அதிகாரக் குவியல்! | புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த தலையங்கம்

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இன்னமும் உருவாகவில்லை. நீதிமன்றங்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை தொடர்கிறது. 
அதிகாரக் குவியல்! | புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த தலையங்கம்

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இன்னமும் உருவாகவில்லை. நீதிமன்றங்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை தொடர்கிறது. 

தமிழகம், புதுவை சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஆண்டு, ஏப்ரலில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசுகள் ஆட்சியில் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. 

மத்திய, மாநிலத் தலைமையிடங்களில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை மாவட்ட, வட்ட, கிராம அளவில் பரவலாக்கும் நோக்குடன் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் முன்மொழியப்பட்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் முறையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 73-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் (1992) மூலம் நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்த 1993- ஆம் ஆண்டு, ஏப்ரலில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஏதாவது சில காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிவைப்பது வாடிக்கையாக உள்ளது. பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுவை கடந்த 1962-இல் முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது. யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள புதுவையில், இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 

கடந்த 1968-இல் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, 38 ஆண்டுகள் கழித்து 2006-இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளால் தள்ளிக்கொண்டே போகிறது.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், உழவர்கரை என ஐந்து நகராட்சிகளும், வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருநள்ளாறு, திருமலைராஜன்பட்டினம், நிரவி, நெடுங்காடு, கோட்டுச்சேரி என 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இந்த கொம்யூன் பஞ்சாயத்துகளில் மொத்தம் 98 கிராம பஞ்சாயத்துகள் இடம் பெற்றுள்ளன. 

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதியுதவி அளிக்கிறது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும். புதுவையில் கடந்த 11 ஆண்டுகளாக  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிக்கொண்டே போவதால், மத்திய அரசின் நிதியுதவியைப் பெற முடியவில்லை.

புதுவையில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதிலும், மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்த அளவு நிதி கிடைக்காத சூழல்தான் தொடர்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கு வந்தால் மத்திய அரசின் நிதியுதவியை கோரிப் பெற முடியும். ஆனால், புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆளும் என்.ஆர். காங்கிரஸ் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் எதார்த்த நிலை.

புதுவையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சுமார் 10,000 முதல் 12,000 வாக்காளர்களே உள்ளனர். தமிழகத்தின் ஒரு மாநகராட்சி வார்டு அளவுக்குத்தான் புதுவையில் பேரவைத் தொகுதி உள்ளது. எனவே, புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நகர, கிராமப்புற அளவில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கு வந்துவிட்டால், தங்களது செல்வாக்கும் அதிகாரமும் குறைந்துவிடும் என எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர். அவர்களது இந்த மனப்போக்கு மாறினால் மட்டுமே புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமாகும்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுப்பதை அரசியல் கட்சியினர் நிறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின, பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக, புதுவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டது. எனவே, புதுவை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான சட்டப் போராட்டம் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

ஜனநாயக நாட்டில் மத்திய, மாநில அரசுகளிடம் மட்டுமே அதிகாரங்கள் குவிந்து கிடப்பது நல்லதல்ல. மாவட்ட, வட்ட, கிராம அளவில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டுமானால், அதற்கு உள்ளாட்சித் தேர்தல்தான் ஒரே வழி. இதை உணர்ந்து இந்தத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் புதுவை அரசியல் கட்சியினர் ஈடுபட வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com