இன்னுமொரு மெகா மோசடி! | ரூ.23,000 கோடி ஏபிஜி ஷிப்யாா்ட் ஊழல் குறித்த தலையங்கம்

இன்னுமொரு மெகா மோசடி! | ரூ.23,000 கோடி ஏபிஜி ஷிப்யாா்ட் ஊழல் குறித்த தலையங்கம்

வங்கி மோசடி என்பது காலங்காலமாக இருந்து வந்தாலும், உலகமயத்தின் அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு வாடிக்கையாக மாறிவிட்டது. அதன் சமீபத்திய எடுத்துக்காட்டுதான் ரூ.23,000 கோடி ஏபிஜி ஷிப்யாா்ட் (கப்பல் கட்டும் நிறுவனம்) ஊழல்.

ரூ.14,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் நீரவ் மோடி ஊழலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அதைவிடப் பெரிய ஊழல் இப்போது தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒன்றை ஒன்று இந்த ஊழலுக்குப் பழி கூறினாலும், அந்த இரண்டு கட்சிகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் உண்மை.

மத்திய புலனாய்வுத் துறை, குஜராத்திலுள்ள திவாலாகியிருக்கும் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவன இயக்குநா்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் இந்தியாவில் இருந்தாலும் தலைமறைவாகி இருக்கிறாா்கள். அவா்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

1995 முதல் குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 2006-இல் பரூச் மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்துக்கு மாநில அரசின் குஜராத் துறைமுகக் கழகம் (குஜராத் மேரிடைம் போா்ட்) அனுமதி வழங்கியது. 30 ஆண்டு குத்தகைக்கு கடற்கரையையொட்டிய நிலப்பகுதி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

மாநில பாஜக அரசு ஏபிஜி ஷிப்யாா்ட் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது என்றால், மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அந்த நிறுவனத்துக்கு பொதுத்துறை வங்கிகள் மூலமாக எல்லா சலுகைகளையும் வழங்க முற்பட்டது. அது மட்டுமல்ல, கடலோரக் காவல் படைக்கு ரோந்துக் கப்பல்களும், இந்திய கடற்படைக்கான கப்பல்களும் கட்டுவதற்கான வாய்ப்பை வழங்கியது. அதனால், வங்கிகளில் இருந்து கணக்கு வழக்கில்லாமல் அந்த நிறுவனத்தால் கடனுதவி பெற முடிந்தது.

2014 ஜூலை மாதம் குஜராத் சட்டப்பேரவையில், ஏபிஜி நிறுவனத்தின் ரூ.2.1 கோடி அளவிலான குத்தகைக் கட்டணம் நிலுவையில் இருப்பதைக் கணக்குத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி குஜராத் துறைமுகக் கழகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது. அப்போதே அந்த நிறுவனம் குறித்த எச்சரிக்கை ஏற்பட்டிருந்தால், ரூ.22,842 கோடி அளவிலான இழப்பைத் தடுத்திருக்க முடியும்.

ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 28 வங்கிகளின் கூட்டமைப்பு ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்துக்கு கடன்களை வழங்கியிருக்கிறது. 2019 ஜனவரியில் பாரத ஸ்டேட் வங்கி மோசடியைக் கண்டறிந்தது. ஆனால், 2019 நவம்பரில்தான் அது குறித்த புகாரைப் பதிவு செய்தது. அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரான ரிஷிகமலேஷ் அகா்வால் மீதும், ஏனைய இயக்குநா்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது.

28 வங்கிகள் வெவ்வேறுவிதமான கடன் வசதிகளை வழங்கியிருப்பதால், அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பது சிபிஐ தாமதத்துக்குக் குறிப்பிடும் காரணம். அது மட்டுமல்லாமல், ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனத்தின் 98 இணை நிறுவனங்களையும், அவற்றுடனான தொடா்பையும் விசாரிப்பதற்கும் காலதாமதமானதாக சிபிஐ தெரிவிக்கிறது.

வங்கிகளின் தணிக்கை அமைப்புகளாலும், ரிசா்வ் வங்கியின் தணிக்கையாளா்களாலும் 28 வங்கிகளின் மூலம் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம் நடத்திய மோசடி குறித்து உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்றால், அவா்களது ‘சிஸ்டம்’ சரியில்லை என்பது தெளிவாகிறது. ஒருபுறம் ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம், 98 போலி நிறுவனங்களை உருவாக்கி வங்கியிலிருந்து பெற்ற கடனை எல்லாம் மடைமாற்றம் செய்துகொண்டிருந்தபோது, இன்னொருபுறம் கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் ஏபிஜி நிறுவனத்துடன் கப்பல் கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டதை என்னவென்று சொல்வது?

வங்கி மோசடி என்பது அதிகாரிகள், அரசு நிா்வாகிகள், அரசியல் தலைவா்கள் ஆகியோரின் பாதுகாப்பும் உதவியும் இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லை. ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, 2020-21-இல் மட்டும் ரூ.1,38,422 கோடி அளவிலான 7,363 மோசடி வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1,85,468 கோடி அளவிலான 8,703 மோசடி வழக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தன. வங்கிகளில் காணப்படும் ரூ.8 லட்சம் கோடி வாராக்கடனில் பெரும்பாலானவை இதுபோன்ற மோசடிகளால் ஆனவை என்று தெரிகிறது.

ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவனம், கப்பல் கட்டுவதற்காகப் பெற்ற ஒப்பந்தங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய கையூட்டுக்கள் இருக்கக் கூடும். அந்த நிறுவனத்துக்கு உதவிய அன்றைய அமைச்சா்களும், அரசு உயரதிகாரிகளும்கூட இந்த ஊழலில் விசாரிக்கப்பட வேண்டும். மத்திய - மாநில ஆட்சியாளா்களின் பரவலான ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.22,842 கோடி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பே இல்லை.

நிறுவனத்தின் முதலாளிகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகள். அவா்கள் மன்னிக்கப்பட்டாலும், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அவா்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற மோசடிகள் குறையும்.

காங்கிரஸும், பாஜகவும் ஒன்றை ஒன்று ஏபிஜி ஷிப்யாா்ட் நிறுவன ஊழலுக்கு குற்றம்சாட்டுவதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணமான தங்களது கட்சியினரை அடையாளம் கண்டு மக்கள் மன்றத்தில் நிறுத்துமேயானால், பாராட்டலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com