ஒடிஸா மாடல்! | சிறுதானிய மிஷன் குறித்த தலையங்கம்

ஒடிஸா மாடல்! | சிறுதானிய மிஷன் குறித்த தலையங்கம்

 பூமியில் பாதமும், மழை வருமா என விண்ணில் விழியுமாக இந்திய விவசாயி தனது வாழ்க்கையை நடத்துகிறார் என்கிற கருத்து உண்மையிலும் உண்மை. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஒருபுறம் வறட்சியும், மற்றொருபுறம் எதிர்பாராத அடைமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்குமாக இந்தியாவில் விவசாயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அணைகள் பல இருந்தும்கூட தேவையான அளவு தண்ணீர் விவசாயத்துக்குக் கிடைப்பதில்லை என்கிற அவலம் தொடர்கிறதே தவிர, குறைந்தபாடில்லை.
வேளாண்துறையில் இந்தியா எதிர்கொள்ளும் பருவநிலை சவால்களையும், இந்திய விவசாயிகளின் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு புதியதொரு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையிலான ஒடிஸா அரசு. 2017-இல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேரடி முனைப்பில் உருவானது "ஒடிஸா சிறுதானிய மிஷன்' திட்டம். அதன் மூலம் ஒடிஸாவின் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் வனப்பகுதியில் பசுமைப் புரட்சி ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து புயல்களையும், மகாநதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளையும் எதிர்கொள்ளும் மாநிலமாக ஒடிஸா திகழ்ந்து வருகிறது. நீர்வளம் மிக்க பகுதிகளில் விவசாயம் ஓரளவு லாபகரமாக நடந்தாலும், வனப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவது வழக்கமாகவே இருந்து வருகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதும் அவசியம் என்பதை முதல்வர் நவீன் பட்நாயக் நன்றாகவே உணர்ந்துள்ளார். மலைப்பகுதிகளில் வாழும் விவசாயிகள் தங்களது பாரம்பரிய தானியங்களைப் பயிரிடுவதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக்கொள்வதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
"ஒடிஸா சிறுதானிய மிஷன்' அந்த மாநிலத்தின் வேளாண் அமைச்சகத்தால் ஐந்து ஆண்டு பரிசோதனைத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் அதிகமாக உட்கொள்ளும் சிறுதானியங்களை அதிக அளவில் பயிரிடுவது என்பதுதான் ஒடிஸா வேளாண்துறையின் சிறுதானிய மிஷன் திட்டம். மலைவாழ் மக்களின் சுகாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியையும், வாழ்வாதாரத்தையும் இந்தத் திட்டத்தின் முலம் உறுதிப்படுத்த முடியும் என்பதை அரசு விரைவிலேயே புரிந்துகொண்டது.
பயிரிட்டதைவிட அதிக மகசூலை குறுகிய காலத்திலேயே அந்தத் திட்டம் அறுவடை செய்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், நிலைத்த வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிற இலக்கின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் என்கிற ஐ.நா. சபையின் நோக்கத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது ஒடிஸா அரசின் சிறுதானிய மிஷன் திட்டம்.
சிறிய அளவில் பரிசோதனை ரீதியாக 2017-இல் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம், இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 142 ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 1.5 லட்சம் விவசாயிகள் 75,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சிறுதானியங்களைப் பயிரிட்டு வெற்றிகரமாக விவசாயம் செய்கிறார்கள். அரசு தங்களுக்கு பின்னணியில் இருக்கிறது என்கிற உத்தரவாதம் விவசாயிகளை அதிக தண்ணீர் உறுஞ்சும் நெல் விவசாயத்திலிருந்து, தங்களது முன்னோர் பயிரிட்டு வந்த சிறுதானிய விவசாயத்துக்குத் திருப்பியிருக்கிறது.
மலைவாழ் மக்கள் மீண்டும் தங்களது பாரம்பரிய உணவுப் பழக்கங்களுக்கு திரும்ப வழிகோலியிருக்கும் இந்த முன்மாதிரி திட்டம், ஒடிஸாவின் பிற பகுதிகளிலும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய விவசாயத்தை ஊக்கப்படுத்தியிருக்கிறது. விவசாயிகளுக்கு, அதிலும் சிறு குறு விவசாயிகளுக்கு வருமான உத்தரவாதத்தையும், கடன் சுமைகளில் இருந்து விடுதலையையும் வழங்கியிருக்கிறது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் உதவுகிறது என்பது இன்னொரு வரவேற்புக்குரிய விளைவு.
சிறுதானிய விவசாயத்தில் ஒடிஸா அரசு முனைப்பு காட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிறுதானியங்கள் புல் வகையைச் சேர்ந்தவை. தனக்குத் தானே மகரந்தச் சேர்க்கை செய்துகொள்ளும் வகையைச் சேர்ந்தவை. எந்தவிதமான பருவச்சூழலிலும் தாக்குப்பிடித்து வளரக்கூடியவை. ஏனைய தானியப் பயிர்களைப்போல பூச்சித் தாக்குதலுக்கு இவை உள்ளாவதில்லை.
கோதுமை, அரிசி போன்ற பயிர்களுக்குத் தேவைப்படுவது போல் அதிக அளவிலான இடுபொருள் தேவையும், தண்ணீர் தேவையும், பராமரிப்புத் தேவையும் இல்லாதவை. வலுவான வேர்கள் கொண்டவை என்பதால், புயல், மழை சூழலிலும்கூட தாக்குப்பிடிக்கக் கூடியவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை சிறுதானிய விவசாயத்தில் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. இதில் ஊடு பயிர்கள், மாற்றுப் பயிர்கள் போன்றவையும் சாத்தியமாகின்றன.
குறைந்த மழைப்பொழிவு, அதிகரித்த வெப்பம் உள்ளிட்ட எல்லாவிதப் பருவங்களையும் எதிர்கொள்ளும் சிறுதானிய விவசாயம், ஒருமுறை பொய்த்தாலும் அடுத்தப் பயிரீட்டில் பயனளிக்கும். அரிசி, கோதுமை போல நான்கு அல்லது ஐந்து மாதப் பயிராக அல்லாமல், இரண்டு அல்லது மூன்று மாதப் பயிர்களாக இருப்பதால், குறைந்த அளவு தண்ணீரில் ஆண்டு முழுவதும் விவசாயத்தைத் தொடர முடியும், நல்ல மகசூலும் பெற முடியும்.
சிறுதானிய விவசாயம் அதிக முதலீட்டிலான நீர்ப்பாசன கட்டமைப்புத் தேவையைக் குறைத்திருக்கிறது. நீர் மேலாண்மையும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி. ஒடிஸா அரசு வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கும் சிறுதானிய மிஷன் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக வேண்டும்!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com