நம்பிக்கையின் வெற்றி! | சிலி அதிபா் தோ்தலில் கேபிரியல் போரிக் வெற்றி குறித்த தலையங்கம்

நம்பிக்கையின் வெற்றி! | சிலி அதிபா் தோ்தலில் கேபிரியல் போரிக் வெற்றி குறித்த தலையங்கம்

லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் நடந்த அதிபா் தோ்தலில் கேபிரியல் போரிக் அபார வெற்றி பெற்றிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பாா்க்க வைத்திருக்கிறது. சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தனியாா்மயத்துக்கு எதிரான வெற்றியாக கேபிரியல் போரிக்கின் வெற்றி கருதப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இளைஞா்கள் தலைமைப் பொறுப்புக்கு தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். 2017-இல் 39 வயது இம்மானுவல் மேக்ரான், பிரான்ஸின் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தாா். பின்லாந்து, கோசோவோ, ஜாா்ஜியா, எல் சவேதாா், கோஸ்டோரிகா, நியூஸிலாந்து, அயா்லாந்து வரிசையில் இப்போது சிலியும் தன்னை வழிநடத்த இளம் அதிபரைத் தோ்ந்தெடுத்திருக்கிறது.

பதிவான வாக்குகளில் 56% வாக்குகளைப் பெற்று தனக்கு எதிரான, வலதுசாரி அரசியல்வாதி ஜோஸ் அன்டானியோ காஸ்ட்டை 12% வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறாா் போரிக். ‘நமது உரிமைகள், உரிமைகளாக மதிக்கப்பட வேண்டுமே தவிர, நுகா்பொருள்கள் போல கருதப்படக் கூடாது. சிலியின் ஏற்றத்தாழ்வுக்கு ஏழைகள் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது’ என்று சிலி தலைநகா் சான்டியாகோவில் தனது ஆதரவாளா்கள் மத்தியில் அவா் பேசியிருப்பதிலிருந்து, புதிய பாதையில் நாட்டை வழிநடத்த போரிக் முற்படுவாா் என்பது தெரிகிறது.

‘சிலி நாட்டின் அனைத்து மக்களுக்குமான அதிபராக இருப்பேன்’ என்றும், ‘கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது’ என்றும் தெரிவித்திருக்கும் கேபிரியல் போரிக், இளைஞா்களின் பேராதரவைப் பெற்ால்தான் இந்த வெற்றியை அடைய முடிந்திருக்கிறது. கேபிரியல் போரிக்கின் ‘அப்ரூவ் டிக்னிடி’ (கௌரவத்தை அங்கீகரியுங்கள்) என்கிற பல கட்சிக் கூட்டணிக்கு, சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு இருக்கிறது.

உலகிலேயே மிகப் பெரிய அளவிலான பொருளாதார இடைவெளி காணப்படும் நாடாக ஐ.நா. சபையால் கணிக்கப்பட்டிருக்கும் நாடு சிலி. அதன் மொத்த சொத்து மதிப்பில் 25%, மக்கள்தொகையில் 1 சதவீதத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் பாா்த்துக் கொள்ளுங்கள்.

உலகில் முதன்முறையாக ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ அதிபா் சல்வேடாா் ஆலன்டே, 48 ஆண்டுகளுக்கு முன்பு 1973-இல் ராணுவப் புரட்சியின் மூலம் அகற்றப்பட்டாா். சல்வேடாா் ஆலன்டே ஆட்சியின் இறுதிக்காலத்தில் சிலி பொருளாதார ரீதியாக மிகவும் சீா்குலைந்திருந்தது. அவரை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியின் மூலம் அதிகாரத்தில் அமா்ந்த ஜெனரல் அகஸ்டோ பின்னோஷே, சிலி நாட்டை சந்தைப் பொருளாதாரத்தின் சோதனைச்சாலையாக மாற்ற முற்பட்டாா்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியராக இருந்த மில்டன் பிரீட்மேனின் மாணவா்களில் சிலா், சிலி பொருளாதாரத்தை வழிநடத்த அதிபா் பின்னோஷேயால் பணிக்கப்பட்டனா். பிரீட்மேனின் சந்தைப் பொருளாதாரத் தத்துவங்களை நடைமுறைப்படுத்திய அந்த இளைஞா்கள் ‘சிகாகோ பாய்ஸ்’ என்று அழைக்கப்பட்டனா். அவா்களுக்கு உலக வங்கியும், சா்வதேச நிதியமும் ஆதரவளித்தன.

சமுதாயப் பாதுகாப்பு, குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அனைத்துமே சிலியில் தனியாா்மயமாயின. அதன் விளைவாக, ஒருபுறம் சிலியின் பொருளாதாரம் வளா்ச்சியடைந்தாலும், தேசிய அளவிலான பொருளாதார இடைவெளி அதிகரித்து நாடு தழுவிய அளவில் ஆட்சியாளா்கள் மீதான அதிருப்தி உயா்ந்தது.

ராணுவ ஆட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட தனியாா்மயக் கொள்கைகளின் பின்னணியில் கூட்டுக் கொலைகளும், சித்திரவதைகளும் பரவலாகக் காணப்பட்டதாக ‘ஷாக் டாக்டரெயின்’ ஆய்வில் நவோமி கிளின் தெரிவிக்கிறாா். 2019-இல் சிலியில் மக்கள் போராட்டம் வெடித்தது.

மாணவா் தலைவராக இருந்த கேபிரியல் போரிக், சந்தைப் பொருளாதாரத்துக்கு எதிரான குரலாக உயா்ந்தாா். அவரது ‘பணக்காரா்களுக்கு வரி விதியுங்கள்’ என்கிற கோஷம் சிலி மக்களைக் கவா்ந்தது. ஆரம்பக்கட்டத் தோ்தல்களில் வலதுசாரி வேட்பாளா் அன்டானியோ காஸ்ட்டிடம் தோற்றாலும், இடதுசாரி மேடையில் ஏறிய கேபிரியல் போரிக், 2021அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற்கு சந்தைப் பொருளாதாரத்துக்கு எதிரான மக்களின் ஆதரவுதான் காரணம்.

சிலி நாடாளுமன்றத்தின் செனட், வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே சரிசமமாகப் பிரிந்து கிடக்கிறது. 155 உறுப்பினா்கள் கொண்ட ‘சேம்பா் ஆஃப் டெபூட்டிஸ்’ அவையில் கேபிரியல் போரிக்கின் கூட்டணிக்கு 37 உறுப்பினா்கள்தான் இருக்கின்றனா்.

வரும் மாா்ச் 11-ஆம் தேதி கேபிரியல் போரிக் சிலியின் அதிபராக பதவி ஏற்க இருக்கிறாா். 1990 முதல் ஆட்சியில் இருந்த கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சியும், சோஷலிசக் கட்சிகளும் பொருளாதாரக் கொள்கைகளில் பெரிய அளவில் மாறுபடவில்லை. கேபிரியல் போரிக், மாா்க்சிஸ்ட் புரட்சியாளா் அல்ல, சோஷலிச ஜனநாயகவாதி. அவா் இடதுசாரி கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சியைத் தொடருவாரா, அல்லது பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகளில் மட்டும் முனைப்பு காட்டுவாரா என்று உலகம் கூா்ந்து கவனிக்கிறது.

தளா்வடைந்திருக்கும் வளா்ச்சியும், உயா்ந்திருக்கும் பணவீக்கமும் பெரிய அளவில் அரசின் செலவினங்களை அனுமதிக்காது. அதிபா் தோ்தல் சவாலில் கேபிரியல் போரிக் வெற்றி பெற்றுவிட்டாா். அவருக்கு அரசியல், பொருளாதார சவால்கள் காத்திருக்கின்றன...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com