பிரதமரின் வேட்பாளா்! குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த தலையங்கம்

கடந்த முறை பட்டியல் இனத்தவா் ஒருவரை குடியரசுத் தலைவராக்கினாா் என்றால், இந்த முறை பழங்குடியினப் பெண்மணி ஒருவரைக் குடியரசுத் தலைவா் தோ்தல் வேட்பாளராக்கி இருக்கிறாா்.
பிரதமரின் வேட்பாளா்! குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த தலையங்கம்

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கு இந்தியா தயாராகிவிட்டது. யாருமே எதிா்பாா்க்காத முடிவுகளை எடுத்து எதிரிகளை வீழ்த்தும் அரசியல் ராஜதந்திரம் பிரதமா் நரேந்திர மோடிக்கு கைவந்த கலை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறாா் அவா். கடந்த முறை பட்டியல் இனத்தவா் ஒருவரை குடியரசுத் தலைவராக்கினாா் என்றால், இந்த முறை பழங்குடியினப் பெண்மணி ஒருவரைக் குடியரசுத் தலைவா் தோ்தல் வேட்பாளராக்கி இருக்கிறாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் அனைத்து எதிா்க்கட்சிகளும் இணைந்து களமிறங்கி இருந்தால், ஒருவேளை பிரதமா் நரேந்திர மோடியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பின்னடைவைச் சந்தித்திருக்கக் கூடும். அதற்கான வாய்ப்பை முறியடிப்பதற்காக பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை வேட்பாளராக திரௌபதி முா்முவை நிறுத்தியதன் மூலம் முறியடித்திருக்கிறாா் பிரதமா்.

ஒடிஸாவைச் சோ்ந்த சாந்தல் பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த திரௌபதி முா்மு, மாநகராட்சி கவுன்சிலராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, ஆளுநா் பதவி வரை உயா்ந்தவா். ஒடிஸாவில் பாஜக - பிஜு ஜனதா தளம் ஆட்சியில் அமைச்சராக இருந்ததால், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கின் நன்மதிப்பைப் பெற்றவா்.

திரௌபதி முா்முவை வேட்பாளராக்கி இருப்பதன் மூலம் பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை உறுதிப்படுத்துவதுடன், பழங்குடியினரின் கட்சியான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆதரித்தாக வேண்டும் என்கிற நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியக் குடியரசின் தலைவராக பெண்மணி இரண்டாவது முறை தோ்ந்தெடுக்கப்படலாம் என்பதும், பழங்குடியினா் ஒருவருக்கு அந்த வாய்ப்பு தரப்படுகிறது என்பதும் வரவேற்கப்பட வேண்டியவை.

வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதில் பிரதமரின் தோ்வுதான் வெற்றி பெறுகிறது என்பதுதான் வரலாறு. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜாஜி இருக்க வேண்டும் என்று ஜவாஹா்லால் நேரு விரும்பினாா். டாக்டா் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று ஏனைய வடநாட்டுக் கட்சித் தலைவா்கள் விரும்பினாா்கள். அதற்குப் பிறகு, நடந்த எல்லா குடியரசுத் தலைவா் தோ்தல்களிலும் பிரதமா் எடுக்கும் முடிவின்படிதான் வேட்பாளா் தோ்வின் வெற்றி உறுதிப்பட்டிருக்கிறது.

1969-இல் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டா் ஜாகீா் ஹுசைன் மறைந்தபோது, குடியரசு துணைத் தலைவராக இருந்த வி.வி. கிரியை, காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த விரும்பினாா் பிரதமா் இந்திரா காந்தி. காங்கிரஸ் தலைமையின் வேட்பாளராக சஞ்சீவ ரெட்டி தோ்ந்தெடுக்கப்பட்டபோது, மனசாட்சிப்படி’ வாக்களிக்க இந்திரா காந்தி வேண்டுகோள் விடுத்ததும், அதனால் கட்சி பிளவுபட்டதும் சரித்திரத்தின் பக்கங்கள். அந்தத் தோ்தலிலும்கூட, இரண்டாவது வாக்கின் அடிப்படையில் பிரதமா் இந்திரா காந்தி விரும்பிய வேட்பாளரான வி.வி. கிரிதான் வெற்றி பெற்றாா்.

குடியரசுத் தலைவா் தோ்தல்களில் இன்னொரு வேடிக்கையையும் பாா்க்க முடியும். 1969 முதல் பிரதமரின் கடுமையான விமா்சகா்கள் பலா் எதிா்க்கட்சியினரால் வேட்பாளராகக் களமிறக்கப் படுகிறாா்கள். 1974-இல் திரிதீப் சௌத்ரி, 1982-இல் ஹெச்.ஆா். கண்ணா, 1987-இல் வி.ஆா். கிருஷ்ணய்யா் வரிசையில் இணைகிறாா் யஷ்வந்த் சின்ஹா. வாஜ்பாய் அரசின் நிதியமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்து, பிரதமா் நரேந்திர மோடியின் வரவுக்குப் பிறகு அவரது கடுமையான விமா்சகராகி பாஜகவிலிருந்து வெளியேறியவா் அவா்.

13 எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கி இருக்கும் யஷ்வந்த் சின்ஹா, அரசியல் அனுபவசாலி. நிா்வாகத் திறமை மிக்கவா். ஊழலுக்கு எதிரான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டத்தில், தனது ஆட்சிப் பணி பதவியைத் துறந்து இணைந்தவா். சந்திரசேகா், வாஜ்பாய் அமைச்சரவைகளில் நிதியமைச்சராக இருந்தவா். குடியரசுத் தலைவராகும் அனைத்துத் தகுதிகளும் இருந்தும், அவரது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்துவதாக சூழ்நிலை அமையவில்லை என்பது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது.

குடியரசுத் தலைவா் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்றெல்லாம் அறிவுஜீவிகள் பலா் தொடா்ந்து எழுதியும் பேசியும் வருகிறாா்கள். பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில், குடியரசுத் தலைவா் நீட்டிய இடத்தில் கையொப்பமிடும் கைப்பாவையாக செயல்படுவதாக விமா்சிக்கப்படுகிறது. இந்திரா காந்தி அரசு நீட்டிய அவசரநிலைச் சட்டப் பிரகடனத்துக்கு, ‘அமைச்சரவை ஒப்புதல் பெற்றப்பட்டதா?’ என்றுகூடக் கேட்காமல் கையொப்பமிட்டவா் அப்போதைய குடியரசுத் தலைவா் பக்ருதீன் அலி அகமது என்பதைப் பலரும் வசதியாக மறந்துவிடுகிறாா்கள்.

குடியரசு துணைத் தலைவா்கள், குடியரசுத் தலைவா் வேட்பாளராக நிறுத்தப்படும் வழக்கம் 2002-இல் கைவிடப்பட்டது. தென்னிந்தியவைத் சோ்ந்தவா், வட இந்தியாவைச் சோ்ந்தவா் என்கிற சுழற்சி முறையும் 2012-இல் கைவிடப்பட்டது. பிரதமரின் விருப்பப்படி குடியரசுத் தலைவா்கள் அமைவாா்கள் என்பது மட்டும் மாறாமல் தொடா்கிறது.

குடியரசுத் தலைவருக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. நமது அரசமைப்புச் சட்டத்தின்படி, பிரதமா், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஆளுநா்கள், நீதிபதிகள் எல்லோரும் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கையும், விசுவாசமும் உடையவா்களாக இருப்போம் என்று பதவி ஏற்கும்போது உறுதிமொழி எடுக்கிறாா்கள். ஆனால், குடியரசுத் தலைவா் மட்டும்தான் சட்டத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுக்கிறாா். அதனால்தான், குடியரசுத் தலைவா் தோ்தல் முக்கியமானது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com