இடைத்தேர்தல் முடிவுகள்| சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்!

இடைத்தேர்தல் முடிவுகள்| சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்!

 இடைத்தேர்தல் வெற்றி தோல்விகள் ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலாது என்றாலும்கூட, அவற்றின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுவதற்கு பண பலமும், அதிகார துஷ்பிரயோகமும்தான் காரணம் என்று அறுதியிட்டுக் கூறிவிடவும் முடியாது. மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த இடைத்தேர்தலைக் கருவியாக பயன்படுத்திய நிகழ்வுகளும் ஏராளம் உண்டு.

 சமீபத்தில் இந்தியாவின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நடந்த சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்களின் முடிவுகள், ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்படுகிறது. வடஇந்தியாவிலுள்ள உத்தரகண்டிலும், இந்தியாவின் கிழக்குப் பகுதியான ஒடிஸாவிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவின் தென்கோடியிலுள்ள கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணியைத் தோற்கடித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. மூன்று வெற்றிகளும் வெவ்வேறான செய்திகளை வழங்குகின்றன.
 உத்தரகண்டின் சம்பாவத் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி 55,025 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். உத்தரகண்ட் வாக்காளர்கள் இதற்கு முன்பும் "இடைத்தேர்தலில்' போட்டியிட்ட எந்தவொரு முதல்வரையும் தோற்கடித்ததில்லை. இந்த முறை முதல்வர் தாமி பெற்ற வெற்றி முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், இதற்கு முன்னால் எந்தவொரு முதல்வரும் சாதிக்க முடியாத வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது.
 கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. ஆனால், கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். அப்படியிருந்தும் அவரே மீண்டும் முதல்வராக்கப்பட்டபோது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல அமைந்திருக்கிறது இப்போதைய சம்பாவத் இடைத்தேர்தலில் அவர் பெற்றிருக்கும் வெற்றி.
 ஒடிஸாவின் பிரஜ்ராஜ்நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து ஆளும் பிஜு ஜனதா தள வேட்பாளர் அலகா மோஹந்தி 66,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல் இது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்திருப்பது மட்டுமல்லாமல், பாஜக வேட்பாளரை மூன்றாவது இடத்திற்கு தள்ளியிருக்கிறார் அலகா மோஹந்தி. வேடிக்கை என்னவென்றால், இடைத்தேர்தல் நடைபெற்ற பிரஜ்ராஜ்நகர் சட்டப்பேரவைத் தொகுதி, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பர்கர் தொகுதிக்கு உட்பட்டது.
 பிரஜ்ராஜ்நகர் இடைத்தேர்தல் வெற்றி முதல்வர் நவீன் பட்நாயக்கின் கரங்களை மேலும் வலுப்படுத்தி அவரது அசைக்க முடியாத தலைமைக்கு வலுசேர்த்திருக்கிறது. இந்த வெற்றிக்காகவே காத்திருந்தது போல, அனைத்து அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்லி தனது அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார் முதல்வர் நவீன்.
 எதிர்க்கட்சிகளான காங்கிரஸாலும் பாஜகவாலும் அசைக்க முடியாத வலிமையுடன் திகழ்கிறது ஒடிஸாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம். இதே நிலைமை தொடருமானால், 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, சுதந்திர இந்திய வரலாற்றில் மிக அதிகமான ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முதல்வர் என்கிற சாதனைக்குரியவராக நவீன் பட்நாயக் உயரக்கூடும்.
 ஏனைய இரண்டு சட்டப்பேரவை இடைத்தேர்தல்களையும்விட கெளரவப் பிரச்னையாகவும் முக்கியத்துவத்துடனும் பார்க்கப்பட்டது கேரளத்தின் திருக்காக்கரை தொகுதிக்கான இடைத்தேர்தல். கேரள சட்டப்பேரவையின் 140 தொகுதிகளில் ஒன்றுதான் திருக்காக்கரை என்றாலும்கூட, மாநில அளவில் திருக்காக்கரை இடைத்தேர்தல் பரபரப்பை அதிகரித்தது. காங்கிரஸ் உறுப்பினரும் முக்கியமான தலைவருமான பி.டி. தாமஸின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற திருக்காக்கரை இடைத்தேர்தலில் அவரது மனைவி உமா தாமஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யு.டி.எஃப்.), மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணியும் (எல்.டி.எஃப்.) இடைத்தேர்தல் வெற்றியை கெளரவப் பிரச்னையாக்கிக் களமிறங்கின. பல்வேறு மாநிலத்தவர்களும், கேரளத்தின் பல பகுதியில் இருந்து குடியேறியவர்களும் வசிக்கும் திருக்காக்கரை சட்டப்பேரவைத் தொகுதி, தொழிற்சாலைகளும், பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்விச்சாலைகளும் நிறைந்த பகுதி. அதனால்தான் இடைத்தேர்தல் இந்த அளவு முக்கியத்துவம் பெற்றது.
 இரண்டு முன்னணியைச் சேர்ந்த மாநிலத் தலைவர்கள், முன்னாள் இன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் என்று இருதரப்பு பிரமுகர்களும் திருக்காக்கரையில் குவிந்தனர். வீடு வீடாக ஏறி இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியலில் 3,633 பேர் அதிகரித்தும்கூட, 2021 தேர்தலைவிட 1,228 வாக்குகள் குறைவாக பதிவானபோது தேர்தல் முடிவு குறித்த அச்சம் இருதரப்பினருக்கும் எழுந்தது.
 அப்படியிருந்தும்கூட திருக்காக்கரையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உமா தாமஸ் வெற்றி பெற்றிருக்கிறார். கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு பெண் உறுப்பினரே இல்லை என்கிற குறை, உமாவின் வெற்றியால் அகற்றப்பட்டிருக்கிறது.
 தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, திருக்காக்கரை இடைத்தேர்தல் முடிவு ஆறுதல் அளிக்கக்கூடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com