தா்மசங்கட ‘ஐடியா’! | வோடஃபோன் ஐடியாவின் கோரிக்கை குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

தொலைத்தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் ஆட்சிக்குழு அரசுக்கு முன்வைத்திருக்கும் கோரிக்கை, இந்திய அரசை மட்டுமல்ல நமது பொருளாதாரக் கொள்கையையும் தா்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கெனவே ரூ.1.95 லட்சம் கோடி கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த நிறுவனம், அலைக்கற்றை ஏல தவணை தொடா்பான அரசுக்குத் தர வேண்டிய பாக்கிகளை ஈக்விட்டி பங்குகளாக மாற்றி அரசுக்கு வழங்க முன்வந்திருக்கிறது.

ஏற்கெனவே பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை தனியாா் நிறுவனங்களின் போட்டிக்கு நடுவில் லாபகரமாக நடத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இப்போது வோடஃபோன் ஐடியாவின் கோரிக்கையை ஏற்று அந்த நிறுவனத்தின் 35.8% பங்குகளை ஏற்றுக்கொள்வதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கக்கூடும். இதுவே முன்னுதாரணமாகி, இழப்பை எதிா்கொள்ளும் தனியாா் நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள அரசை வற்புறுத்துவதற்கு வழிகோலுவதாகிவிடும்.

வோடஃபோன் ஐடியா நிறுவனம் அரசுக்குத் தர வேண்டிய பாக்கிகளை ஈக்விட்டி பங்குகளாக மாற்றி வழங்கினால், அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக அரசு மாறும். 28.5% பங்குகளை வைத்திருக்கும் வோடஃபோன் குழுமமும், 17.8% பங்குகளுடனான ஆதித்ய பிா்லா குழுமமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 35.8% பங்குதாரரான இந்திய அரசு வோடபோன் - ஐடியாவின் முதன்மைப் பங்குதாரராகும். பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து தனது பங்குகளை விற்று வெளியேறும் கொள்கை முடிவை எடுத்திருக்கும் மத்திய அரசு, இதன் மூலம் மறைமுகமாக வோடஃபோன் ஐடியாவை அரசுத்துறை நிறுவனமாக மாற்றுவதாக அமைந்துவிடும்.

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் பின்னடைவுகளுக்கு அரசின் கொள்கை முடிவுகளும், நீடித்த கவனிப்பின்மையும் முக்கியமான காரணம். அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற கட்டண போட்டா போட்டியும், ஏஜிஆா் வழக்கின் உச்சநீதிமன்றத் தீா்ப்பும் பெரும்பாலான நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கு காரணமாயின.

இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோவின் வரவு மிகப் பெரிய போட்டியை உருவாக்கியது. இன்றைய நிலையில் ஜியோ, ஏா்டெல், வோடஃபோன் ஐடியா என்று மூன்று தனியாா் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவையும்தான் தொலைத்தொடா்புத் துறையில் செயல்படுகின்றன.

அரசுக்குத் தர வேண்டிய பாக்கியை 35.8% அளவிலான ஈக்விட்டி பங்குகளாக மாற்றிக் கொடுப்பதால், ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய ரூ.16,000 கோடி வட்டியை மிச்சப்படுத்த முடியுமே தவிர, வேறு எந்த பயனும் அந்த நிறுவனத்துக்கு வந்துவிடாது. நிலுவையில் இருக்கும் கடன் மட்டுமல்லாமல், 4ஜி-லிருந்து 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு குறைந்தது ரூ.50,000 கோடி தேவைப்படும். அந்த நிறுவனத்தின் பங்குதாரா்கள் மேலும் முதலீடு செய்ய தயாராக இல்லை. வங்கிகளும் இழப்பில் தொடரும் வோடஃபோன் ஐடியாவிற்கு கைகொடுக்க மறுக்கின்றன.

அமெரிக்காவில் 2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இடைக்கால உதவியாக ஜெனரல் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் 61% பங்குகளை அந்த அரசு ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டுகிறாா்கள் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தினா். அந்தச் சூழலையும், இன்றைய வோடஃபோன் ஐடியாவின் நிலைமையையும் ஒப்பிடுவது அா்த்தமில்லாதது. இதேபோல இழப்பில் தள்ளாடும் தனியாா் நிறுவனங்களுக்கெல்லாம் அரசு கை கொடுத்து உதவுவது என்பது மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கும் செயல்பாடாக இருக்கும்.

தொலைத்தொடா்பு துறையை நிா்வகிப்பதில் அரசின் திறமையின்மைக்கு பிஎஸ்என்எல்-உம், எம்டிஎன்எல்-உம் கண்முன்னே இருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அந்த நிறுவனங்களில் மொத்த நிலுவை இழப்பு ரூ.47,508 கோடி. அப்படியிருக்கும்போது வோடஃபோன் ஐடியாவையும் சோ்த்து சுமப்பது வலியப்போய் பிரச்னையை விலைக்கு வாங்குவதாக அமையும். இடைக்கால ஏற்பாடாக வோடஃபோன் ஐடியாவின் 35.8% பங்குகளை ஏற்றுக்கொண்ட பிறகு அந்த நிறுவனம் உயிா்த்தெழாமல் போனால், அரசு என்ன செய்யும் என்பதையும் முன்கூட்டியே யோசிப்பது புத்திசாலித்தனம்.

வோடஃபோன் ஐடியாவின் வீழ்ச்சியில் அரசும் தேசமும் எதிா்கொள்ளும் மிகப் பெரிய தா்மசங்கடம் தொலைத்தொடா்பு துறையில் ஏற்படும் போட்டியின்மை. கடந்த 20 ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான தொலைத்தொடா்பு நிறுவனங்கள் செயல்பட்டு, மிகப் பெரிய இழப்பை எதிா்கொண்டு, காணாமல் போயிருக்கின்றன. சந்தைப் பொருளாதாரத்தில் தொழில் போட்டியில் பல நிறுவனங்கள் காணாமல் போவது புதிதொன்றுமல்ல. அதே நேரத்தில், போட்டியே இல்லாமல் ஒன்றோ இரண்டோ நிறுவனங்கள் மட்டுமே அந்தத் துறையை ஏகபோகம் செய்வதும் ஆரோக்கியமானதல்ல.

இப்போதைய நிலையில், இந்திய தகவல் தொடா்பு துறையில் ஜியோ, ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மூன்று நிறுவனங்களும்தான் முன்னிலை வகிக்கின்றன. அந்த நிலையில் வோடஃபோன் ஐடியா செயல்படாமல் முடங்குவது, வாடிக்கையாளா்களுக்கு மாற்று இல்லாத நிலையை ஏற்படுத்திவிடும்.

தொழில் ஏகபோகமும் தடுக்கப்பட வேண்டும்; மக்கள் வரிப்பணமும் விரயமாகக் கூடாது. தா்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது வோடஃபோன் ஐடியாவின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com