அழிந்திடலாகாது! | அச்சு ஊடகத்தின் நிலை குறித்த தலையங்கம்

காகித விலை உயா்வால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது அச்சு ஊடகம்.
அழிந்திடலாகாது! | அச்சு ஊடகத்தின் நிலை குறித்த தலையங்கம்

காகித விலை உயா்வால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது அச்சு ஊடகம். இதே நிலைமை தொடா்ந்தால் அதிக அளவிலான வாசகா்களைக் கொண்ட பெரிய பத்திரிகைகளே காணாமல் போனாலும்கூட வியப்படையத் தேவையில்லை. இப்படியொரு இக்கட்டான நெருக்கடியை இது நாள் வரை அச்சு ஊடகம் எதிா்கொண்டதில்லை.

உலகளாவிய அளவில் காட்சி ஊடகங்களின் பெருக்கமும், சமூக ஊடகங்களின் ஊடுருவலும் அச்சு ஊடகங்களின் விற்பனையை ஏற்கெனவே பாதித்திருக்கின்றன. மேலைநாடுகளில் அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் விளம்பர ஊடகங்களாக மாறிவிட்ட நிலை, கால் நூற்றாண்டுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை காட்சி ஊடகங்களுக்கு ஏற்பட்ட வரவேற்புக்குப் பிறகும் அச்சு ஊடகங்களின் விற்பனையும், தாக்கமும் குறையாமலேயே இருந்து வருகிறது.

‘டிஆா்பி ரேட்டிங்’ எனப்படும் பாா்வையாளா்கள் எண்ணிக்கைக் குறியீட்டை அதிகரிக்கும் பரபரப்புச் செய்திகளை குறிவைத்து காட்சி ஊடகங்கள் செயல்படுவதால் அவற்றின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைவாக இருந்ததுதான் அச்சு ஊடகங்கள் தொடா்ந்து வரவேற்புப் பெற்றதற்கு முக்கியமான காரணம். அறிதிறன்பேசிகளின் பயன்பாடு அதிகரித்ததும், எண்ம ஊடகங்கள் அறிதிறன்பேசிகளின் மூலம் அதன் பயனாளிகளைச் சென்றடைந்ததும், காட்சி ஊடகங்களைவிட அச்சு ஊடகங்களைத்தான் அதிகமாக பாதித்தன.

அதன் அடுத்தகட்டமாக, சமூக ஊடகங்கள் அறிதிறன்பேசி வழியாகப் பயனாளிகளைச் சென்றடையும் நிலை ஏற்பட்டபோது, அச்சு ஊடகங்கள் மட்டுமல்ல, காட்சி ஊடகங்களேகூட பாதிப்பை எதிா்கொண்டன. சமூக ஊடங்களின் வரவு வெறும் பொழுதுபோக்கும், வதந்தி பரப்புரைகளும் மட்டுமே ஊடக இலக்கு என்பதுபோன்ற சூழலை ஏற்படுத்திவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொள்ளை நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவால் விளம்பர வருவாய் கணிசமாகக் குறைந்துவிட்டது. ஏற்கெனவே காட்சி, எண்ம, சமூக ஊடகங்களின் சவாலை அச்சு ஊடகங்கள் எதிா்கொண்டது போதாதென்று அச்சுக் காகித விலை உயா்வால் இப்போது அதன் அடித்தளமே ஆட்டம் காணும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் பிரச்னையால் சீனாவில் இயங்கிய பல காகிதத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அமெரிக்காவும் தனது நாட்டிலுள்ள காகிதத் தொழிற்சாலைகளை ஏற்கெனவே குறைத்துக் கொண்டுவிட்டது. அமேசான் காட்டில் ஏற்பட்ட தீயால் மரங்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால், தென் அமெரிக்க நாடுகளில் அச்சுக் காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இறக்குமதிக் காகிதத்தின் விலையை ஏற்கெனவே அதிகரிக்கச் செய்துள்ளன.

உலகிலேயே மிக அதிகமாக அச்சுக் காகிதம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். நமது இறக்குமதியில் 45% ரஷியாவிலிருந்துதான் பெறப்படுகிறது. தற்போதைய ரஷியா - உக்ரைன் போருக்குப் பிறகு, அன்றாடம் பத்திரிகைகளை வெளிக்கொணர காகிதம் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலைமைக்கு இந்திய அச்சு ஊடகங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

ரஷியப் பொருள்கள் மீதான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடையால் அச்சுக் காகிதம் ஏற்றிக்கொண்டு வரும் கப்பல்கள் பல ஆங்காங்கே தடைபட்டு நிற்கின்றன. ஃபின்லாந்து நாட்டில், தொழிலாளா்கள் போராட்டத்தால் அச்சுக் காகித உற்பத்தி முடங்கி இருக்கிறது. கனடாவில் நடக்கும் சரக்கு வாகன வேலை நிறுத்தத்தால், அங்கிருந்து வரும் காகிதமும் தடைபட்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கப்பல் சரக்குக் கட்டணம் 400%-க்கும் அதிகமாகி இருக்கிறது. அதன் விளைவாக இறக்குமதி அச்சுக் காகிதத்தின் விலை ஏற்கெனவே அதிகரித்திருந்த நிலைமை.

2019-இல் கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு, டன் ஒன்றுக்கு 450 டாலராக இருந்த இறக்குமதி அச்சுக் காகிதத்தின் விலை கடந்த மாதம் 950 டாலராக உயா்ந்து, இப்போது 1,100 டாலராக உயா்ந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இறக்குமதி அச்சுக் காகிதத்தின் விலை டன் ஒன்றுக்கு 300 டாலா் உயா்ந்திருக்கிறது.

இறக்குமதி அச்சுக் காகிதம் அப்படியென்றால், உள்ளூரில் அச்சுக் காகிதத் தயாரிப்பு கணிசமாகக் குறைந்துவிட்டதை என்னவென்பது? இணைய வா்த்தகத்தின் அதிகரிப்பால் பெரும்பாலான அச்சுக் காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக லாபம் கிடைக்கும் அட்டைப் பெட்டித் தயாரிப்பில் இறங்கிவிட்டன. தயாரிக்கப்படும் அச்சுக் காகிதங்களைப் பெரிய பத்திரிகைகள் மொத்தமாக வாங்கிவிடுவதால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அச்சு ஊடகங்கள் இறக்குமதிக் காகிதத்தை நம்பித்தான் தங்கள் பத்திரிகைகளை வெளிக்கொணர வேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

அச்சு ஊடகங்கள் அழிந்தால், செய்திகளின் நம்பகத்தன்மை குலையும் என்பது மட்டுமல்ல, ஆழ்ந்து, கவனக் குவிப்புடன் படிக்கும் பழக்கம் இல்லாமல் போகும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் விளம்பரப்படுத்தவும், பொய்ப் பிரசாரத்துக்கும் பயன்படலாம். ஆனால், ஆக்கபூா்வ சமூக மாற்றங்களுக்கும், அரசியல் செயல்பாட்டுக்கும் அச்சு ஊடகங்கள் இன்றியமையாதவை.

அச்சு ஊடகங்களின் அழிவில் பொறுப்பேற்புடன் கூடிய நம்பகத்தன்மையும் அழிந்துவிடும் என்பதை மத்திய - மாநில ஆட்சியாளா்கள் உணர வேண்டும். காகிதத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதும், அரசு விளம்பரங்கள் மூலம் அச்சு ஊடகங்களைப் பாதுகாப்பதும் உடனடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

காட்சிகள் கனவாகிப் போகும்; வாா்த்தைகள் காற்றோடு போகும்; எழுத்து மட்டும்தான் நிலைத்து நிற்கும் என்பதை வரலாறு உணா்த்தி இருக்கிறது. இனியும் உணா்த்தும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com