
நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பது என்பதை சகித்துக்கொள்ள முடியாது. அது அரசுப் பள்ளியோ தனியார் பள்ளியோ எதுவாக இருந்தாலும் வருங்கால சந்ததியரை உருவாக்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சென்ற வாரம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியொன்றில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. எட்டு வயது சிறுவன் தீக்ஷித்தை காலையில் பள்ளிக்கு அனுப்பிய அவரது பெற்றோர் வெற்றிவேலும், ஜெனீஃபரும் தங்கள் அன்பு மகன் திரும்பி வரமாட்டான் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், நடந்தது என்னவோ அதுதான்.
தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷித், பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் சென்றிருக்கிறான். வாகனம் பள்ளியையும் அடைந்திருக்கிறது. பள்ளிக்கு வந்ததும் வாகனத்திலிருந்து இறங்கி, முன்புறம் இடது ஓரமாக நின்றிருக்கிறார் அந்தச் சிறுவன். அதைக்கூட கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை எடுத்தபோது சக்கரத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார் சிறுவன் தீக்ஷித்.
வாகனம் மோதி தீக்ஷித் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டுமே பள்ளி ஊழியர் ஒருவர் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் தங்களது மகன் இறந்துவிட்டது பெற்றோருக்குத் தெரிந்திருக்கிறது.
அந்த வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமல்லாமல், கண்காணிப்பாளர் ஒருவர் இருந்திருந்தாலோ பள்ளி வாகனங்களில் வரும் குழந்தைகள் பத்திரமாக இறங்கி வகுப்புகளுக்குச் செல்வதை மேற்பார்வையிட ஆசிரியர் ஒருவரை நிர்வாகம் நியமித்திருந்தாலோ ஓட்டுநர் பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருந்தாலோ தீக்ஷித்தின் விலை மதிக்கமுடியாத உயிரை இழந்திருக்க மாட்டோம்.
தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் வாகனங்களை இயக்குவது மாணவர்களின் வசதிக்காக என்பதாக அல்லாமல், லாபம் ஈட்டுவதற்காக என்கிற போக்கு காணப்படுகிறது. கல்விக் கட்டணத்தைப் போலவே வாகனக் கட்டணமும் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டித் தருகிறது. அதற்கேற்றாற்போல, தரமான வாகனங்களை இயக்குவதிலும், முறையான தேர்ச்சிபெற்ற ஓட்டுநர்களை நியமிப்பதிலும் பள்ளி நிர்வாகங்கள் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கான முதலீட்டைச் செய்வதில்லை.
இது இன்று நேற்று தொடங்கிய பிரச்னை அல்ல. 1997-இல் உச்சநீதிமன்றம் பள்ளி வாகனங்களுக்கு சில பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. புதுதில்லி வஸீராபாத் பகுதியில் பள்ளி வாகனமொன்று யமுனை நதியில் விழுந்து 27 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை மறந்துவிட முடியாது. அதன் பின்னணியில்தான் உச்சநீதிமன்றம் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது.
பள்ளி நிர்வாகம், வாகன ஓட்டுநர்களின் அஜாக்கிரதையினால் குழந்தைகள் உயிரிழப்பது இதற்கு முன்பும் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. 2012-இல் சென்னை முடிச்சூரில் ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் 6 வயது சிறுமி பள்ளிக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அந்தப் பழைய வாகனத்தின் துருபிடித்த தரைத் தளம் பெயர்ந்ததில் ஏற்பட்ட ஓட்டையில் விழுந்துவிட்ட சிறுமி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். 2016-இல் வாணியம்பாடியில் 9 வயது சிறுவனொருவன் வாகனத்தில் ஏறும்போது ஓட்டுநர் வண்டியை இயக்கியதால், கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அதுகூடத் தெரியாமல் ஓட்டுநர் வாகனத்தை விரைந்து செலுத்தினார் என்பதுதான் வேதனை.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதே அவலம் தொடர்கிறது. 2019-இல் நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த ஆண்டில் மட்டும் 11,000 குழந்தைகள் சாலை விபத்தில் உயிரிழந்திருந்தனர். முந்தைய ஆண்டைவிட அது 11.94% அதிகம்.
சாலை விபத்தில் மிக அதிகமாக சிறுவர்கள் உயிரிழக்கும் இந்திய மாநிலம் உத்தர பிரதேசம் (2,388) என்றால் அடுத்த இடத்தில் இருக்கும் பெருமை (?) நமது தமிழகத்துக்கு (1,153), மூன்றாவது இடத்தில் 979 உயிரிழப்புகளுடன் பஞ்சாப் மாநிலம் இருக்கிறது. இது 2019-ஆம் ஆண்டின் புள்ளிவிவரம். கடந்த மூன்று வருடங்களில் இந்த எண்ணிக்கை, பெருகிவரும் தனியார் பள்ளிகளைப் போலவே கூடியிருக்குமே தவிர, குறைந்திருக்க வாய்ப்பில்லை.
குறிப்பிட்ட சில முக்கியமான பள்ளிகளைத் தவிர, ஏனைய பள்ளி நிர்வாகங்கள் தங்களது பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் குறித்துப் போதிய கவனம் செலுத்துவதில்லை. அரசுப் போக்குவரத்துத் துறையால் புறக்கணிக்கப்படும் வாகனங்களை விண்ணப்பித்துப் பெறும் பள்ளிகளும் உண்டு.
தரமான புதிய வாகனங்களை இயக்குவதை பள்ளியின் கௌரவமாக நினைக்கும் நிர்வாகத்தினரும்கூட ஓட்டுநர்கள், கண்காணிப்பாளர்கள் விஷயத்தில் போதிய கவனம் செலுத்துவதில்லை. குறைந்த ஊதியத்தில் அனுபவமில்லாதவர்களை நியமிக்கின்றனர். வாகனக் கட்டணம் வசூலிப்பதில் காட்டும் முனைப்பு, கவனத்துடனும் அக்கறையுடனும் மாணவர்களை அழைத்து வந்து திருப்பிக் கொண்டுபோய் விடுவதில் காட்டப்படுவதில்லை.
மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் வருவதைத் தடை செய்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. இது வரவேற்புக்குரிய முடிவு. அதேபோல, பள்ளி வாகனங்கள் குறித்த விதிமுறைகளும், வரைமுறைகளும் கண்காணிக்கப்பட்டு பள்ளிச் சிறார்களின் பாதுகாப்புக்கு நிர்வாகத்தின் பொறுப்பேற்பையும் உறுதிப்படுத்த வேண்டும். வீடு தேடி மருத்துவம்போல, வீட்டுக்கு அருகில் கல்வி நிலையங்கள் இதற்குத் தீர்வாக அமையும்.