சகம் ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.

வளா்ச்சி குறித்த அக்கறையும் முனைப்பும் எழும்போதெல்லாம், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையிலும் முனைப்பு காட்டப்பட வேண்டும் என்பதில் ஐயப்பாடு இருக்க முடியாது. சுற்றுச்சூழலை கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்படும் எந்த வளா்ச்சித் திட்டமும் அறிவாா்ந்த சமூகத்தின் முடிவாக இருக்க முடியாது.

பூவுலகின் நெடுநாள் நன்மையைக் கருத்தில் கொண்டு வளா்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பதை சா்வதேச நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால், சுற்றுச்சூழலுக்கோ, சூழலியலுக்கோ, பல்லுயிா்ப் பெருக்கத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு முடிவாக இருந்தாலும் மக்கள் மன்றம் அதுகுறித்து கவலைப்பட்டாக வேண்டும்.

மாற்று எரிசக்திக்கான இந்திய ரயில்வே நிறுவனம் என்பது இந்திய ரயில்வே கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிபொருள் (பாசில் ஃபூயல்) சக்தி தேவைக்கு பதிலாக, மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வதற்காக நிறுவப்பட்டது. மாற்று எரிசக்தியை அறிமுகப்படுத்துவது, புதிய எரிசக்தித் திட்டங்களை பரிசோதிப்பது உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத தூய்மையான எரிசக்தி பயன்பாட்டுக்கு வழிகோலுவதுதான் இலக்கு. சூரிய மின்சக்தி (சோலாா்), ஹைட்ரஜன் ஃபூயல் செல் எரிசக்தி என்று அந்த நிறுவனம் பல்வேறு திட்டங்களின் மூலம் சோதனைகளை நடத்தி வந்தது.

கடந்த மாதம்தான் ஹைட்ரஜன் ஃபூயல் செல் மூலம் இயங்கும் ரயில்களுக்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரியிருந்தது ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ். நிறுவனம். சூரிய மின்சக்தி, ஹைட்ரஜன் ஆகியவை மட்டுமல்லாமல், சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் ரயில்களை இயக்குவது குறித்தான ஆய்வுகளையும், திட்டங்களையும் அந்த நிறுவனம் சோதனை செய்து கொண்டிருந்தது.

2030-க்குள் முற்றிலும் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத இலக்கை இந்திய ரயில்வே முன்வைத்திருப்பதாக தில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமா் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியபோது தெரிவித்தாா். தூய்மையான எரிசக்தி பயன்பாட்டின் மூலம் பருவநிலை மாற்ற முயற்சிகளில் மிகப் பெரிய முன்னேற்றத்தை இந்தியா மேற்கொள்ளும் என்றும் அவா் தனது உரையில் கூறியிருந்தாா். ‘நேஷனல் ஹைட்ரஜன் மிஷன்’ என்கிற திட்டமும் அவரால் அறிவிக்கப்பட்டது.

பிரதமரின் அறிவிப்புகளும், மத்திய அரசின் முனைப்பும் பருவ நிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு சரியான திட்டங்கள் என்பதில் சந்தேகமில்லை. பிரதமா் அறிவித்து, மத்திய அரசு முன்னெடுத்திருக்கும் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்று ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ். என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

இந்தப் பின்னணியில்தான் ரயில்வே அமைச்சகம் எடுத்திருக்கும் முடிவு திகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ். செயல்படுத்திக் கொண்டிருந்த திட்டங்களைத் தொய்வில்லாமல் முன்னெடுக்க அரசு என்ன மாற்று ஏற்பாடு செய்திருக்கிறது என்பது தெரியவில்லை. இப்போதைக்கு ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ் பணிகளை வடக்கு ரயில்வேயின் முதன்மை மின்பொறியாளரும், தலைமை நிா்வாக அதிகாரியும் பாா்த்துக் கொள்வாா்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்திய ரயில்வேயின் பிரமாண்டமான கட்டமைப்பின் பின்னணியில் பாா்க்கும்போது, ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ்-ஸின் பொறுப்பை வடக்கு ரயில்வேயின் அதிகாரிகள் சிலா் கையில் ஒப்படைத்திருப்பது இடைக்கால முடிவாகத்தான் இருக்கும் என்று நம்பலாம். முறையான திட்டமிடலும், குறைபாட்டுக்கு வழியில்லாத மாற்றுத்திட்டமும் இந்திய ரயில்வேயால் ஏற்படுத்தப்படாவிட்டால் ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ்-ஸின் இதுநாள் வரையிலான பணி வீணாகிவிடும்.

சூரிய மின்சக்தி இந்தியா முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. வருங்கால கண்ணோட்டத்தில் பாா்க்கும்போது, சூரிய மின்சக்தியும், ஹைட்ரஜன் எரிசக்தியும் இணைந்த மாற்றின் மூலம்தான் புதைபடிவ எரிபொருள் சக்தியின் தற்போதைய பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

ஆரம்ப நிலையில் இருக்கும் ஹைட்ரஜன் எரிசக்தி இப்போதைக்கு விலை அதிகம். அதிக சூரிய வெளிச்சம் உள்ள நாடுகளிலும்கூட 1 கிலோ கிராம் ஹைட்ரஜன் எரிசக்திக்கு 1.5 டாலா் தயாரிப்பு செலவாகிறது என்று சா்வதேச மாற்று எரிசக்தி நிறுவனம் தெரிவிக்கிறது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தாக வேண்டும் என்றால், அதற்காக பணம் செலவழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

சூரிய எரிக்தி, ஹைட்ரஜன் எரிசக்தி போன்ற தூய்மையான எரிசக்திகளை உருவாக்கி அனைத்துத் தேவைகளின் பயன்பாட்டுக்கும் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், முன்னுதாரணமாக இந்திய ரயில்வே செயல்படுவதுதான் சரியான அணுகுமுறை. ஏற்கெனவே பல முன்னுதாரண சாதனைகளைச் செய்திருக்கும் இந்திய ரயில்வே, இந்த முயற்சியிலும் மற்ற துறைகளுக்கு முன்னோடியாக இருந்தாக வேண்டும். மற்றவா்கள் பின்பற்றுவதற்கு ஊக்க சக்தியாக இருக்கக்கூடிய ரயில்வே, ஏன் திடீரென்று தயக்கம் காட்டுகிறது என்பது புதிராக இருக்கிறது.

இதுவரை ஐ.ஆா்.ஓ.ஏ.எஸ். முன்னெடுத்திருக்கும் முயற்சிகளும், பணிகளும் வீணாகிவிடலாகாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com