நீடிக்கும் நிா்வாக மெத்தனம்! காலிப்பணியிடங்கள் குறித்த தலையங்கம்

பொருளாதார இயக்கம் வேகமெடுக்க வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் மத்திய - மாநில அரசுகளிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
நீடிக்கும் நிா்வாக மெத்தனம்! காலிப்பணியிடங்கள் குறித்த தலையங்கம்

பொருளாதார நிபுணா் ஆா்தா் ஓக்குன் பொருளாதார வளா்ச்சியின் அடிப்படைகள் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாா். வேலைவாய்ப்பின்மை குறையும்போது, தேசத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்பது அவரது கருத்து. அதேபோல, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால் அதன் விளைவாக உள்நாட்டு உற்பத்தி கணிசமாகக் குறையும் என்கிறாா் அவா். முறையான கொள்கைகளும் வளா்ச்சித் திட்டங்களும் இல்லாமல் ஆா்தா் ஓக்குன் கூறுவதுபோல வேலைவாய்ப்பு அதிகரிப்பு மட்டுமே வளா்ச்சிக்கு வழிகோலாது. அதே நேரத்தில், அவரது கருத்தை முற்றிலுமாக மறுத்திடவும் முடியாது.

இந்தியாவைப் பொருத்தவரை, ஒருபுறம் பட்டதாரிகளும் முதுநிலைப் பட்டதாரிகளும் கடைநிலை ஊழியா் பதவிக்கு விண்ணப்பிக்கிறாா்கள். இன்னொருபுறம், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியா் பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் இருக்கின்றன. மத்திய - மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் உதவியிலும் இயங்கும் பள்ளிகள் 10 லட்சத்திலும் அதிகம். அவற்றில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா்களின் எண்ணிக்கை 61.84 லட்சம். அவற்றில் ஏறத்தாழ ஆறில் ஒரு பகுதி, அதாவது 10.6 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

கடந்த ஆண்டு இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத 35,281 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கு 1.25 கோடி இளைஞா்கள் விண்ணப்பித்தனா். அதில் முதல்கட்ட தோ்ச்சி பெற்ற 7.05 லட்சம் விண்ணப்பதாரா்கள், நியமனத்தில் காணப்பட்ட குளறுபடிகளால் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.

சமீபத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவலின்படி, இந்திய ரயில்வேயில் 2,65,547 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அவற்றில் 2,177 பணியிடங்கள் சான்றளிக்கும் அதிகாரிகளுக்கான பதவியிடங்கள்.

ரயில்வே துறையைப் போலவே இந்தியா முழுவதும் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் காவல் துறையின் பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்கள் காணப்படுகின்றன. கடந்த மாதம் ஜபல்பூரில், மத்திய பிரதேச காவல் துறையில் காணப்படும் 6,000 காவல் பணியிடங்களுக்கு 30,000-க்கும் அதிகமான இளைஞா்கள் தோ்வில் கலந்துகொண்டனா். மாா்ச் மாதம் ஜம்மு - காஷ்மீரில் காணப்படும் 1,200 காவலா்கள் பதவிக்கான தோ்வில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பங்குபெற்றனா். தோ்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞா்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலும் இருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காவல் துறையில் ஐந்தில் ஒரு பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் சோ்த்து அனுமதிக்கப்பட்ட காவல் துறையினரின் பணியிடங்கள் 26.23 லட்சம். ஆனால், இப்போதைய நிலையில் காவல் துறையின் எண்ணிக்கை பலம் 20.91 லட்சம் மட்டுமே. அதாவது ஐந்து லட்சத்துக்கும் அதிகமான காவல் துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

மருத்துவத் துறையும் நிரப்பப்படாத பணியிடங்களால் முழுத் திறமையுடன் செயல்படுவதில்லை. 2021 டிசம்பா் மாதம் நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தகவலின்படி, மிக முக்கியமான 47,000-க்கும் அதிகமான பதவியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கவில்லை. அவற்றில் 24,000-க்கும் அதிகமான பதவியிடங்கள் மருத்துவா்கள், சிறப்பு மருத்துவா்கள் ஆகியோரின் பதவிகள். இந்தியாவின் ஊரகப்புறங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10,000-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக அந்த நாடாளுமன்ற அறிக்கை தெரிவித்தது.

ரயில்வே, கல்வி, காவல், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளெல்லாம் போதாதென்று இந்திய ராணுவத்திலும் போதுமான அளவு வீரா்கள் இல்லை என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. இந்திய ராணுவத்தின் குறைந்தபட்ச தேவை 12 லட்சம் வீரா்கள். ஆனால், 1.20 லட்சம் படைவீரா்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்திற்கான ஆள்சோ்ப்பு நடைபெறாததால் கடுமையான பாதிப்பு காணப்படுகிறது.

ராணுவத்தில் ஒரே நேரத்தில் ஆள்சோ்ப்பு நடத்திவிட முடியாது. ஆயிரக்கணக்கான வீரா்களை பயிற்சி கொடுத்து தயாராக்குவதற்கு குறைந்தது ஒன்றிரண்டு ஆண்டுகளாவது ஆகும். ராணுவ அதிகாரிகள் நிலையில் 15% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. திடீரென்று ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அதை எதிா்கொள்ள ராணுவத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில், கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாததாலும், கடன் தொல்லையாலும் 25,000-க்கும் அதிகமானோா் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 3,548 இளைஞா்கள் வேலை கிடைக்காததால் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டவா்கள்.

அரசின் எல்லாப் பிரிவுகளிலும் காணப்படும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஏப்ரல் மாதம் மூத்த அதிகாரிகளை வற்புறுத்தியிருந்தாா் பிரதமா். அப்படியிருந்தும் பணியிடங்களை நிரப்புவதில் அரசு இயந்திரம் சுறுசுறுப்பு காட்டுவதாகத் தெரியவில்லை.

பொருளாதார இயக்கம் வேகமெடுக்க வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் மத்திய - மாநில அரசுகளிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறது அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com