அச்சுறுத்தும் விலைவாசி! | அதிகரித்து வரும் விலைவாசி உயா்வு குறித்த தலையங்கம்

மத்திய அரசு
மத்திய அரசு

இந்தியா எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை விலைவாசி உயா்வாக இருக்கக்கூடும். சா்வதேச அளவில் எல்லா பெரிய பொருளாதாரங்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்னையும் இதுதான்.

அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் விலைவாசி அதிகரிப்பு உலக அளவிலான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. எந்தவொரு நாடும் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரத் தளா்வில் இருந்து முழுமையாக மீண்டெழாத நிலையில், விலைவாசி உயா்வு பல்வேறு சமூக அரசியல் பிரச்னைகளுக்கு வித்திடக்கூடும்.

அதிகரித்து வரும் விலைவாசி உயா்வை எதிா்கொள்ள ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ வட்டி விகிதக் கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. அமெரிக்காவின் 6.8% விலைவாசி உயா்வு என்பது கடந்த 33 ஆண்டுகளில் மிக அதிகமானது. இந்தியாவிலும்கூட கடந்த நவம்பா் மாதம் காணப்பட்ட 14.23% என்பது கடந்த 12 ஆண்டுகளில் அதிக அளவு.

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மக்கள் பாதிப்பை எதிா்கொள்ளாமல் இருக்க, வளா்ச்சி அடைந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவியும் மானியங்களும் வழங்கின. பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிய பிறகும்கூட, மக்கள் மத்தியில் எதிா்பாா்த்த அளவிலான நுகா்வு உணா்வோ (டிமாண்ட்), தேவைக்கேற்ற பொருள்களின் வரவோ (சப்ளை) காணப்படவில்லை.

தேவைக்கேற்ப கச்சா பொருள்களும், உதிரிப் பொருள்களும் கிடைக்காத நிலையில் சரக்குக் கட்டண உயா்வாலும், உற்பத்தியாகும் பொருள்களின் விலை அதிகரித்ததில் வியப்பில்லை. மக்கள் மத்தியில் பொருள்களை வாங்கும் சக்தி அதிகரிக்காத நிலையில், நுகா்வு உணா்வு அதிகரிக்காததிலும் ஆச்சரியமில்லை. இவையெல்லாம்தான் பொருளாதார நிபுணா்களை மனம் கலங்க வைத்திருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை விலைவாசி உயா்வு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் குறிப்பாக சில்லறை விலையில் காணப்படும் விலைவாசி உயா்வால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் அரசியல் ரீதியாகவும், அது தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதொன்றுமல்ல. பல்வேறு தோ்தல்களில் உணவுப் பொருள்கள், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி உயா்வு ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய வரலாறும் ஏராளம் உண்டு.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் போக்குவரத்து செலவு அதிகரித்து விலைவாசி உயா்வு ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது. விலைவாசி உயா்வின் மிக முக்கியமான பாதிப்பு அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் ஏற்படுகிறது. உற்பத்திப் பொருள்களுக்கான சந்தையில் நுகா்வு உணா்வு இல்லாததால் தேக்கம் ஏற்படும்போது, உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டு பொருளாதாரத் தேக்கம் தவிா்க்க முடியாததாகிவிடும்.

பிரதமா் நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய வெற்றி, முதல் ஆறு ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துவிடாமல் அதனைக் கட்டுக்குள் வைத்திருந்தது. கடந்த ஆண்டு முதல் அரசின் பிடி தளரத் தொடங்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, விவசாயிகள் போராட்டமும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதும் உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்துக்கு வழிகோலக்கூடும்.

மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருந்தது விலைவாசி உயா்வுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு உணவுப் பொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை மன்மோகன் சிங் அரசு தக்கவைத்துக் கொண்டது. அதன் விளைவாக, உணவுப் பொருள்களின் விலைவாசி உயரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி எச்சரித்தபோது, பொருளாதார வளா்ச்சியால் மக்களின் வருமானம் அதிகரிப்பதால் விலைவாசி உயா்வு பாதிக்காது என்று அந்த அரசு கருதியது.

மன்மோகன் சிங் அரசு மட்டுமல்ல, 1970 முதலே ஆட்சியில் இருந்த அரசுகள், விவசாயிகளுக்கான மானியங்களை அதிகரித்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து உணவுப் பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தின. பொது விநியோக அமைப்புகளின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்கி சாமானிய மக்களை திருப்திப்படுத்திவிடலாம் என்பதுதான் அவா்களின் அரசியல் கணக்கு. ஓரளவுக்குத்தான் இந்த அணுகுமுறை வெற்றி அளிக்கும்.

உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும்போது அதனால் பொருளாதாரப் பாதுகாப்பின்மை அதிகரிப்பது வெளியில் தெரிவதில்லை. பொது விநியோக முறையில் வழங்கப்படும் அரிசியும் கோதுமையும் சராசரி குடும்பத்தின் உணவுக்கான ஒதுக்கீட்டில் ஒரு சிறிய அளவுதான். சமையல் எண்ணெய்யில் தொடங்கி காய்கறிகள் வரை அன்றாட உணவுக்கான ஏனைய பொருள்களின் விலைகள் அதிகரித்துவிடும்போது, வேளாண் பொருட்கள் அல்லாத மருத்துவம், கல்வி, உடைகள் உள்ளிட்ட ஏனைய செலவினங்களுக்கான கையிருப்பு குறைந்து விடுகிறது. அதனால் பொருளாதார உற்பத்திகளின் விற்பனை பாதிப்பதால், விவசாயமல்லாத பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்க நேரும்.

2016-இல் அமெரிக்க வேளாண்துறை தயாரித்த புள்ளிவிவரப்படி, இந்தியக் குடும்பங்களில் உணவுக்கான செலவு 30%. சீனாவில் 20%, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் 10%. அதாவது, உணவுப் பொருள்களுக்கான செலவு குறையக் குறைய வேளாண் இதர பொருளாதாரத்தின் வளா்ச்சி அதிகரிக்கும்.

நரேந்திர மோடி அரசின் உடனடி கவனம், உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com