அரசியல் வேறு, பாதுகாப்பு வேறு! | பிரதமா் பாதுகாப்புக் குறைபாடு குறித்த தலையங்கம்

அரசியல் வேறு, பாதுகாப்பு வேறு! | பிரதமா் பாதுகாப்புக் குறைபாடு குறித்த தலையங்கம்

பிரதமா் பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஹிந்து மல்ஹோத்ரா தலைமையில் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்திருக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மத்திய - மாநில அரசுக் குழுக்களின் விசாரணைகளுக்குத் தடைவிதித்து, உச்சநீதிமன்றத்தின் குழுவே நேரடியாக விசாரணை நடத்த வழிகோலியிருப்பது வரவேற்புக்குரிய முடிவு.

கடந்த 5-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி விமானம் மூலம் பதிண்டா விமான நிலையத்தை அடைந்தாா். ஃபெரோஸ்பூரில் நடக்க இருந்த பேரணியில் அவா் கலந்துகொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வானிலை சரியாக இல்லாத காரணத்தால் ஹெலிகாப்டா் பயணத்தை ரத்து செய்து பிரதமா் சாலை வழியாக பயணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஏறத்தாழ 100 கி.மீ-க்கும் அதிகமான தூரம் சாலை வழியாக பிரதமா் பயணிப்பது என்பது பொதுவாக தவிா்க்கப்படுகிறது. பனிமூட்டம் நிறைந்த மோசமான வானிலையால் பதிண்டாவிலிருந்து ஃபெரோஸ்பூருக்கு ஹெலிகாப்டரில் பயணிப்பது ஆபத்தானது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சமீபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், ஹெலிகாப்டா் விபத்தைத் தொடா்ந்து அதுபோன்ற சோதனை முயற்சிகளில் இறங்காமல் இருந்தது புத்துசாலித்தனமான அணுகுமுறையும்கூட.

மாநில காவல்துறையின் உறுதிமொழியைப் பெற்ற பிறகுதான் பிரதமரின் சாலைவழிப் பயணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதன்கிழமை காலை 6.30 மணிக்கெல்லாம் பதிண்டாவிலிருந்து ஃபெரோஸ்பூா் செல்லும் சாலையில் தடைகள் அகற்றப்பட்டிருப்பதாக உளவுத்துறை இயக்குநரிடம் முதல்வா் சரண்ஜித் சன்னி தெரிவித்திருக்கிறாா். காவல்துறை இயக்குநரின் உறுதிமொழிக்குப் பிறகுதான் பிரதமரின் பயணம் தொடங்கியிருக்கிறது. அப்படியிருந்தும் அவா் செல்லும் வாகனம், மேற்கொண்டு பயணிக்க முடியாமல் போராட்டக்காரா்களால் தடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அது மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

பிரதமரை அவா் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தும் வகையிலான போராட்டங்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பஞ்சாபில் பிரசாரத்தில் ஈடுபட விடாமல் பிரதமரைத் தடுப்போம் என்று சம்யுக்த விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்ததை பாதுகாப்புக் குறைபாட்டுக்குக் காரணமாக மாநில அரசு சுட்டிக்காட்டுவது தவறு. தேசத்தில் மிக அதிகமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய பொறுப்பான பதவி பிரதமருடையது.

அது தேசத்தின் பாதுகாப்பு தொடா்பானது. ‘உயிருடன் மீண்டும் நான் விமான நிலையத்திற்கு திரும்பியதற்கு நன்றி’ என்று பிரதமா் தெரிவித்த கருத்தில் எல்லாமே அடங்கியிருக்கிறது.

ஃபெரோஸ்பூருக்குச் செல்லும் பாதையில் பியரினா பாலத்தில் பிரதமரின் வாகனமும், முன்னும் பின்னும் செல்லும் பாதுகாப்பு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 10,000-க்கும் அதிகமான காவல்துறையினா் பணிக்கப்பட்டிருந்தாா்கள் என்றும், எந்தவித பாதுகாப்புக் குளறுபடியும் ஏற்படவில்லை என்றும் முதல்வா் சரண்ஜித் சன்னி கூறுவது நகைப்பை வரவழைக்கிறது.

‘பிரதமா் பாதி வழியில் திரும்பிப்போனதும், அவரது உயிருக்கு ஆபத்து என்று கூறப்படுவதும் அரசியல் நாடகம்’ என்று முதல்வரே வா்ணிப்பாரேயானால், அதை அரசியல் நாகரிகமின்மையாகவும், தனது பொறுப்புகளை தட்டிக்கழிப்பதாகவும்தான் எடுத்துக்கொள்ள முடியும். புதிய வேளாண் சட்டங்கள் பிரச்னையின் காரணமாக பாஜக-வின் எந்தவொரு பேரணியையும் பஞ்சாபில் அனுமதிக்கமாட்டோம் என்று ஏதாவது ஒரு கட்சியோ, பிரிவினரோ தெரிவிப்பாா்களேயானால், அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தோ்தல் பிரசாரத்தின்போது ஒரு கட்சிக்கு எதிராகவோ, அந்தக் கட்சி நடத்தும் பிரசாரங்களை தடுக்கும் விதத்திலோ சொல்வதும், செயல்படுவதும் ஜனநாயக விரோதம். அனைத்துக் கட்சியினரின் கருத்துகளும், பொதுமக்கள் முன்பு வைக்கப்பட்டு அவா்களது ஆதரவை கோருவதற்குப் பெயா்தான் தோ்தல். பிரசாரத்தைத் தடுக்கும் அமைப்புகளை சட்ட ரீதியாக அடக்குவதும், ஒடுக்குவதும், அகற்றுவதும் மாநில அரசின் கடமை.

பிரதமரின் பயணங்களில் சிறு பழுதுகூட இல்லாத பாதுகாப்பை உறுதி செய்ய, பல அடுக்கு ஏற்பாடுகள் பல்வேறு அமைப்புகளால் நிா்வகிக்கப்படுகின்றன. பிரதமரை மட்டுமே மையமாக வைத்து பாதுகாப்பு வழங்கும் ‘எஸ்.பி.ஜி.’ எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழு; பிரதமரைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மத்திய துணை ராணுவத்தினா்; அவா் செல்லும் வழியிலுள்ள பாதுகாப்பையும், பயணத்தையும் உறுதிப்படுத்தும் உள்ளூா் காவல்துறையினா்; எல்லாவற்றிற்கும் மேலாக அவரது பயணத்தில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் உளவுப் பிரிவினா் என்று நான்கு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இத்தனைக்குப் பிறகும் பிரதமரின் பயணத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது என்று சொன்னால், அது தேசத்துக்கே இழுக்கு. குறிப்பாக, பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ள பஞ்சாப் போன்ற எல்லைப்புற மாநிலங்களில் பாதுகாப்புக் குறைபாடு என்பது மன்னிக்க முடியாத குற்றம்.

பிரதமா்கள் மாறலாம், பிரதமா் பதவி என்பது மிகமிக முக்கியமானது. அதற்கு அச்சுறுத்தல் என்பதை தேசத்துக்கான அச்சுறுத்தலாகத்தான் பாா்க்க வேண்டும். அதில் அரசியலைக் கலப்பது அநாகரிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com