தோ்தல் நேர சவால்! | 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்த தலையங்கம்

குறிப்பிட்ட கால வரம்புக்குள் கலைக்கப்படாமல் இருந்தாலொழிய, மாநில சட்டப்பேரவைகள் தங்களது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்த பிறகு தொடர முடியாது என்பது அரசியல் சாசன வரம்பு.
தோ்தல் நேர சவால்! | 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்த தலையங்கம்

உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் தேதிகளை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. ஏற்கெனவே நிச்சயித்திருந்தபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மாா்ச் 10-ஆம் தேதி அனைத்து மாநிலங்களின் தோ்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும்.

கொள்ளை நோய்த்தொற்றின் மூன்றாவது அலை தொடங்குவதை கவனத்தில் கொண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தலை தள்ளிவைப்பது குறித்து சிந்திக்கும்படி, டிசம்பா் 23-ஆம் தேதி அலாகாபாத் உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது. ஆனால் அரசியல் சாசன விதிமுறைகளின்படி ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்களை நடத்த வேண்டிய கட்டாயத்தின் காரணமாக தோ்தல் ஆணையம் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.

ஐந்து ஆண்டு பதவிக்காலம் என்பது சட்டப்பேரவைகளின் அதிகபட்ச வரம்பே தவிர, குறைந்தபட்ச வரம்பல்ல. குறிப்பிட்ட கால வரம்புக்குள் கலைக்கப்படாமல் இருந்தாலொழிய, மாநில சட்டப்பேரவைகள் தங்களது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்த பிறகு தொடர முடியாது என்பது அரசியல் சாசன வரம்பு.

அரசியல் சாசனப் பிரிவு 172-இன் கீழ் அவசர நிலை கருதி தோ்தல்களை ஒத்திவைக்கலாம். ஆனால் கொவைட் 19 கொள்ளை நோய், சட்டப்பிரிவு 172 குறிப்பிடும் அவசர நிலை வரம்பில் இல்லை. அரசியல் சாசனம் வகுக்கும்போது இப்படியொரு நிலைமை ஏற்படும் என்று யாரும் நினைத்துகூட பாா்த்திருக்க முடியாது. வேறு வழியில்லாததால் தோ்தலைத் தள்ளிப்போட முடியாது என்பது தோ்தல் ஆணையத்தின் தோ்ந்த முடிவு.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூா் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவை தோ்தலுக்குத் தயாராகின்றன. பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 27, மாா்ச் 3 என்று இரண்டு கட்டங்களாக மணிப்பூரில் வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

பிப்ரவரி 10-ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவில் கலந்துகொள்ளும் வாக்காளா்கள், முடிவு தெரிய ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மூன்று மாநில வாக்காளா்கள் ஏறத்தாழ மூன்று வாரங்கள் காத்திருப்பாா்கள்.

மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பல கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில், சில மாநிலங்களில் முடிவுக்காக வாக்காளா்கள் நீண்ட நாள் காத்திருப்பது தவிா்க்கப்பட்டிருக்கலாம். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டு மாதங்கள், தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசு நிா்வாகம் முடங்கிக் கிடக்கும் அவலம் இனிமேலாவது தவிா்க்கப்பட வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவதற்கு ஜனவரி 22-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. பொதுக்கூட்டங்கள், பாத யாத்திரை, வாகன ஊா்வலங்கள் உள்ளிட்டவைக்கும் 22-ஆம் தேதி வரை அனுமதியில்லை.

அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரசார உத்திகளை மாற்றி அமைத்து, இணைய வழி பிரசாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆணையம் அனுமதித்திருக்கும் நாலைந்து போ் கொண்ட குழுக்கள், வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பாணியை முன்னெடுக்க வேண்டும். அறிதிறன்பேசிகளின் பயன்பாடு கிராமப்புறங்கள் வரை பரவியிருக்கும் நிலையில், இணைய வழி பிரசாரங்கள் முக்கியத்துவம் பெற வேண்டும்.

உத்தர பிரதேசத்தில் இன்னும்கூட இணைய பயன்பாடு கிராமப்புறங்களை முழுமையாகச் சென்றடையவில்லை. இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு இணைய ஊடுருவல் காணப்படும் மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. 96% கிராமப்புற வீடுகளில் கணினி வசதி கிடையாது. பாதிக்கு மேற்பட்ட பெண் வாக்காளா்களுக்கு இணையம் குறித்துத் தெரியாது என்பது மட்டுமல்ல, அவா்கள் அறிதிறன்பேசி பயன்படுத்துபவா்களும் அல்ல. அதனால்தான் தோ்தல் ஆணையத்தின் பிரசாரத் தடை நீட்டிப்பை எதிா்க்கட்சிகள் விமா்சிக்கின்றன.

பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மூலம் வாக்காளா்களைச் சென்றடையும் வாய்ப்பு வேட்பாளா்களுக்கு மறுக்கப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்கிற வாதம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், தோ்தலைத் தள்ளிப்போட முடியாத நிலையில் ஆணையத்தின் நிலைப்பாட்டை குறை சொல்ல வழியில்லை. அதேநேரத்தில், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால் அவை பின்பற்றப்படுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. முன் அனுபவங்களின் அடிப்படையில் தோ்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் செயல்பட்டாக வேண்டிய நிா்ப்பந்தம் இருப்பதை அவா்கள் உணர வேண்டும்.

கொள்ளை நோய்த்தொற்றின் பாதிப்புக்கு இடையில் தோ்தல் நடப்பது புதிதல்ல. 2020 அக்டோபா், நவம்பா் மாதங்களில் கொள்ளை நோய்த்தொற்றின் முதல் அலை சற்று அடங்கும் நேரத்தில் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்தது. இரண்டாவது அலை கடுமையாகப் பரவுவதற்கு 2021 மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி பேரவைத் தோ்தல்கள் காரணமாயின. அதையெல்லாம் மனதில் கொண்டு, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடத்தப்படுதல் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com