Enable Javscript for better performance
ஆபத்து அகலவில்லை! | மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி அவசியம் பற்றிய தலையங்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆபத்து அகலவில்லை! | மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி அவசியம் பற்றிய தலையங்கம்

    By ஆசிரியர்  |   Published On : 27th April 2022 04:24 AM  |   Last Updated : 27th April 2022 04:24 AM  |  அ+அ அ-  |  

    corona_vaccine_

    சில நாடுகளில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மீண்டும் புதிய வேகத்துடன் பரவத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முந்தைய உருமாற்றங்களைவிட அதிவேகத்தில் பரவும் "எக்ஸ் இ' என்கிற உருமாற்றம் இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
     பல ஐரோப்பிய நாடுகள் நோய்த்தொற்றுப் பரவலால் மீண்டும் பொதுமுடக்கத்துக்குத் தயாராகின்றன. கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்கிற மிதப்பில் இருந்த சீனா, இப்போது திகைத்துப்போய் இருக்கிறது. அந்த நாட்டின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காய் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் சீனாவின் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்கள் வெளியுலகுக்குத் தெரிவதில்லை. மிக அதிகமான பாதிப்பை சீனா எதிர்கொள்கிறது என்பது மட்டும் உறுதி.
     அதே போன்றுதான் தாய்லாந்து, மலேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளும் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்புப் பரவலை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகளில் உள்ள ஆட்சியாளர்கள் தங்களது நாட்டில் பாதிப்பு எதுவும் இல்லை என்பதுபோல தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டதும், தடுப்பூசி போடுவதை வலியுறுத்தாமல் விட்டதும் இப்போதைய புதிய அலை நோய்த்தொற்றுக்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.
     அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா ஏனைய உலக நாடுகளைவிட கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிவிரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்டிருக்கிறது என்பதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பல்வேறு எதிர்வினைகளையும், பிரச்னைகளையும், இடர்ப்பாடுகளையும் சந்தித்தோம் என்றாலும்கூட, 185 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்திய அசாத்திய சாதனைக்காக நரேந்திர மோடி அரசை பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கிறோம். சாதனைக்கு இடையில் பல சோதனைகளையும் கடந்திருக்கிறோம். புலம்பெயர்ந்தோரின் அவலம், ஆக்சிஜன் தட்டுப்பாடு, கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளை, உயிரிழப்புகள் என்று பல வேதனைகளை சுமக்க நேரிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
     மத்திய அரசின் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 15 - 18 வயது உட்பட்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், 12 - 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயாலஜிக்கல் - இ நிறுவனத்தின் தடுப்பூசியும் போடுவது நடைபெற்று வருகிறது. இப்போது 6 - 12 வயது வரையிலான சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியும், 5 - 12 வயது வரையிலான சிறார்களுக்கு பயாலஜிக்கல் - இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசியும் அவசரகால நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்திருக்கிறது.
     ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியும், சைடஸ் நிறுவனத்தின் சைகோவ் - டி தடுப்பூசியும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டும்கூட இன்னும் தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. முனைப்புடன் சிறார்களுக்கு பள்ளிக்கூடங்கள் மூலம் தடுப்பூசி பாதுகாப்பு அளிப்பதில் காட்டப்படும் முனைப்பு மத்திய அரசின் முன்னெச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்துகிறது.
     அரசு என்னதான் விரைந்தும், முனைந்தும் செயல்பட்டாலும்கூட இன்னும் பல மாநிலங்களில் தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடு தேசிய சராசரியை எட்டவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அஸ்ஸாமைத் தவிர ஏனைய வடகிழக்கு மாநிலங்களிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தடுப்பூசி திட்டம் மிகவும் மந்தகதியில் பின்தங்கியிருக்கிறது.
     தேசிய சராசரியான 82% அளவை பிகார், பஞ்சாப், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எட்டாமல் பின்தங்கியிருக்கின்றன. மத மூட நம்பிக்கை, சதித்திட்டம் உள்ளிட்ட தவறான பரப்புரைகள் மட்டுமல்லாமல், ஊரகப்புறங்களில் போதுமான விழிப்புணர்வு ஏற்படாமல் இருப்பதும் இதற்குக் காரணங்கள்.
     இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 கோடி பேர் இன்னும்கூட இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தற்போது கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் குறைவாக இருப்பதால் முதல் தவணை தடுப்பூசிப் பாதுகாப்பே போதும் என்று பலர் கருதுகிறார்கள்.
     60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1.23 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்றால், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11.5 கோடி பேர்தான் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்கள். ஏற்கெனவே கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக்கொண்டவர்கள் முன்னெச்சரிக்கைத் தவணையை செலுத்திக் கொள்வது அவசியம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் நுண்ணுயிரியல் (வைராலஜி) நிறுவன விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
     இரண்டு தவணை கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூன்றாவது முன்னெச்சரிக்கை தவணை கோவிஷீல்ட் போட்டுக்கொள்வதால் உடலின் எதிர்ப்பு சக்தி ஆறு மடங்கு அதிகரிப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பல நோயாளிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வை, மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உறுதிப்படுத்த வேண்டும். கோவிஷீல்ட் உற்பத்தியை அதிகரித்து அனைவருக்கும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
     உலகில் தடுப்பூசி போடப்படாத ஒருவர் இருந்தாலும்கூட, கொவைட் 19 நோய்த்தொற்றின் ஏதாவது ஓர் உருமாற்றம் பரவிக் கொண்டுதான் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp