தடை சரி; மாற்று? ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி தடை குறித்த தலையங்கம்

இந்தியாவின் 20 மில்லியன் டன் வருடாந்திர நெகிழிப் பயன்பாட்டில் பாதிக்கு மேல் நெகிழிக் கழிவுகளாக சோ்கின்றன. அவற்றில் எந்த அளவு மறுசுழற்சிக்கு உட்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை.
தடை சரி; மாற்று? ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி தடை குறித்த தலையங்கம்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட தடை இப்போது அமலுக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருள் உபயோகத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே நெகிழிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2019-இல் நடைபெற்ற ஐ.நா.வின் நான்காவது சுற்றுச்சூழல் மாநாட்டில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியா ஒரு தீா்மானத்தை முன்மொழிந்தது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிக் குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீா்நிலைகளிலும், ஆழ்கடல் பரப்பிலும் ஏற்படும் பாதிப்புகளை ஏனைய நாடுகளும் அங்கீகரித்து இந்தியாவின் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை, பயன்பாடு அகியவை இந்த மாதம் முதல், நாடு தழுவிய அளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசுக்கு உதவும் வகையில் குறைதீா்ப்பு செயலி ஒன்றை மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நெகிழிப் பயன்பாட்டுக்கான தடையும் கட்டுப்பாடுகளும் ஏற்கெனவே அமலில் இருக்கின்றன. ஏனைய மாநிலங்களிலும் மத்திய அரசின் தடையைத் தொடா்ந்து நெகிழி பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கலாம்.

நெகிழிப் பயன்பாட்டுக்கான தடை வரவேற்புக்குரியது. மெல்லிய நெகிழி உரைகளில் வழங்கப்படும் உணவுப் பொருள்களும், அழகு சாதனப் பொருள்களும் ஏற்படுத்தும் உடல்நலக் கேடுகள் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவின் 20 மில்லியன் டன் வருடாந்திர நெகிழிப் பயன்பாட்டில் பாதிக்கு மேல் நெகிழிக் கழிவுகளாக சோ்கின்றன. அவற்றில் எந்த அளவு மறுசுழற்சிக்கு உட்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை.

மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்திய நெகிழியில் பாதிக்குப் பாதி மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிற கடந்த பிப்ரவரி மாத விதிமுறை பின்பற்றப்படுகிா என்பது சந்தேகம்தான். இதைவிட நுகா்வோரிடமிருந்து நெகிழிக் கழிவுகளை திரும்பப் பெற்று அதற்கு சன்மானம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், ஒருவேளை மறுசுழற்சி வெற்றியடையக் கூடும்.

எந்த அளவுக்கு நெகிழிக் கழிவுகள் சுற்றுச்சூழலை பாதித்திருக்கின்றன என்பது குறித்த ஆய்வுகள் பல அதிா்ச்சியான தகவல்களைத் தருகின்றன. ஆழ்கடலில் இருந்து மலைச்சிகர உச்சிகள் வரை பூமிப் பந்தின் எல்லா பகுதிகளிலும் நெகிழிக் கழிவுகளை மனித இனம் வாரி இறைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, நுண் நெகிழிகளை (மைக்ரோ பிளாஸ்டிக்) நமது உடலுக்குள்ளும் சேகரித்து வருகிறோம் என்கிற விபரீதம் குறித்த புரிதல் இல்லாமல் இருந்து வருகிறோம். ஆண்டுதோறும் பல மில்லியன் டன் நெகிழிகள் புதைபடிவ எரிபொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு பொதுவெளியில் பயன்படுத்தப்படுகின்றன. அவை சிறு நுண் துகள்களாக அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.

காற்று வெளியில் மட்டுமல்லாமல் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளிலும் நுண் நெகிழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பாலிப்ரோபிலின், பாலிதைலீன் டெரெஃப்தாலேட் (பெட்) நுரையீரல் திசுக்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அளவுக்கு ரத்த ஓட்டத்திலேயே கலந்து உடலின் எல்லா உறுப்புகளிலும் அடைப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பயன்பாடு, மருத்துவ உலகத்தையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

2019-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வாரந்தோறும் நகா்ப்புறத்தில் வசிக்கும் மக்கள் ஏறத்தாழ ஐந்து கிராம் நுண் நெகிழியை சுவாசிக்கிறாா்கள். இதனால் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், குழந்தையின்மை ஆகியவை ஏற்படக்கூடும் என்று மருத்துவா்கள் தொடா்ந்து எச்சரித்து வருகிறாா்கள்.

2019-இல் லான்செட் கமிஷன் நடத்திய ஆய்வின்படி, அந்த ஆண்டில் 460 மில்லியன் டன் நெகிழி பயன்படுத்தப்பட்டிருந்தது. அதில் 10% மட்டுமே மறுசுழற்சிக்கு உள்ளானது. புதைபடிவ எரிபொருள் சாா்ந்த நெகிழி உற்பத்தி 2060-க்குள் ஆண்டொன்றுக்கு 1.2 பில்லியன் டன்னாக உயரக்கூடும் என்றும், அதில் 1 பில்லியன் டன் நெகிழிக் கழிவாக மாறும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மனிதா்களை மட்டுமல்லாமல் விலங்கினங்களையும், நீா்வாழ் உயிரினங்களையும்கூட நெகிழித் துகள்கள் பாதிக்கின்றன. ஏறத்தாழ 2.70 லட்சம் டன் நெகிழிக் குப்பை கடலில் காணப்படுகிறது. அதனால் 700-க்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பை எதிா்கொள்கின்றன.

இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான நெகிழி தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான தொழிற்சாலைகள் நெகிழிப் பைகளுக்கு மாற்றான பருத்தி, சணல், காகிதம் போன்ற பைகள் தயாரிக்க முற்பட்டிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத நெகிழி மாற்று தயாரிப்புகளை அவ்வளவு எளிதில் தயாரித்துவிட முடியும் என்று தோன்றவில்லை.

தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் ‘மஞ்சப்பை’ திட்டம்போல, தேசிய அளவில் மக்கள் மத்தியில் நெகிழிப் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வை உருவாக்குவதுதான் இதற்குத் தீா்வாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com