கோப்புப் படம்.
கோப்புப் படம்.

என்கவுன்ட்டர் ஏற்புடையதல்ல!|ஹைதராபாத் சம்பவ விசாரணை அறிக்கை குறித்த தலையங்கம்

 தில்லி நிர்பயா சம்பவத்தைப் போல, ஹைதராபாத் சம்பவமும் எளிதில் மக்களின் நினைவில் இருந்து மறைந்துவிடக் கூடியதல்ல. நாடுதழுவிய அளவில் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட அந்த நிகழ்வு மிகப் பெரிய பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
 சம்பவம் நடந்த அடுத்த நாளே (2019 நவம்பர் 29) ஹைதராபாத் காவல்துறை ஆணையர், அந்தப் பாலியல் வன்கொடுமை மரணத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். அவர்கள் 13 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். டிசம்பர் 6-ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் சம்பவம் நடந்த சத்தன்பள்ளி மேம்பாலத்துக்குக் கீழே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது என்கவுன்ட்டரில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 தங்களை அழைத்துச் சென்ற காவல்துறையினரின் ஆயுதங்களை வலுக்கட்டாயமாகப் பறிந்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டபோது அந்த நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. உடனடி நியாயம் வழங்கியதற்காக, மக்கள் மத்தியிலும் பெண்ணியவாதிகள் மத்தியிலும் காவல்துறையினருக்கு கைத்தட்டல்களும் பாராட்டுதல்களும் கிடைத்தன. அதே நேரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த விரும்பும் நடுநிலையாளர்களும் காவல்துறையினரின் அதிகார அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பினர்.
 உச்சநீதிமன்றம் அந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி டி.எஸ். திர்புர்கர் தலைமையில் நீதிபதி ரேகா பி சொந்தூர் பல்டோட்டா, முன்னாள் சிபிஐ இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் அடங்கிய குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணை ஆணையம் இப்போது தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் காவல்துறைக்குக் கிடையாது என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறது, ஹைதராபாத் என்கவுன்ட்டர் வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை.
 சத்தன்பள்ளி சம்பவத்தில் சிறைச்சாலையில் இருந்து விசாரணை கைதிகளை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று என்கவுன்ட்டர் நடத்தியது வரை அனைத்துமே ஜோடிக்கப்பட்ட நாடகம் என்கிறது அந்த அறிக்கை. காவல்துறையினரிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து கைதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது இயலாது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது அறிக்கை. மக்கள் மத்தியில் காணப்பட்ட கொந்தளிப்பை அடக்குவதற்காக காவல்துறையினரால் நடத்தப்பட்ட நாடகம்தான் அந்த என்கவுன்ட்டர் என்பதை தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது அறிக்கை.
 துப்பாக்கிச் சூட்டில் கைதிகள் கொல்லப்படுவார்கள் என்பது தெரிந்தே அவர்கள் மீது காவல்துறையினர் என்கவுன்ட்டர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்று குறிப்பிடுவதுடன் நின்றுவிடவில்லை அறிக்கை. அந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் தொடர்புடைய 10 காவல்துறை அதிகாரிகள் மீதும் தடயங்களை அழிக்க முற்பட்டதற்காகவும், கொலைக் குற்றத்துக்காகவும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. சட்டத்துக்கு விரோதமாக எந்தவித ஆவணங்களையும் பரிசீலிக்காமல், சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் பார்க்காமல் அவர்களின் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்ட நீதிபதியும் அந்த விசாரணை ஆணையத்தின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
 இதுபோன்ற சம்பவங்களில் எல்லா புள்ளிகளையும் இணைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது ஓரிரு நாள்களில் நடக்கக் கூடியது அல்ல. பொதுமக்கள் மத்தியில் பாலியல் சம்பவங்கள், கொலைகள் ஏற்படுத்தும் பரபரப்பும் ஆத்திரமும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவது இயல்பு. அவர்கள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பதும், யாராவது குற்றவாளிகளை அடையாளப்படுத்தி பொதுமக்களின் ஆத்திரத்தைக் குறைத்து கவனச் சிதறலை ஏற்படுத்துவதும் காவல்துறை கையாளும் வழக்கமான அணுகுமுறை.
 2017 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரையில் இதுவரை 655 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான என்கவுன்ட்டர் வழக்குகளில் அரசியல் தலைமையையும், காவல்துறை உயரதிகாரிகளையும் விசாரிப்பதோ குற்றப்படுத்தப்படுவதோ இல்லை. மேலிட உத்தரவை வேறுவழியில்லாமல் நடைமுறைப்படுத்தும் காவலர்களும், ஆய்வாளர்களும்தான் தண்டிக்கப்படுகிறார்கள். உயரதிகாரிகளும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆட்சியாளர்களும் என்கவுன்ட்டர் மரணங்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்யாத வரை இது தொடரும்.
 ஹைதராபாத் சம்பவத்தையே எடுத்துக்கொண்டால் அந்த நான்கு பேர்தான் உண்மையான குற்றவாளிகளா என்பது நிரூபிக்கப்படவில்லை. நீதித்துறையால் கொலையாளிகளும் பாலியல் கொடுமை செய்பவர்களும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்கிற மக்கள் மன்றத்தின் பரவலான அபிப்பிராயம்தான் இதுபோன்ற சம்பவங்களை நியாயப்படுத்துகின்றன.
 2020 தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, பாலியல் வன்கொடுமை மரணங்கள் தொடர்பான 48.8% வழக்குகள் காவல்துறையினரின் விசாரணையிலும், 96.9% வழக்குகள் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன. விசாரணையில் ஏற்படும் காலதாமதம்தான் காவல்துறையினர் நீதிபரிபாலணத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை நியாயப்படுத்துகிறது.
 தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திடம்தான் இருக்க வேண்டும்; காவல்துறையிடம் அல்ல. அதை ஹைதராபாத் சம்பவ விசாரணை அறிக்கை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com