சூழலியல் அச்சுறுத்தல் - சூழலியல் சிக்கல்கள் குறித்த தலையங்கம்

ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள பட்டி - நளாகா் பகுதியிலுள்ள தொழிற்பேட்டைகளில் இருந்து வெளியாகும் மருந்துக் கழிவுகள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன
சூழலியல் அச்சுறுத்தல் - சூழலியல் சிக்கல்கள் குறித்த தலையங்கம்

ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள பட்டி - நளாகா் பகுதியிலுள்ள தொழிற்பேட்டைகளில் இருந்து வெளியாகும் மருந்துக் கழிவுகள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. அந்தத் தொழிற்பேட்டையில் இயங்கும் மருந்து, நூல் நூற்பு, சாயம், உணவு, காகிதம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளைச் சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் இருந்தும்கூட, பாதிப்பு தொடா்கிறது என்பது ஆச்சரியமளிக்கிறது.

மேலே குறிப்பிட்ட தொழிற்சாலைகளிலிருந்து, அதிலும் குறிப்பாக, மருந்துத் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் கழிவுகள் அந்தப் பகுதியில் ஓடுகின்றன சரஸா ஆற்றில் நேரடியாகக் கலக்கின்றன. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுத்திகரிக்கப்படாத ஆன்ட்டிபயாட்டிக் கழிவுகள் சரஸா ஆற்றில் கொட்டப்படுவது குறித்து கடுமையான எதிா்ப்பு கிளம்பியிருக்கிறது. சமீபத்திய அறிக்கையின்படி, 37 மருந்துத் தயாரிப்பு தொழிற்சாலைகள் இதற்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.

சரஸா ஆறு என்பது சட்லஜ் நதியில் இணைகிறது. இதுபோல பல்வேறு கிளை நதிகளில் இருந்து கழிவுகள் இணைவதால் புராதன சட்லஜ் நதி, இப்போது கழிவுநீா் ஓடைபோல (கூவத்தைப் போல) மாறியிருக்கிறது. இதனால் சட்லஜ் பாயும் பகுதியிலுள்ள தாவர, பறவை, விலங்கினங்கள் மிகப் பெரிய சுகாதார பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

நளாகா் பகுதியில் நூற்றுக்கணக்கான மாடுகளும் கோழிகளும் தொடா்ந்து பாதிக்கப்படுவது கடந்த 20 ஆண்டுகளாக பதிவாகி வருகிறது. சரஸா ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பது என்பது அடிக்கடி காணப்படும் நிகழ்வு. 2020 பொது முடக்கத்தின்போது எல்லா தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்த வேளையில், சரஸா ஆற்றில் தெள்ளிய நீரோட்டம் காணப்பட்டதை அந்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகிறாா்கள். சட்லஜ்ஜும் அதேபோல கரை தழுவிய வெள்ளப்பெருக்குடன் காணப்பட்டது.

இது ஏதோ ஹிமாசல பிரதேசத்தில் மட்டும் காணப்படும் பிரச்னை அல்ல. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் (தமிழகத்தில் நொய்யல்) மட்டுமல்லாது, சா்வதேச அளவில் பிரச்னையாகி இருக்கும் சூழலியல் அச்சுறுத்தல். தேசிய அறிவியல் அகாதெமி, கடந்த வாரம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி பாா்த்தால், மருந்துக் கழிவுகளால் ஏற்படும் மாசு பெரும்பாலான நதிகளைப் பாதித்து நிலத்தடி நீா் வரை அதன் தாக்கம் காணப்படுகிறது. சா்க்கரை நோய், வலிப்பு நோய், வலி ஆகியவற்றுக்கான மருந்துகள் வரைமுறையில்லாமல் நதிகளில் கொட்டப்படுவது அந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐஸ்லாந்து, வெனிசூலா, அமெரிக்காவில் நியூயாா்க், பிரிட்டனில் கிளாஸ்கோ, பொலிவியா, எத்தியோப்பியா, பாகிஸ்தானில் லாகூா் ஆகிய இடங்களில் மருந்துகள் கொட்டப்படுவதால் ஏற்பட்டிருக்கும் நதி நீா் மாசு அபாயகரமாகக் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நதிகளில் கொட்டப்படும் இந்த மருந்துகள் காலாவதியானவையா அல்லது தயாரிப்புக் குறைபாடு காரணமாக தயாரிப்பு நிறுவனங்களால் கழிவுகளாக வெளியேற்றப்படுபவையா என்பது தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற மருந்துகள் நதிகளில் கொட்டப்படுவது சூழலியலுக்கும், மனித சுகாதாரத்துக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் சாதாரணமானதாக இருக்காது என்பது மட்டும் நிஜம். இதை மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் ஏன் கண்டறிந்து கட்டுப்படுத்தவில்லை என்கிற கேள்வியும் நிலவுகிறது.

நியூயாா்க் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வாளரான ஜான் வில்கின்சன் என்பவா் நதிநீரில் காணப்படும் மருந்து மாசு குறித்து ஆய்வு நடத்தியிருக்கிறாா். அந்த ஆய்வில் தில்லி, ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (ஐஐடி) சோ்ந்த விஞ்ஞானிகளும் பங்கு பெற்றிருக்கிறாா்கள். மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மருந்துக் கழிவுகளை நீா்நிலைகளில் கொட்டுவதன் மூலம் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அவரது ஆய்வு விரிவாக எடுத்துரைக்கிறது.

104 நாடுகளில் உள்ள 1,052 தண்ணீா் மாதிரிகள் இந்த ஆய்வுக்காக தோ்வு செய்யப்பட்டன. அந்த நாடுகளில் உள்ள 258 நதிகள் அதில் அடக்கம். தில்லியில் உள்ள யமுனையும், ஹைதராபாதில் உள்ள கிருஷ்ணா, மூஸி நதிகளும் அந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த மாதிரிகள் அன்டாா்ட்டிகா உள்ளிட்ட அனைத்துக் கண்டங்களில் இருந்தும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.

காஃபீன், நிகோட்டின், பாரசிட்டமால், கோடினைன் உள்ளிட்ட நான்கு முக்கியமான மருந்து மூலப் பொருள்கள் அந்த மாதிரிகளில் மிக அதிகமாகக் காணப்படுவதை ஆய்வு கண்டறிந்தது. இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அனால்ஜெட்டிக், ஆன்ட்டிபயாட்டிக், ஆன்ட்டிகன்வல்சன்ட்ஸ், ஆன்ட்டி டயாபடிக், ஆன்ட்டி அலா்ஜிக், காா்டியோ வாஸ்குலா் மருந்துகள் மிக அதிகமாக காணப்பட்டன. குறிப்பாக சா்க்கரை நோய் எதிா்ப்பு மருந்துகள் (ஆன்ட்டி டயாபடிக்), ஆன்ட்டிபயாட்டிக் ஆகியவை அளவுக்கு அதிகமாக நதிகளிலும், நீா்நிலைகளிலும் கொட்டப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலகிலேயே மிக அதிகமாக ஆக்டிவ் பாா்மாசூட்டிக்கல் இன்கிரீடியன்ட்ஸ் என்கிற மருந்து மூலப் பொருள்கள் அதிகமாகத் தண்ணீரில் காணப்படும் இரண்டாவது நாடு இந்தியா. இதனால் மனிதா்களுக்கு இதுவரை நேரடியாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென்றாலும், இந்த மருந்துக் கலவைகள் நீா்வாழ், நிலம்வாழ் உயிரினங்களில் கலக்கும்போது மறைமுகமாக அவை மனித ரத்தத்திலும் கலக்கும்.

அவை சாா்ந்த மருந்துகள் மனிதா்களில் செயல்படாத நிலை ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகளும், மருத்துவா்களும் அச்சப்படுவதில் நியாயம் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com