தடுக்க முடியாது; தவிர்க்க முடியும்! | பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு பதிலாக கணவரோ,  உறவினரோ பதவியேற்பு குறித்த தலையங்கம்

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பார்கள். அதேபோல,  வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கிறார் என்று கடந்துபோய் விடலாம்  - அவர்கள் பின்னால் இருந்த
தடுக்க முடியாது; தவிர்க்க முடியும்! | பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு பதிலாக கணவரோ,  உறவினரோ பதவியேற்பு குறித்த தலையங்கம்


மத்திய பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் சாகர், தமோஹ், பன்னா மாவட்டங்களிலும் மேற்குப் பகுதியில் உள்ள தார் மாவட்டத்திலும், கிழக்கு உத்தர பிரதேசத்தை ஒட்டியுள்ள ரீவா மாவட்டத்திலும் ஒரு கேலிக்கூத்து அரங்கேறி இருக்கிறது. இந்த மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவரோ, தந்தையோ, ஆண் உறவினரோ பதவியேற்ற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெய்சிநகர் கிராம பஞ்சாயத்தில் மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 உறுப்பினர்களில் 10 பேர் பெண்கள். அவர்களில் மூன்று பெண்கள் மட்டுமே நேரில் வந்து பதவியேற்றுள்ளனர். மற்ற ஏழு பேருக்கு பதிலாக அவர்களது ஆண் உறவினர்களே பதவியேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் பதவியேற்பதற்கு சட்டத்தில் இடமில்லாவிட்டாலும், பதவியேற்க பெண்கள் நேரில் வர தயக்கம் காட்டியதால்தான் இதுபோன்று நிகழ்ந்தது என ஜெய்சிநகர்  கிராம பஞ்சாயத்து செயலர் ஆஷாராம் சாஹு சமாதானம் கூறியிருக்கிறார்.

இந்தப் பதவியேற்பு விடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கிராம பஞ்சாயத்து செயலர் ஆஷாராம் சாஹு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த மாவட்டத்துக்கு அருகே உள்ள தமோஹ் மாவட்டத்தில் கைஸாபாத் கிராம பஞ்சாயத்தில் தேர்வு செய்யப்பட்ட எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்த பஞ்சாயத்து பெண் தலைவர் உள்பட 11 பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவர்களே பதவியேற்றுள்ளனர். பல இடங்களில் இதுபோன்று ஆண் உறவினர்கள் பதவியேற்றதையடுத்து விழித்துக் கொண்ட, அந்த மாநிலத்தின் பஞ்சாயத்து - ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் உமாகாந்த் உம்ராவ் கடும் 
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்கு ரூ.15 லட்சம் வரை ஊக்கத் தொகை அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார் என்பதும், இங்கு அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் போட்டியிட்டனர் என்பதும், 1990-களிலேயே கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியில் 50 %}ஐ பெண்களுக்கு அந்த மாநிலம் ஒதுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கவை.

அந்த மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் பெண்கள் போட்டியிட்டாலும் தேர்தல் பிரசாரத்தில் பெரும்பாலும் அந்தப் பெண்களின் கணவர்களே இடம்பெற்றனர். இதுபோன்று நடப்பது அந்த மாநிலத்தில் மட்டும்தான் என்று எண்ணிவிட வேண்டாம். உள்ளாட்சித் தேர்தல்களில், 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் இதுபோன்று பல இடங்களில் நடக்கிறது.

தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் பெண்களுக்காக ஒதுக்கப்படும் தொகுதிகளில், அங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒருவரின் மனைவியோ, மகளோதான் நிறுத்தப்படுகின்றனர். அதேபோல, எதிரணியிலும் செல்வாக்குள்ள ஆணின் மனைவியோ, மகளோதான் போட்டியிடுகின்றனர். பெரும்பாலும் பிரசாரத்திலும்கூட, பெண் வேட்பாளர்கள் பெயரளவுக்கு மட்டுமே பங்கேற்கின்றனர். அவர்கள் சார்பில் அந்தக் குடும்பத்து ஆண்களே பம்பரமாக சுழன்று பணியாற்றுவதைத்தான் கண்டுவருகிறோம்.

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதுவரையில் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தவர்கள், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வேறு வழியில்லாமல் நிறுத்தப்பட்டதால் வெற்றி பெற்ற பின்னரும் அரசியல் நெளிவு சுளிவுகள் அவ்வளவு எளிதில் அவர்களுக்குப் பிடிபடுவதில்லை. அதனால், வெற்றி பெற்ற பெண்களின் கணவர்களே பெரும்பாலும் பின்னணியில் இருந்து செயல்படுகின்றனர். 

பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டாலும், ஒரு சிலர் பெண் பிரதிநிதிகளின் அரசியல் பணிகளில் நேரடியாகக் களமிறங்குகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய இந்த காலகட்டத்தில், அப்படி நேரடியாகக் களம் காண்பவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

மக்களவையிலும், அனைத்து சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, கருத்தொற்றுமையின்மையைக் காரணம் காட்டி 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இது நிறைவேற்றப்பட்டாலும், அரசியல் கட்சியினர் மாறாதவரை இப்போது உள்ளதுபோன்றே கட்சியினரின் குடும்பப் பெண்கள்தான் அந்தத் தேர்தல்களிலும் நிறுத்தப்படுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது குடியரசுத் தலைவராக உள்ள திரௌபதி முர்மு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய மகளிர் - சிறார் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், மூன்று முறை தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் போன்ற ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக அரசியல் பின்புலம் இல்லாமல் மிகப் பெரிய ஆளுமைகளாக உயர்ந்துள்ளனர். 

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பார்கள். அதேபோல,  வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கிறார் என்று கடந்துபோய் விடலாம்  - அவர்கள் பின்னால் இருந்தால்..!  அரசியல் கட்சிகள் நினைத்தால்தான் இந்த அவலத்தை மாற்ற முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com