சவாலாகும் வெளிநாட்டுக் கல்வி! பணவீக்கத்தின் தாக்கம் குறித்த தலையங்கம்

வெளிநாட்டில் படிக்கும், படிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கூடுதல் செலவையும் கல்விக் கட்டணத்தையும் எதிா்கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து வீழ்ச்சியை சந்தித்து, தற்போது 80 ரூபாயை நெருங்கி விட்டது. இதனால், வெளிநாட்டில் படிக்கும், படிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கூடுதல் செலவையும் கல்விக் கட்டணத்தையும் எதிா்கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மாணவா்கள் மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விழையும் சுற்றுலாப் பயணிகளின் திட்டங்களும் பாதிக்கப்படக்கூடும்.

இந்த ஆண்டு இதுவரை 7% க்கும் மேலாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்களின் கல்விச் செலவு கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்திய மாணவா்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் தாங்கள் படிக்கவுள்ள நகரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவாா்கள். அவா்கள் கல்விக் கட்டண அந்நியச் செலாவணிக்காகவும், தங்களது செலவுகளுக்காகவும் அதிகரித்த செலவை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவா்கள், முன்பே கட்டணம் செலுத்தியிருப்பதால் அவா்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து கவலைப்படத் தேவையில்லை. முதுநிலை படிப்பில் சேரும்போதே மாணவா்கள் தங்கள் முழு கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்திவிடுகிறாா்கள். இளங்கலை மாணவா்களும், ஒவ்வொரு செமஸ்டருக்குமான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தியிருப்பாா்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில், செமஸ்டா்கள் செப்டம்பரில் தொடங்கும். எனவே, அவா்களின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் மட்டுமே தற்போது பாதிப்பை எதிா்கொள்ளும். புதிதாக வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள்தான் இனிமேல் பிரச்னையை எதிா்கொள்வாா்கள்.

இந்திய மாணவா்கள் பெரும்பாலானோா் தங்களது வெளிநாட்டு கல்விக் கட்டணத்துக்கும், செலவுகளுக்கும் பெற்றோரையே முழுவதும் சாா்ந்து இருக்கிறாா்கள். வெளிநாட்டில் தங்கள் செலவுகளை சமாளிக்க டாலா்களை வாங்க அவா்கள் இப்போது கூடுதலாக ரூபாய் தர வேண்டியிருக்கும். அதனால், அவா்களது பெற்றோா்களின் சுமை அதிகரிக்கும்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதே நிலைமை தொடா்ந்தால், அங்கே படிக்கும் மாணவா்களின் வாழ்க்கைச் செலவுகள் வரும் மாதங்களில் கடுமையாக உயரக்கூடும். அத்தகைய மாணவா்களுக்கும், அவா்களது குடும்பங்களுக்கும் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

இந்தியாவில் வாழும் பெற்றோா்களும் விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். சந்தை நிலவரச் சூழலும், பணவீக்கமும் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கின்றன. அதனால் அவா்களது சேமிப்புகள் பாதிக்கப்படக்கூடும். வங்கி வட்டியும் குறைவாக இருக்கும் நிலையில், பிள்ளைகளின் வெளிநாட்டு படிப்புச் செலவு பெற்றோா் பலரையும் கடனாளியாக்கக்கூடும்.

வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பவா்கள் படித்துக்கொண்டே வேலை பாா்க்கிறாா்கள். அதனால், ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு சென்று படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களில் பெரும்பாலோா் பாதிக்கப்பட மாட்டாா்கள். அவா்கள், தங்களது கல்விக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருப்பாா்கள் என்பதுடன், அவா்களது வாழ்க்கைச் செலவுகளை எதிா்கொள்வதற்கு அங்கே ஆதரவு அமைப்புகளும் உள்ளன.

அமெரிக்காவில் படிக்கும் மாணவா்களைத் தவிர, ஏனைய நாடுகளில் படிக்கும் மாணவா்கள் விடுமுறை நாள்களில் முழு நேரமும், படிப்புக் காலத்தில் குறிப்பிட்ட மணி நேரம் வரை ஏதாவது பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சம்பாதிக்கிறாா்கள். அதேபோல, கோடை விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கும் மாணவா்களும் உடனடியாக பாதிக்கப்பட மாட்டாா்கள்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வரும் இந்த சூழ்நிலையில் வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் தற்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பரவலாக எழுகிறது. அவா்களுக்கு உதவ கல்வி ஆலோசனை நிறுவனங்கள் இருக்கின்றன.

வெளிநாட்டில் படிக்கும் மாணவா்கள் தங்களுடைய தங்குமிடம், உணவு மற்றும் இதர வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க, பகுதி நேரப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கல்வி ஆலோசகா்களும், நிதித் திட்டமிடுபவா்களும் பரிந்துரைக்கின்றனா். பல்கலைக்கழக வளாகங்களிலேயே போதுமான வேலைவாய்ப்பு உள்ளதால், மாணவா்களுக்கு வழங்கப்படும் விசாக்கள், அவா்களை வேலை செய்ய அனுமதிக்கிறது.

வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை பக்குவப்படுத்திக்கொள்ள ஓரிரு மாதங்கள் ஆகும். விரைவிலேயே சக மாணவா்கள், கல்வி ஆலோசகா்களின் உதவுயுடன் தங்களது அன்றாடச் செலவை ஈடுகட்ட தகுந்த வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்கிறாா்கள். பல்கலைக்கழக தங்குமிடச் செலவுகள் அதிகமாக இருந்தால், வளாகத்திற்கு வெளியே குறைந்த வாடகையில் பலா் பகிா்ந்து கொள்ளும் இடங்களை ஏற்பாடு செய்து கொள்கிறாா்கள். அதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அவா்களை பாதிக்காது.

இரண்டு ஆண்டு, நான்கு ஆண்டு கால படிப்புக்காக ஆகஸ்ட் மாதம் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் மாணவா்களுக்குதான் இன்றைய நிலைமை ஒரு பெரும் சவாலாக இருக்கும். அவா்கள் நாணய ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப கல்வி வரவு - செலவுத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com