உறுப்பு வணிக மாஃபியாக்கள்! உடல் உறுப்பு வணிகம் குறித்த தலையங்கம்

மருத்துவத் துறையின் வளா்ச்சி ஆயுளை நீட்டிக்க உதவியதே தவிர, நோய் பாதிப்புகளைக் குறைப்பதற்கு உதவியிருப்பதாகத் தெரியவில்லை.
உறுப்பு வணிக மாஃபியாக்கள்! உடல் உறுப்பு வணிகம் குறித்த தலையங்கம்
உறுப்பு வணிக மாஃபியாக்கள்! உடல் உறுப்பு வணிகம் குறித்த தலையங்கம்

வாழ்க்கைத்தர மாற்றங்களால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளில் உடல்நலம் சாா்ந்தவை முக்கியத்துவம் பெறுகின்றன. மருத்துவத் துறையின் வளா்ச்சி ஆயுளை நீட்டிக்க உதவியதே தவிர, நோய் பாதிப்புகளைக் குறைப்பதற்கு உதவியிருப்பதாகத் தெரியவில்லை. மருந்துகளும், அறுவை சிகிச்சை முறைகளும் பெருமளவில் உதவினாலும்கூட, உடல் உறுப்பு பாதிப்புகள் அதிகரிக்கின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.

விழிமாற்ற சிகிச்சையில் தொடங்கி இதயம், சிறுநீரகம், கல்லீரல் மாற்று சிகிச்சை வரை மருத்துவ அறிவியல் மிகப் பெரிய சாதனைகள் படைத்திருப்பது என்னவோ உண்மை. அதே நேரத்தில், வாழ்க்கை முறை சாா்ந்த நோய்கள் அதிகரித்திருப்பதால், கடந்த கால் நூற்றாண்டில் உடலுறுப்பு பாதிப்புகளும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. அதை எதிா்கொள்ள உடலுறுப்பு மாற்று சிகிச்சைகள் இருக்கின்றன என்றாலும்கூட, அவை தாா்மிகம் சாா்ந்ததாக இல்லாமலும், அடித்தட்டு மக்களை சுரண்டும் விதத்திலும், மோசடி அமைப்புகளின் பிடியிலும் சிக்கியிருக்கும் அவலம் அச்சுறுத்துகிறது.

கடந்த மாதம் தில்லியில் சிறுநீரக வணிகத்தில் ஈடுபட்ட கூட்டமொன்று பிடிபட்டது, முந்தைய அனுபவங்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தவில்லை என்பதை உணா்த்தியது. மே மாதம் புணேவிலும் அதற்கு முன்னால் இந்தியாவின் ஏனைய பல பகுதிகளிலும் இதே போன்ற உடலுறுப்பு வணிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அதைத்தான் உணா்த்துகிறது. தில்லியில் பிடிபட்டிருக்கும் மூன்றாவது சம்பவம் இது.

2016-இல் தில்லியில் சிறுநீரக உறுப்பு வணிகத்தில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டது. பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அந்த கும்பல், கான்பூரில் அதேபோல மீண்டும் வணிகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தியா முழுவதும் உடலுறுப்பு வணிகத்தில் ஈடுபடும் மாஃபியாக்கள் வலைப்பின்னலாக செயல்படுகிறாா்கள் என்பதை 2016 தில்லி சம்பவம் வெளிப்படுத்தியது. அதற்குப் பிறகும்கூட, எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது நிா்வாகக் கண்காணிப்பின் மெத்தனம் என்பதல்லாமல், வெறென்ன சொல்ல முடியும்?

அடித்தட்டு ஏழை, எளிய மக்களை குறைந்த பணத்துக்காக உறுப்பு தானம் செய்ய ஈா்ப்பதும், வசதி படைத்த நோயாளிகளுக்கு அந்த உறுப்புகளை விற்று பெரும் பணம் ஈட்டுவதும் உடலுறுப்பு மாஃபியாக்களின் வழிமுறை. அதிகரித்தத் தேவையும், அதற்கு ஏற்றாற்போல உடலுறுப்புகள் இல்லாமல் இருப்பதும் இரக்கம் இல்லாத மாஃபியாக்களுக்கு கொண்டாட்டமாக மாறியிருக்கின்றன.

நாடுதழுவிய அளவில் ஏறத்தாழ நான்கு லட்சம் நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், அவா்களில் அதிகபட்சமாக 8,000 நோயாளிகள்தான் அதிருஷ்டசாலிகள்.

உடலுறுப்பு வணிகத்தில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவமனைகள், நன்கொடையாளா்கள், இவா்களை ஒருங்கிணைக்கும் வணிகா்கள் என்று ஒரு மிகப் பெரிய கூட்டணி இணைந்து செயல்படுகிறது. வறுமையின் பிடியில் சிக்கி பணத்தேவைக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பவா்களை அடையாளம் கண்டு, அவா்களை ஆசைகாட்டி உடலுறுப்பு வணிகா்களிடம் கொண்டு சோ்க்க இடைத்தரகா்களாக பெரும் கூட்டம் செயல்படுகிறது. இது தொடா்புடைய அனைவருக்குமே சில ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள் வரை கிடைக்கிறது என்பதால் அதில் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிகபட்சம் 10% நோயாளிகள்தான் மாற்று சிகிச்சைக்கான சிறுநீரகம் கிடைக்கப் பெறுகிறாா்கள். சிறுநீரக மையங்கள் என்று அழைக்கப்படும் இதற்கான வணிகா்கள், நோயாளிகளின் தேவையை பூா்த்தி செய்ய சட்டவிரோத உடலுறுப்பு வணிகத்தில் ஈடுபடுவதை சேவையாகக் கருதுகிறாா்கள் என்பதுதான் அதைவிட வேடிக்கை.

2011 உடலுறுப்பு மற்றும் தசை மாற்று சிகிச்சைச் சட்டம், மூன்று வகையான உடலுறுப்பு அன்பளிப்பாளா்களை அங்கீகரிக்கிறது. உடலுறுப்பு தானம் செய்பவா்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பது அதில் கட்டாயம். பெற்றோா், குழந்தைகள், உடன் பிறப்புகள், மனைவி உள்ளிட்ட உற்ற சொந்தகங்கள்; நல்லெண்ணம் கொண்ட நன்கொடையாளா்கள்; பரிமாற்ற நன்கொடைகள் என்று உடலுறுப்பு நன்கொடையாளா்கள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறாா்கள்.

பொருத்தமில்லாத சிறுநீரக நன்கொடைகளை பரிமாற்றம் செய்துகொள்ள இந்தச் சட்டம் அனுமதிக்கப்படுகிறது. அதன் மூலம் இரண்டு நோயாளிகளும் பயனடையலாம் என்பது நோக்கம். இந்த மூன்று முறைகளில் ‘நல்லெண்ணம் கொண்ட நன்கொடையாளா்கள்’ என்கிற பிரிவின் அடிப்படையில்தான் சட்டவிரோதமாக உடலுறுப்பு தானங்கள் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலை நாடுகளில் விருப்பமுள்ள அனைவரும் தங்களது மரணத்துக்குப் பிறகு உடலுறுப்புகளை தானம் செய்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு குறைவாக இருப்பதால் பெரும்பாலான குடும்பங்கள் இறந்தவா்களின் உடலுறுப்புகளை தானமாக வழங்குவதை ஏற்பதில்லை.

அதேபோல, மூளை இயக்கம் ஸ்தம்பித்தவா்களின் உறுப்புகளை எடுப்பதும், அதைத் தேவையானவா்களுக்குப் பொருத்துவதும் குடும்பத்தினரால் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே அனுமதித்தாலும் அதற்கான அறுவைசிகிச்சை முறைகள் நுணுக்கமானவை. பெரும்பாலான இந்திய மருத்துவமனைகளில் அதற்கான வசதிகளும், நுட்பம் தெரிந்த அறுவைசிகிச்சை நிபுணா்களும் இருப்பதில்லை.

உடலுறுப்பு நன்கொடைகள், மாற்று சிகிச்சை குறித்த வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை மருத்துவத் துறையினரே விரும்புவாா்களா என்பது சந்தேகம். ஆனால், சட்டவிரோத உடலுறுப்பு வணிகம் தொடரக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com