அச்சத்தில் ஊடகவியலாளர்கள்! பத்திரிகை சுதந்திரம் குறித்த தலையங்கம்

அச்சத்தில் ஊடகவியலாளர்கள்! பத்திரிகை சுதந்திரம் குறித்த தலையங்கம்

 அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகம் குறித்த கவலையில் நியாயம் இல்லாமல் இல்லை. உலக அளவில் அரசியல் கட்சிகள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் மக்கள் நம்பிக்கையும், மரியாதையும் இழந்து வருகிறார்கள். ஜனநாயகப் போர்வையில் அல்லது ஜனநாயகத்தின் தோல்வியில் எதேச்சதிகாரம் தலைதூக்குகிறது என்பது நிஜம்.
 அரை நூற்றாண்டுக்கும் மேலாக செல்வாக்கு பெற்றிருந்த வலதுசாரி, இடதுசாரி, மத்தியசாரி கட்சிகளுக்கு தற்போது மக்கள் ஆதரவு குறைந்துவிட்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. எந்த ஒரு கட்சியின் மீதும் ஈர்ப்போ ஆதரவோ இல்லாதவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
 ஐரோப்பிய ஜனநாயக நாடுகளின் நாடாளுமன்றங்களில் 2015 முதல் 2017 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் 30-க்கும் அதிகமான புதிய அரசியல் கட்சிகள் நுழைந்திருக்கின்றன. இது அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதன் அறிகுறி.
 அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்போது எதேச்சதிகார சக்திகள் தலைதூக்கும் என்பது வரலாறு. அதற்கு இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லரும் உதாரணங்கள். ஜனநாயகம் நிலவும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் மாற்றுக்கருத்தையும், விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சூழல் பரவலாகவே காணப்படுகிறது. அதன் விளைவாக, மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கருத்து சுதந்திரமும், பத்திரிகையாளர்களும்.
 "ரிப்போர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' (எல்லைகள் இல்லாத நிருபர்கள்) என்கிற அமைப்பு 2021-இல் பத்திரிகை சுதந்திரம் குறித்த ஆய்வு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆண்டுதோறும் இதுபோன்ற அறிக்கையை அவர்கள் வெளியிடுவது வழக்கம். 2021-இல் 488 பத்திரிகையாளர்கள் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை. இது 2020-ஆம் ஆண்டைவிட 20% அதிகம். 46 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 65 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பணயக் கைதிகளில் 60 பேர் பெண்கள். இது 2020-ஐவிட 30% அதிகம்.
 பெலாரஸில் கடந்த ஆகஸ்ட் 2020 தேர்தலுக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் மீது அரசு நடத்திய அடக்குமுறையில் பலர் பாதிக்கப்பட்டனர். அதேபோல, மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த ராணுவ புரட்சிக்குப் பிறகு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக முனைப்புடன் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் சீன கம்யூனிஸ்ட் ஆட்சி தேசிய பாதுகாப்புச் சட்டம் என்கிற பெயரில் எதிர்ப்பாளர்களைக் கடுமையாக நசுக்க முற்பட்டிருக்கிறது.
 சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு மனித உரிமை மீறலை கட்டவிழ்த்துவிட கொள்ளை நோய்த்தொற்று வசதியாக அமைந்துவிட்டது. தேச நலன், தேச பாதுகாப்பு என்கிற பெயரில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது. சில ஐரோப்பிய நாடுகள் தங்களது அதிகாரத்துக்கும் ஆட்சிக்கும் ஆபத்து என்று கருதும் செய்திகள் வெளியிடப்படுவதை சட்டத்தின் மூலம் தடுக்க முயல்கின்றன. ஸ்பெயினில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஊடகங்களை கொச்சைப்படுத்துவதும், செய்தி வெளியிடுவதை தடுப்பதும், பத்திரிகையாளர் கூட்டத்தில் சில நிருபர்கள் கலந்துகொள்வதை அனுமதிக்க மறுப்பதும் அரங்கேறி வருகிறது.
 2014 முதல் ஐரோப்பிய நாடுகளில் பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை ஆய்வு செய்கிறது "ஒன் ஃபிரி பிரஸ் கொயலிஷன்' என்கிற அமைப்பு. அதன் 2021 அறிக்கையின்படி, ஈரான், சிரியா, மெக்சிகோ, சூடான், கெளதமாலா உள்ளிட்ட நாடுகளில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், பலரை தங்களது கடமையைச் செய்வதிலிருந்து முடக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் பொய்ச் செய்திகளும், தவறான தகவல்களும் சமூக ஊடகங்களின் மூலம் பரவுவதற்கு அந்த அச்சுறுத்தல்கள் வழிகோலுகின்றன என்கிறது அந்த அறிக்கை.
 பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஐ.நா. சபை, ஆண்டுதோறும் நவம்பர் 2-ஆம் தேதியை பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல் தடுப்பு தினமாக அறிவித்தது. அது வெறும் அடையாளம்தானே தவிர, அதனால் பெரிய அளவில் பயன் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. கருத்து சுதந்திரத்தையும், செய்திகள் சேகரிப்பையும், பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்வதையும் உறுதிப்படுத்தும் சர்வதேச சட்ட வழிமுறை ஏற்படாதவரையில், இதுபோன்ற அடையாள முயற்சிகள் உதட்டளவு ஆறுதலாகத்தான் இருக்க முடியும்.
 தங்களது தவறுகள் வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் ஆட்சியாளர்களும், தங்களது கொள்ளை லாபம் பாதிக்கப்படும் என்கிற கவலையில் சுயநலவாதிகளும் பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறைக்கும் தாக்குதல்களுக்கும் முனைகிறார்கள். அதனால் தகவல், கொள்கை, அரசியல் ஆகியவற்றுக்கான இடம் குறைந்து சுதந்திரமான பத்திரிகையாளர்கள் பலவீனமடைகிறார்கள்.
 இந்தத் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்கள் என்பதையும், தகவலுக்கான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதையும் ஜனநாயக நடைமுறையில் பொதுவெளி விவாதமாக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை சாற்றுரையின் 19-ஆவது பிரிவு வழங்கும் தகவலுக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்குமான உரிமைக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதுதான் இதற்குத் தீர்வு.
 பத்திரிகையாளர்கள் திட்டமிட்டுத் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், அவர்களை தாக்குபவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதும் தொடரும்வரை ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. ஜனநாயகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் அதுதான்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com