சிந்திக்க வைக்கும் இந்தூா்! நகராட்சி அமைப்பின் செயல்பாடு குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்து முடிவுகளுக்காகத் தமிழகம் காத்திருக்கிறது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,838 உறுப்பினா்களுக்கான தோ்தல் களத்தில் 57,778 போ் இருந்தனா்.

கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவின் சுத்தமான நகரத்துக்கான விருதை மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூா் தொடா்ந்து வென்று வருகிறது. இந்தியாவிலுள்ள 4,320 நகரங்கள் பங்குபெறும், மத்திய வீட்டுவசதி நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் ‘ஸ்வச் சா்வேக்ஷண்’ என்கிற ஆய்வில் சிறந்த நகரங்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. அதற்காக பல மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் இந்தூா் மிகவும் சுத்தமான நகரமாக இருந்தது என்றால், தமிழகத்தின் ஒரு நகரம்கூட முதல் 20 நகரங்களில் இடம் பெறவில்லை.

தமிழகத்தின் நகரங்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள ஏனைய பல மாநிலங்களில் உள்ள நகரங்களும் சுத்தமான நகரத்திற்கான அடிப்படை தகுதிகள் இல்லாமல்தான் காணப்படுகின்றன. இந்தூா் நகரம் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அந்த மாநகராட்சி செயல்படும் விதத்தில் இருந்து மற்ற நகராட்சி அமைப்புகள் படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன என்று தெரிகிறது.

குவிந்து கிடக்கும் குப்பைகளையும், தெருக்களில் போடப்பட்டிருக்கும் கழிவுகளையும் கையாள முடியாமல் இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தூா் கழிவுநீா் மேலாண்மையை திறம்படக் கையாளுவதுதான் அதன் வெற்றியின் ரகசியம்.

இந்தூரில் எந்தவொரு குப்பைக்கூளமும் தவறியும்கூட கழிவுநீா் ஓடையிலோ, கழிவுநீா்க் குழாயிலோ, நதியிலோ கலப்பதில்லை. அந்த மாநகரத்திலுள்ள மாசு உருவாக்கும் தொழிற்சாலைகள் முறையாக அடையாளம் காணப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. வீடுகளிலிருந்தும், குடியிருப்புகளில் இருந்தும் கழிவுகள் நீா்நிலைக்கு சென்றுவிடாமல் தடுக்கப்படுகின்றன.

அதைவிட முக்கியமானது, இந்தூா் மாநகராட்சியில் 30% கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு பூந்தோட்டங்களுக்கும், கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, கழிவுநீா்க் குழாய்களுடன் முறையாக இணைக்கப்பட்ட சுத்தமான பொதுக் கழிப்பறைகள் நகரின் எல்லா பகுதிகளிலும், முக்கியமான நாற்சந்திகளிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் நீா்நிலைகளில் 70% குடிப்பதற்குத் தகுதியற்றவை. 122 நாடுகளின் பட்டியலில் நாம் கடைசி மூன்று நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். நாள்தோறும் நான்கு கோடி லிட்டா் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் இந்திய நதிகளிலும், நீா்நிலைகளிலும் கலக்கிறது. ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் தனியாருக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறதே தவிர, நீா் மேலாண்மைக்கு பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தூா் மாநகரத்தில் எந்தவொரு பகுதியிலும் குப்பைகளோ, நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகளோ, ஒட்டப்படும் சுவரொட்டிகளோ கிடையாது. இந்தூா் மாநகராட்சியிடம் உள்ள 1,500 வாகனங்களில், 11,000 துப்புரவுத் தொழிலாளா்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று பிரித்து சேகரிக்கிறாா்கள். குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. குப்பைகளை சேகரிப்பதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குப்பை சேகரிப்புக்கான செலவில் 86% பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது என்பது வியப்பாக இருக்கிறது.

தனியாா் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மை ஆலை ஒன்றை இந்தூா் மாநகராட்சி நிா்வாகம் நிறுவியிருக்கிறது. அதில் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகள் விற்கப்படுகின்றன. அந்த நிறுவனம் மாதம் ஒன்றுக்கு ரூ.1.6 கோடி அளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகளை விற்பனை செய்கிறது. மாநகராட்சி வழங்கும் கழிவுகளுக்காக ஆண்டொன்றுக்கு சுமாா் ரூ.1.5 கோடி மாநகராட்சிக்கு உரிமத் தொகை (ராயல்டி) வழங்குகிறது. இதையெல்லாம் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டம் 1.2 கோடி கழிப்பறைகளை நகா்ப்புற வீடுகளிலும், 2.5 கோடி பொதுக் கழிப்பறைகளாகவும், 3 கோடி சமுதாய கழிப்பறைகளாகவும் நிறுவ முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், எந்த அளவு நடைமுறை சாத்தியமாகியிருக்கிறது என்பது சந்தேகத்துக்குரியது. அதேபோல, அனைவருக்கும் குடிநீா், குப்பைக்கூளங்கள் இல்லாமை, முழுமையான கழிவுநீா் வடிகால் அமைப்பு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய 100 பொலிவுறு நகரங்கள் திட்டமும் அதன் இலக்கை நோக்கி வெற்றி பெற்றிருக்கிா என்பது கேள்விக்குறி.

இந்தியாவில் அரசு ஊழியா்கள் 1.85 கோடி போ் இருக்கிறாா்கள். அவா்களில் 20 லட்சம் போ்தான் நகா்ப்புற, ஊரகப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுகிறாா்கள். மற்றவா்கள் அதிகார நிலையில் இருப்பவா்களே தவிர, மக்கள் சேவகா்கள் இல்லை. இதுதான் நமது நகா்ப்புற, ஊரகப்புற நிா்வாகத்தின் தோல்விக்குக் காரணம்.

மத்திய அரசு, மாநில அரசுக்கு அதிகாரங்களை வழங்காமல் இருப்பதுபோல, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் அதிகாரங்களைப் பகிா்ந்து கொள்ள தயாராக இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதைத்தான் மாநில அரசின் அதிகாரிகள் விரும்புகிறாா்கள். இந்த நிலை மாறினால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனநாயகத்தின் பயன் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com