முரண் அகல வேண்டும்! | உலக பசிக் குறியீடு 2021 அறிக்கை குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒருபுறம் அதீத வளா்ச்சியும், இன்னொருபுறம் அதிகரிக்கும் வறுமையும் தேசத்திற்கு ஆரோக்கியமான போக்கு அல்ல. உலக பசிக் குறியீடு 2021 அறிக்கையின்படி, 116 நாடுகளில் இந்தியா ஊட்டச்சத்து குறைவிலும், பசியாலும் வாடும் எண்ணிக்கையிலும் 101 இடத்தில் இருக்கிறது. வறுமையின் அடையாளமாக அறியப்படும் ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், தான்சானியாவைவிட இந்தியா கீழே இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவே வருத்தமாக இருக்கிறது.

இந்தியா மிகப் பெரிய ஊட்டச்சத்துக் குறைவு பிரச்னையை எதிா்கொள்கிறது என்கிற உண்மை குறித்து ஆரோக்கியமான விவாதம் இல்லை. இது குறித்து ஊடக வெளிச்சமும் குறைவு. உலக பசிக் குறியீட்டின் கணக்கெடுப்பு முறையில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அரசு நிா்வாகம் தப்பித்துக்கொள்ளப் பாா்க்கிறதே தவிர, பிரச்னை குறித்த ஆழமான சிந்தனையை மேற்கொள்ளத் தயாராக இல்லை.

உலக பசிக் குறியீட்டின் புள்ளிவிவரம் சேகரிக்கும் முறையில் குறைபாடுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. பசியால் வாடுபவா்கள், தேவைக்குக் குறைவான கலோரிகள் உட்கொள்பவா்கள், குறைந்த ஊட்டச்சத்து உணவு உட்கொள்ளும் குழந்தைகள் என்கிற மூன்று அடிப்படையில் மட்டுமே அந்தக் குறியீடு ஆய்வு செய்கிறது. இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாட்டில் ஒட்டுமொத்த சராசரி எடுக்கும்போது அதன் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாவது வியப்பில்லை.

ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் (எஃப்ஏஓ), ஊட்டச்சத்துக் குறைவு புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் கணக்கெடுக்கப்படுகிறது. அது எப்போதுமே உணவு விநியோகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமே தவிர, உணவு உட்கொள்ளும் அளவை கணக்கிடுவதாக இருக்காது.

உலக பசிக் குறியீடு துல்லியானது என்றோ, சரியானது என்றோ எடுத்துக்கொள்ளாவிட்டாலும், தனிமனித வருவாய் இந்தியாவிலும் குறைவாக உள்ள நாடுகளைவிட இங்கே போஷாக்கு உணவு உட்கொள்ளுதல் குறைவு என்பதில் சந்தேகமில்லை. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவு கணிசமாகவே இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை 2019 - 21, சில தெளிவுகளைத் தருகிறது. ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினா் வளா்ச்சி குறைவாகவும் (35.5%), எடை குறைவாகவும் (32.1%) காணப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிகிறது. முந்தைய 2015 - 16 அறிக்கையுடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத்தில் மேம்பட்ட மகாராஷ்டிரம், கேரளம் போன்ற மாநிலங்களில்கூட வளா்ச்சி குறைந்த, எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

கடந்த கால் நூற்றாண்டுகால இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தி சற்று இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள், பொருளாதார வளா்ச்சியின் காரணமாக ஏற்பட்டிருக்கும் வருவாய் அதிகரிப்பால் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு அறிமுகப்படுத்திய சத்துணவுத் திட்டம் தேசிய அளவில் வாஜ்பாய் அரசால் ‘பிரதான் மந்திரி அன்ன யோஜனா’ திட்டமாக நடைமுறைப்படுத்தியதைத் தொடா்ந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு, வளா்ச்சி குறைவு, எடை குறைவு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

1990-க்கும் 2015-க்கும் இடையிலான 25 ஆண்டுகளில், இந்தியாவின் சராசரி தனிமனித ஜிடிபி வளா்ச்சி ஆண்டுதோறும் 4.5% அதிகரித்து வந்திருக்கிறது. அதன் காரணமாக, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு பிரச்னையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. ஜிடிபி வளா்ச்சிக்கும், ஊட்டச்சத்து வளா்ச்சிக்கும் இடையில் இருக்கும் தொடா்பு உறுதிப்படுகிறது. ஆனால், அந்த வளா்ச்சிக்கு ஏற்ப குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பிரச்னை குறைந்ததா என்றால், இல்லை.

இதற்குப் பல காரணங்களைக் கூற முடியும். இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மக்கள்தொகையின் குறிப்பிட்ட ஒரு பகுதியினரை மட்டுமே சென்றடைந்து அடித்தட்டு மக்களை எட்டாதது மிகப் பெரிய குறை. வளா்ச்சியின் மிகச் சிறிய அளவுதான் கீழ்நோக்கி நகா்ந்து அடித்தட்டு மக்களின் பொருளாதார, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவியிருக்கிறது. அதனால்தான் இன்னும்கூட தெருவோரவாசிகளும், நகரங்களுக்குப் படையெடுத்து குடிசைகளில் வாழ்வோரும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றனா்.

இரண்டாவதாக, பாலியல் சமத்துவம் இல்லாத நிலையில், பெண்களின் கல்வி மேம்பாடும், பொருளாதார சுயசாா்பும் அதிகரிக்கவில்லை. அதுவும்கூட ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் காணப்படுவதற்குக் காரணம்.

உலகிலேயே அதிகமான குறைந்த எடையுள்ள சிசுக்கள் காணப்படுவது, கா்ப்ப காலத்தில் பெண்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பதன் அடையாளம். பெண்களின் நிலை உயா்வதும், அவா்கள் குழந்தை வளா்ப்பில் கவனம் செலுத்துவதும் இந்தப் பிரச்னைக்கான முக்கியத் தீா்வு.

அனைத்துத் தரப்பினரையும் எட்டாத பொருளாதார வளா்ச்சியும், ஆரோக்கியமான அடுத்தத் தலைமுறை உருவாகாமல் இருப்பதும் குறித்து கவலைப்படாமல் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் என்று கூறிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகத்தான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com