முடக்குதல் தகாது! | கல்விச்சாலைகளை மீண்டும் திறப்பது பற்றிய தலையங்கம்

முடக்குதல் தகாது!  | கல்விச்சாலைகளை மீண்டும் திறப்பது பற்றிய தலையங்கம்

 முறையான பாதுகாப்புகளுடன் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருப்பது மிகச் சரியான வழிகாட்டுதல். அவர் கூறியிருப்பதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளின் மன ரீதியான, உடல் ரீதியான, அணுகுமுறை ரீதியான நலன்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவரது கருத்தை பெரும்பாலான ஆசிரியர்களும் வழிமொழிகிறார்கள்.
 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று உலக அளவில் எல்லா நாடுகளிலும் இயல்பு வாழ்க்கையைத் தடம் புரளச் செய்திருக்கிறது என்பது என்னவோ உண்மை. அதனால், பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள் மீது விதிக்க வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு ஏற்பட்டது. பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும்கூட, ஒட்டுமொத்த சமுதாயத்தின் நன்மையைக் கருதி கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு அரசுகள் தள்ளப்பட்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் பாதித்தது என்றாலும், உலக அளவில் கல்வித் துறைக்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு அவை எல்லாவற்றையும்விட அதிகம். கல்வி கற்பதற்கான வாய்ப்பு குழந்தைகளுக்கு முடக்கப்பட்டது என்பதுடன் நின்றுவிடாமல், உயர்கல்விக்கு போக இருக்கும் பருவத்தில் பல இளைஞர்களின் வருங்காலக் கனவுகளைச் சிதைத்திருக்கிறது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற ஏக்கமும், மன அழுத்தமும் வயது வித்தியாசமில்லாமல் ஆரம்பக் கல்வி பெறும் குழந்தைகளில் இருந்து உயர்கல்வி பெறும் இளைஞர்கள் வரை பாதித்திருக்கும் நிலை காணப்படுகிறது.
 இரண்டாண்டுகளுக்கு முன்பு கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் தாக்கியபோது, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனால் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. அன்றைய சூழலில் மருத்துவர்கள் உள்பட யாருக்குமே புதிதாகக் கிளம்பி இருக்கும் தீநுண்மி மனிதர்களை எப்படி பாதிக்கப் போகிறது என்கிற எந்தவிதக் கணிப்பும் இல்லாத நிலை காணப்பட்டது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தீநுண்மித் தொற்றின் பாதிப்பு அறிவியல் உலகத்துக்கே புதிராக இருந்த நேரத்தில், பள்ளிகள் மூடப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
 பள்ளி - கல்லூரிகளுக்குச் செல்லும் குழந்தைகளை கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு தாக்காமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்ததால் "முடக்கம்' என்பது தவிர்க்க முடியாதது என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் புரிந்துகொண்டார்கள், ஏற்றுக்கொண்டார்கள். நோய்த்தொற்றுப் பரவல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. கொவைட் 19 பல உருமாற்றங்களை அடைந்துவிட்டது. வல்லுநர்கள், தீநுண்மித் தொற்றைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான பல வழிமுறைகளை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால், இனியும் குழந்தைகளை வகுப்பறைகளிலிருந்து அகற்றி நிறுத்துவது என்பது கல்வித் துறையின் அடிப்படையையே சிதைப்பதாக மாறிவிடக்கூடும்.
 பல வெளிநாடுகள் இதை உணர்ந்து குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்கின்றன. பிரிட்டனில் சில கட்டுப்பாடுகளுடன் இடைநிலைக் கல்விச் சாலைகள் வழக்கம்போல செயல்படுகின்றன. நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்தாலும்கூட பள்ளிகளை மூடுவதில்லை என்பதை பிரிட்டன் அரசு கொள்கை முடிவாகவே எடுத்திருக்கிறது.
 பிரான்ஸில் கல்வியாண்டு வழக்கம்போல ஜனவரியில் தொடங்கியிருக்கிறது. பள்ளிகளை மூடுவது என்பது அரசின் கடைசி முடிவாகத்தான் இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவில் கோடிக்கணக்கான கொவைட் 19 பரிசோதனைக் கருவிகள் எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு, வகுப்புகள் நடப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது பைடன் நிர்வாகம்.
 அடுத்த இரண்டு மாதங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உருமாற்ற நோய்த்தொற்றால் ஐரோப்பாவில் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் கணித்திருக்கிறார். அதே நேரத்தில், பள்ளிகள் வழக்கம்போல மாணவர்களின் வருகையுடன் நடக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். "கடைசியாக முடக்கப்படுவதும், முதன்முதலில் திறக்கப்படுவதும் கல்விச் சாலைகளாகத்தான் இருக்க வேண்டும்' என்கிறது அவரது அறிக்கை.
 வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக எந்தத் தொழில்நுட்பமும் இருக்க முடியாது என்பதை உலகம் உணர்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கோடி குழந்தைகள் வகுப்பறையில் ஆசிரியரால் மட்டுமே கற்றுத்தர முடிவதைப் பெற முடியாமல் இழந்திருக்கிறார்கள். தாங்கள் கற்றுத் தருவது குழந்தைகளுக்குப் புரிகிறதா இல்லையா என்பதை, நேரிடையாக அவர்களது உடல் மொழியில் இருந்துதான் ஆசிரியர் புரிந்துகொள்ள முடியும் என்பதால், இணையவழி வகுப்புகள் நேரடி வகுப்புகளுக்கு மாற்று அல்ல.
 கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், கடமை உணர்வுடன் தங்களது மாணவர்கள் கல்வி வாய்ப்பை இழந்துவிடாமல் பாதுகாத்த பல ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். நமது தமிழகத்திலேயேகூட சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் மனோன்மணி நகரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சீனிவாசன், மாணவர்களைத் தேடிச்சென்று வகுப்புகள் நடத்தியதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
 அலுவலகங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் போன்றவை செயல்படலாமென்றால், அதைவிட முக்கியம் கல்விச்சாலைகள் பாதுகாப்புடன் செயல்படுவது என்பதை வலியுறுத்தத் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com