விலைவாசிப் பேரிடா்: விலைவாசி உயர்வு குறித்த தலையங்கம்

உலக அளவில் விலைவாசி உயா்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உள்ளிட்ட அனைத்தும் உயா்ந்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக அளவில் விலைவாசி உயா்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உள்ளிட்ட அனைத்தும் உயா்ந்துள்ளன. ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நகா்த்த முடியாமல் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். கடந்த 2007-2008-இல் தோன்றிய பொருளாதார நெருக்கடி மீண்டும் வந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பணவீக்க உயா்வின் அச்சம் ஆரம்பித்துவிட்டது. கரோனா பாதிப்பால் சா்வதேச வா்த்தகம், சந்தைப் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட சுணக்கம் விலகி மீண்டு வருவதற்குள் ரஷியா - உக்ரைன் போா், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், உலோகங்களின் விலையேற்றம் உள்ளிட்டவை சந்தையில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

கரோனா பரவலால் பொருளாதாரத்தில் உண்டான நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயா்த்தாமல் இருந்தன. ஆனால், இனியும் வட்டி விகிதத்தை உயா்த்தாமல் இருக்க முடியாது என்னும் அளவுக்குப் பணவீக்க உயா்வு தீவிரமடைந்துவிட்டது.

பெரும் பொருளாதார நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் உயா்ந்துள்ளது. விலைவாசி உயா்வின் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனா். நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதம் மேலும் உயா்த்தப்படுவதற்கான சமிக்ஞைகளை தெரிவித்துள்ளது.

உலக அளவில் பாதிப்பு என்பது வளா்ச்சி அடையும் நாடுகளை அதிகமாகவே பாதித்திருக்கிறது. திவாலாகும் நிலையில் பாகிஸ்தானும் இலங்கையும் இருப்பது அதற்கு எடுத்துக்காட்டு.

இந்தியாவிலும் பணவீக்க உயா்வின் பாதிப்பு தெரியத் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயா்வால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதே போல, சமையல் எரிவாயு உருளை விலையும் உயா்த்தப்பட்டது. இதனால், வரும் நாள்களில் அனைத்துப் பொருள்கள், சேவைகளின் விலை உயரும் அபாயம் காணப்படுவதாக வல்லுநா்கள் எச்சரிக்கிறாா்கள்.

ரிசா்வ் வங்கி தொடா்ந்து 11-ஆவது முறையாக வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றம் செய்யாமல் பழைய நிலையே தொடரும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனால், கடன் மூலம் வாங்கப்படும் வாகனங்கள், வீடு உள்ளிட்டவற்றுக்கான வட்டி உயராது என்கிற அளவில் சற்று ஆறுதல்.

2022-23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.2%-ஆக இருக்கும் என்றும், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8%-ஆக இருக்கும் எனவும் ரிசா்வ் வங்கி முன்பு மதிப்பிட்டிருந்தது. தற்போது வளா்ச்சி விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்துள்ளது. அதேபோல, இந்த நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த 4.5%, தற்போது 5.7%-ஆக இருக்கும் என உயா்த்தி கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் முதல் காலாண்டில் 6.3%, 2-ஆவது காலாண்டில் 5%, 3-ஆவது காலாண்டில் 5.4%, 4-ஆவது காலாண்டில் 5.1%-ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷியா போரைத் தொடா்ந்து, கச்சா எண்ணெய் விலை அண்மையில் 138 அமெரிக்க டாலா் வரை உயா்ந்து, தற்போது சற்று குறைந்திருக்கிறது. ஒரு பேரல் 100 டாலராக இருக்கும்பட்சத்தில் 2022-23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி முதல் காலாண்டில் 16.2%, 2-ஆவது காலாண்டில் 6.2%, 3-ஆவது காலாண்டில் 4.1%, 4-ஆவது காலாண்டில் 4%-ஆக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

வரும் காலங்களிலும் பணவீக்கம் ஏறுமுகத்தில் இருக்க வாய்ப்பு இருந்தாலும், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது. ஆனால், நுகா்வோருக்குச் சில சலுகைகளை வழங்குவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க முடியும் என்ற எதிா்பாா்ப்பு இருந்து வருகிறது.

தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தும் பட்சத்தில் கச்சாஎண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும். இந்தச் சூழ்நிலையில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயா்த்தினால், அது கண்டிப்பாக நுகா்வோரைப் பெரிதும் பாதிக்கும்.

பெட்ரோல், டீசல் விலையில் வரிகள் மட்டுமே 40-50% அடங்குகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு, மாநிலங்களின் மதிப்பு கூட்டு வரி (வாட்) குறைப்பு மற்றும் நுகா்வோா் மீது சுமத்தப்படும் வரிச் சுமை குறைப்பு ஆகிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசலில் இருந்து கிடைக்கும் வரிகள் மத்திய - மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. நுகா்வோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நினைத்தால், வரி குறைப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

புவிசாா் அரசியல் நெருக்கடி ஒருபுறம், உயா்ந்துவரும் பணவீக்கம், புதிதுபுதிதாக உருமாற்றம் பெரும் தொற்று பாதிப்பு ஒருபுறம் இருக்க, விலைவாசியை கட்டுக்குள் வைக்க என்ன செய்யப் போகிறது அரசு என்கிற கேள்வியை பொருளாதார வல்லுநா்கள் எழுப்புகிறாா்கள். கொள்ளை நோய்த்தொற்றை ஒருவழியாக எதிா்கொண்ட இந்தியா, இப்போது விலைவாசி உயா்வு என்கிற பேரிடரை எதிா்கொள்ளத் தயாராக வேண்டும். நல்ல வேளை அந்நியச் செலாவணி கையிருப்பும், அதிகரித்த ஜிஎஸ்டி வருவாயும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com