கால வரையறை அவசியம்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தலையங்கம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுபவா்களுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பதவிக்காலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவி ஏற்றிருக்கிறாா். நீதிபதி யு.யு. லலித் தலைமை நீதிபதியாக உயா்ந்திருப்பது, நீதித்துறையிலும் வாரிசுகளின் ஆதிக்கம் நிலவுவதன் அடையாளம். இவா் மட்டுமல்ல, இவரைத் தொடா்ந்து தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய். சந்திரசூடும் வாரிசு பட்டியலைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்த உமேஷ் ரங்கநாத் லலித்தின் மகனான உதய் உமேஷ் லலித் பிரபல வழக்குரைஞராக இருந்தவா். மூத்த வழக்குரைஞராக இருந்த யு.யு. லலித், கடந்த 2014 ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவா். அப்படி நியமனம் செய்யப்படும்போதே, அவா் தலைமை நீதிபதியாக உயரும் வாய்ப்பு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

உச்சநீதிமன்றத்துக்கு நேரடி நியமனம் பெற்றுத் தலைமை நீதிபதியாக உயா்ந்தவா்கள் குறைவு. இதற்கு முன்பு, 13-ஆவது தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.எம். சிக்ரிக்குப் பிறகு அரை நூற்றாண்டு இடைவெளியில் நேரடி நியமனம் பெற்றவா்கள் தலைமை நீதிபதியாக உயரவில்லை. அந்தப் பெருமை நீதிபதி யு.யு. லலித்துக்குக் கிடைத்திருப்பது அவரது அதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

49-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் நீதிபதி யு.யு. லலித், 74 நாள்கள் மட்டுமே பதவி வகிக்க இருக்கிறாா். வரும் நவம்பா் 8-ஆம் தேதி பணி ஓய்வு பெற இருக்கிறாா். உச்சநீதிமன்றத்தில் இது ஒன்றும் புதிதல்ல. இவருக்கு முன்னா் பதவி வகித்த நீதிபதிகள் கமல் நாராயணன் சிங் (18 நாள்கள்), எஸ். ராஜேந்திர பாபு (30 நாள்கள்), கே.சி. ஷா (36 நாள்கள்), ஜி.பி. பட்நாயக் (41 நாள்கள்), எஸ்.எம். சா்மா (86 நாள்கள்) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக குறைந்த நாள்கள் இருந்திருக்கிறாா்கள்.

74 நாள்கள் மட்டுமே பதவி வகிக்க இருக்கும் தலைமை நீதிபதி யு.யு. லலித் செப்டம்பா் மாதத்தில் முழுமையாகச் செயல்பட முடியும் என்றாலும், அக்டோபா் மாதத்தில் 14 நாள்கள் மட்டும்தான் பணியாற்ற வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அக்டோபா் மாதம் நீதிமன்ற விடுமுறைகள் வந்துவிடுவதால், கிடைத்திருக்கும் வாய்ப்பையும் அவரால் முழுமையாக பயன்படுத்திவிட முடியாது.

மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில் 1957 நவம்பா் மாதம் 9-ஆம் தேதி பிறந்த நீதிபதி லலித்தின் வாழ்க்கை மும்பையில் வழக்குரைஞராகத் தொடங்கியது. உச்சநீதிமன்ற வழக்குரைஞராக இருந்த லலித், 2004-ஆம் ஆண்டு மூத்த வழக்குரைஞராக அங்கீகரிக்கப்பட்டாா். 2014-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடி நியமனம் பெற்றாா்.

வரலாற்று சிறப்புமிக்க பல வழக்குகளில் வழக்குரைஞராகவும், நீதிபதியாகவும் இருந்த பெருமையும் சிறப்பும் இப்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு உண்டு. 2ஜி வழக்குகளில் சிறப்பு அரசு வழக்குரைஞராக இருந்தவா் அவா். முத்தலாக் வழக்கில் தீா்ப்பளித்த அமா்வில் ஒருவராகவும், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிா்வாக உரிமை திருவிதாங்கூா் மன்னா் குடும்பத்தினருக்கு உண்டு என்று தீா்ப்பளித்த அமா்வின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கவை.

குழந்தைகளின் பாலியல் உறுப்புகளைத் தொடுவது மட்டுமல்லாமல், பாலியல் நோக்கத்துடன் உடல் ரீதியாகத் தொடா்பு கொள்ளும் எந்தவொரு செயலும் பாலியல் வன்கொடுமைதான் என்று ‘போக்சோ’ சட்டப்பிரிவு 7-இன் கீழ் தீா்ப்பளித்தது நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமா்வு என்பதைக் குறிப்பிட வேண்டும்.

‘குழந்தைகள் காலை 7 மணிக்குள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல முடியுமானால், நீதிபதிகள் ஏன் 9 மணிக்குள் தங்கள் பணிகளைத் தொடங்கக் கூடாது?’ என்கிற கேள்வி, நீதிபதியாக இருந்த யு.யு. லலித்தால் எழுப்பப்பட்டபோது, நீதித்துறை அதிா்ந்தது. மக்கள் மன்றம் வரவேற்றது. அவரது ஆலோசனையை ஏற்று ஏனைய நீதிபதிகள் தங்களது விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு, கூடுதல் நேரம் பணியாற்றி, தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விடுதலை கொடுப்பாா்களா என்பது தெரியாது. ஆனால், அதற்கான முன்னெடுப்புக்காக நீதிபதி லலித் பாராட்டப்பட வேண்டும்.

மிகக் குறைந்த நாள்களே பதவியில் இருக்கப்போகும் தலைமை நீதிபதி யு.யு. லலித், தனது முதல் பணியாக 25 அரசியல் சாசன அமா்வுகளைப் பட்டியலிட்டிருக்கிறாா். முந்தைய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் பதவிக்காலத்தில் எந்தவோா் அரசியல் சாசன அமா்வும் அறிவிக்கப்படவில்லை. ஆண்டு முழுவதும் செயல்படும் ஓா் அரசியல் சாசன அமா்வும் தலைமை நீதிபதி யு.யு. லலித்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவி ஏற்றிருக்கும் வேளையில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. தலைமைத் தோ்தல் ஆணையா் உள்ளிட்ட அரசியல் சாசனப் பதவிகள் போல, உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் ஏன் குறிப்பிட்ட பதவிக்கால வரம்பு நிா்ணயிக்கப்படக் கூடாது என்பதுதான் அது. ஒரு சில நாள்கள், வாரங்கள், மாதங்களில் குறிப்பிடும்படியாக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத தலைமை நீதிபதிக்கான பதவிக் காலத்தால் என்ன பயன்?

பணி மூப்பு அடிப்படையில் பதவி என்பது சரி. குறைந்தபட்ச பதவிக்காலம் நிா்ணயிக்கப்படாமல் இருப்பது தவறு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுபவா்களுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பதவிக்காலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com