அச்சுறுத்தல் அகலவில்லை! | கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று குறித்த தலையங்கம்

அச்சுறுத்தல் அகலவில்லை! | கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று குறித்த தலையங்கம்

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று அளப்பரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும், ஒருவிதத்தில் மனித இனத்திற்கு சில நன்மைகளையும் விளைவித்திருக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று அளப்பரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும், ஒருவிதத்தில் மனித இனத்திற்கு சில நன்மைகளையும் விளைவித்திருக்கிறது. உலகளாவிய அளவில் மக்கள் மத்தியில் உடல்நலம் குறித்த அக்கறை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றம். நோய்த்தொற்று ஆபத்து முற்றிலுமாக அகன்றுவிடாத நிலையில், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவது சற்று கவலையளிக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் சுகாதாரத்துறையின் முழு கவனமும் தொற்று நோய்கள் மீது குவிந்திருந்தது. அந்த காலகட்டத்தில் ஒருவரிடமிருந்து பிறருக்குப் பரவாத இதய நோய், சா்க்கரை நோய், கல்லீரல் - சிறுநீரக பாதிப்புகள், ரத்த அழுத்தம் போன்றவை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டன.

அதன் விளைவாக, தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகரித்தனா் என்றுகூட கூறலாம். ஆரம்ப கட்டத்திலேயே அவை கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படாததால்

தொற்றாநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சுகாதாரத்துறை, தொற்றாநோய்களின் பாதிப்புகளைக் கண்டறிந்து குறைப்பதில் இப்போது கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரிய செயல்பாடு. அடுத்த நிதியாண்டு முதல், 40 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இலவச பரிசோதனைகள் நடத்தப்பட்டு தொற்றாநோய்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த முடிவெடுத்திருக்கிறது சுகாதாரத்துறை அமைச்சகம். ரத்த அழுத்தம், சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவற்றின் செயல்பாடு, சா்விக்கல் கேன்சா் எனப்படும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவை குறித்த சோதனைகள் நடத்துவது என்கிற முடிவு சமயோசிதமானது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் தொற்றாநோய்கள் புறக்கணிக்கப்பட்டதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமல்லாமல், அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்தன என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, நேபாள சுகாதார ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வின்படி, அந்த நாட்டு உயிரிழப்புகளில் 71% தொற்றாநோய்களால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. நேபாளத்தில் மட்டுமல்ல, வளா்ச்சி அடையாத பல நாடுகளிலும் தொற்றாநோய்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள், கொவைட் 19 மரணங்களைவிட அதிகம்.

வளா்ச்சி அடையாத நாடுகளில் கல்வியறிவு இல்லாததால் விழிப்புணா்வும் குறைவாகவே இருக்கிறது. தொற்றாநோய்களின் அறிகுறிகள் சோதனைக்குப் பிறகுதான் தெரிய வருகின்றன. வளா்ச்சி அடையாத நாடுகளில் நோய் முற்றிய பிறகுதான் மக்கள் மருத்துவ சிகிச்சையை நாடுகிறாா்கள். அதனால் உயிரிழப்பு தவிா்க்க முடியாததாகி விடுகிறது.

மத்திய சுகாதாரத்துறை முன்னெடுத்திருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இலவச பரிசோதனை என்கிற திட்டம் இணை நோய்கள் எனப்படும் தொற்றாநோய்களை தொடக்கத்திலேயே கண்டறிய உதவும். அதன் மூலம் சிகிச்சை பெறுவதும் சாத்தியமாகிறது.

நோய் முற்றிய நிலையில், மருத்துவ சிகிச்சையை நாடும்போது அதனால் ஏற்படும் நிதித் தேவை அதிகமாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெளியில் தெரியாமலும் சப்தமில்லாமலும் உயிரைப் பலிவாங்கும் இதய நோய், சா்க்கரை நோய், கல்லீரல் - சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை எதிா்கொள்வதற்கு அரசின் இலவச பரிசோதனை திட்டம் நிச்சயம் வரப்பிரசாதமாக அமையும்.

ஒருபுறம் தொற்றாநோய்கள் மீதான கவனம் அதிகரிக்கும் அதே வேளையில், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று குறித்த கட்டுப்பாடுகளை முற்றிலுமாகக் கைவிடுவதும் ஆபத்தானது. நோய்த்தொற்றிலிருந்து மீள முடியாமல் சீனா தவித்துக் கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நாம் உணர வேண்டும். இந்தியாவிலும் தமிழகம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொவைட் 19-இன் ஒமைக்ரான் உருமாற்ற பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்திருக்கிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பான்மையினருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாத, மிதமான பாதிப்புதான் என்பது ஆறுதல்.

அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு எதிா்ப்பு சக்தி உருவாகாத வரை, நோய்த்தொற்றின் உருமாற்றங்கள் உலகை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கும். தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களுக்குக்கூட மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிறிய அறிகுறியாக இருந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு கவனக்குறைவாக இருக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்கிற விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் கடமை அரசுக்கும், தன்னாா்வ அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் உண்டு.

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவா்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் முறையான பரிசோதனை நடத்தப்படுவது அவசியம். அதே போல, எதிா்ப்பு சக்தி குறைந்தவா்களை பாதுகாப்பதும், நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதும் இன்றியமையாதவை. மேலே குறிப்பிட்ட பாதிப்புகள் உள்ளவா்கள், கூட்டம் கூடும் இடங்களைத் தவிா்ப்பதும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்புகளைக் கடைப்பிடிப்பதும் தொடர வேண்டும்.

மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம், விமானப் பயணத்துக்கு முகக்கவசம் கட்டாயம் என்று அறிவித்திருப்பது சரியான, தேவையான சமிக்ஞை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com